20

20

நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும் -தயாசிறி ஜயசேகர

parliament.jpgபடையினர் வெற்றிகளைக் குவித்து வருகின்ற இவ்வேளையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.

கருணா அணியினர் 2,000 பேரோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஆயுதங்களோடு திரிகின்றனர். இந்த வகையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தற்கொலைப் படையினர் உள்ளனர். தெற்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை இதனுடன் தொடர்புபடுத்தி சந்தேகப்பட வேண்டியுள்ளது.

நாளையே புலிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் சிறந்த அமைச்சுப் பதவியொன்று பிரபாகரனுக்கு வழங்கப்படும். ஆயுதத் தாங்கியுள்ளமை ஒரு பிரச்சினை இல்லை.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென கூறும் அரசாங்கம் கருணா, பிள்ளையான், பிரபாகரன் என சகலரும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அரசாங்கம் சகலருக்கும் ஒரே விதமான சட்டங்களைப் பிரயோகிக்க வேண்டும். தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜே. வி. பி. யும் கருணாவும் இப்போது அரசாங்கத்திற்குள் உள்ளனர். கருணாவையும் விமல் வீரவன்சவையும், அருகில் வைத்துக் கொண்டே தலதா மாளிகை மீதான தாக்குதல் பற்றி அரசாங்கம் பேசுகிறது.

பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் விவாதித்துப் பேசும் போதே தயாசிறி ஜயசேகர (ஐ.தே.க. எம்.பி) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் ஐ. தே. க. உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை.- அனுர பிரியதர்ஷன யாப்பா

anura-piriyadarshana-yappa.jpgசிலர் வெளிநாடுகளில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு இலங்கையை பற்றித் தவறான தகவல்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இங்குள்ள சிலரும் துணை போவதற்கு ஏற்றால் போல் தவறான தகவல்களையும் வழங்கி வருகிறார்கள்.

இலங்கையில் மிகவும் ஒழுக்க சீலமான முப்படையினர் இருக்கிறார்கள். முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் குறைவின்றி அனுப்பப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் தகவலின்படி 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மக்களுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் சேர்த்துத்தான் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

இன்று மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு ஒய்வூதியம் வழங்கல் விதவைகள் ஓய்வூதிய வழங்கல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மிக முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் ஐ. தே. க. உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை. ஐ. தே. க.வினருக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கான தார்மீக பொறுப்பும் இருக்கிறது. இதனையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன்.

பாதுகாப்பு படையினரும் தொண்டர் படையினரும் களமுனையில் ஒரே கடமையைத்தான் செய்கிறார்கள் -கலாநிதி சரத் அனுமுகம

dr-sarath-amunugama.jpgபாதுகாப்பு படைக்கு நிரந்தரமாகவோ, தொண்டர் அடிப்படையிலோ ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் களமுளையில் இருவரும் ஒரே கடமையைத்தான் செய்கிறார்கள். எனவே தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் விதவைகள், அனாதைகளுக்கான ஒய்வூதியக் கொடுப்பனவுக்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து பேசும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையில் நிரந்தர சேவைக்கு உள்வாங்கப் பட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் போரில் மரணமானால் அவர்களது மனைவிக்கு, கணவனுக்கு, குழந்தைக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் தொண்டர் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஓய்வூதியம் இருக்கின்ற போதும் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை.

தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒருவர் இன்றைய பயங்கரவாத பிரச்சினையின் காரணமாக தொடர்ந்தும் சேவையில் ஈடுபட வேண்டியுள்ளது. களமுனையிலும் அவர் அல்லது அவள் கடமை புரிய வேண்டியுள்ளது. தொண்டர் அடிப்படை என்றும் நிரந்தர சேவை என்றும் ஏட்டில் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர களமுனையில் இருவரும் சமமானவர்களே. இருவரும் ஒரே வகையில் தான் களமுளையில் இருக்கிறார்கள். எனவே விதவைகள் ஓய்வூதிய விடயத்தில் மட்டும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.

எனவே, தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய படைத் தரப்பு ஒருவரின் மனைவி, கணவன், குழந்தைகளும் ஓய்வூதியம் பெறும் வகையிலேயே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கிழக்கு இளைஞர் அபிவிருத்திக்கு 48 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் முரளிதரனிடம் பவித்திரா உறுதி

pavitra.jpgகிழக்கு மாகாணத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கென 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் குழுவொன்று அமைச்சர் முரளிதரன் தலைமையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை சந்தித்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடம் மீட்கப்பட்டதன் பின்னர் ஆயுதமேந்தி போராடிய கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதிலிருந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி, சிங்கள, ஆங்கில மொழி பயிற்சி, நூலக வசதிகள், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைத்தல், கணனி பயிற்சி, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கடன் வழங்குதல், உயர்கல்வி முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மற்றும் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்த இளைஞர் யுவதிகளின் மனோ நிலையை சரியான வழிக்கு இட்டுச் செல்வதற்கான ஆலோசனைகள் வழங்கும் சேவைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் முரளிதரனுக்கும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டது. இதன் பிரதிபலனாகவே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்காக வழங்குவதாக உறுதியளித்தார்.

நாட்டு மக்களின் உயாந்த கௌரவம் படை வீராகளுக்கே – பாதுகாப்பு அமைச்சு செயலாளர்

defence-sec.jpgதாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் படை வீரர்களுக்கு நாட்டு மக்களின் உயர்ந்த கௌரவம் உரித்தாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல், போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாற் படை றெஜிமன்ட் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ. எனும் பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற கருத்து முன்னர் நிலவியது. எல்.ரீ.ரீ.ஈ.யினரிடமுள்ள ஆட்பலம் மற்றும் ஆயுத பலம் என்பவை தொடர்பாக இராணுவ புலனாய்வுகள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்பே அவர்களுடன் போராடுவதற்கு நாம் முடிவு செய்தோம். இத்தாக்குதலுக்கு நாம் திட்டங்களை வகுத்ததபோது சில தியாகங்களை செய்ய வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தோம். எனினும் இத்தியாகங்கள் மூலம் கிடைக்கும் பலாபலன்கள் எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள எமது படை வீரர்களின் பெயர்களை எதிர்காலத்தில் வரலாறுகள் நினைவு கூறும். நாட்டுக்காக உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரது பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி உறுதிபூன்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

புதுமாத்தளன் பகுதிக்கு 1265 மெற்றிக்தொன் உணவு 52 வகையான மருந்துகள் அனுப்புவைப்பு – அமைச்சர் சமரசிங்க

mahinda-samarasinha.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கென 1265 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களும், 52 வகையான மருந்துப் பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்க ளுக்கோ மருந்து வகைகளுக்கோ எவ்விதத் தட்டுப்பாடுகளும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் அவ்வாறு தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் மஹிந்த சமர சிங்க தலைமையில் நடை பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில், வெளி விவகார அமைச்சின் செய லாளர் கலாநிதி பாலித கொஹன மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக் கார மற்றும் சுகாதார அமைச்சின் (மருந்து விநி யோகம்) பிரதிப் பணிப் பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

முல்லைத்தீவில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கென கடந்த மூன்று வாரங்களுக்குள் 1265 மெற்றிக்தொன் உணவுப் பெருட்களை அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது. கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரையான மூன்று நாட்களுக்குள் மாத் திரம் மூன்று தடவைகள் 515 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. அதில் 15 மெற்றிக்தொன் மரக்கறி வகைகளும் அடங்கும்.

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பிவைக்கும் அதே சமயம், உலக உணவுத் திட் டம் உதவிகளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவிலுள்ள மக்களுக்குத் தேவையான ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கடந்த 5ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அங்கு தேவையான மருந்து பொருட்கள் களஞ்சியப்ப டுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்குள் அண்டிபயோடிக் உட்பட 52 வகையான மருந்துப் பொருட்கள், திரு கோணமலையிலுள்ள பிரா ந்திய மருத்துவ விநி யோகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை திருமலையிலுள்ள கடற்படையினருக்கு ஒப்ப டைக்கப்பட்டு திருமலை பிராந்திய கடற்படைத் தளபதியின் வழிகாட்டலின் தேவைக்கேற்ப உரிய நேரத்தில் அனுப்பிவைக்கப்படும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரா ந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ரி. வரதராஜாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தப் பிரதேசத்தில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுவதாக புலிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறுபட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்கள் இரண்டின் “கடிதத் தலைப்புக்கள்” ஒன்றுக்கு ஒன்று முரணானதாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி னார். அந்தத் கடிதத் தலை ப்புக்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதையும் ஆதாரமாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இவை போலியானவை என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜாவுடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது பெயர்பயன் படுத்தப்பட்டு மாறுப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவதாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ளத் தவறிவிட்டது – மனோ கணேசன்

mano.jpgஅரசாங்கம்,  தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள தவறி விட்டது. அதனால் தான், வன்னியில் உள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரத் தயங்குகின்றனர்.

தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வவுனியாவுக்குச் செல்ல அழைப்பு விடுக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் மதவாச்சிக்கு அப்பால் அனுமதிப்பதில்லை என்று மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மனோகணேசன் எம்.பி. கேளள்வி எழுப்பினார்.

வெறுமனே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரை விமர்சித்துக்கொண்டிருக்காமல் அது தொடர்பாக ஐ.நா.வின் பிரதிநிதிகளை அழைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் உண்மை தன்மையினை நிரூபிக்கலாமே என்றும் அவர் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் பொருளாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியும் செயற்படுகின்றனர்.

அங்கு தொடர்ந்து மனோகணேசன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்

நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதில் மறு கருத்துக்கு இடமில்லை. பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதிலிருந்தே சட்டம் மற்றும் ஒழுங்கின் சீர்குலைவு தெரிகின்றது. கடத்தல்கள் சட்டவிரோத கைதுகள் என மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சீருடை இல்லாமல் வெள்ளைவானில் வந்து கடத்திச் செல்கின்றனர். இதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்புக்கூறவேண்டும்.

இந்நிலையில் மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு உருவாக்கப்படாவிடின் அர்த்தம் இல்லாமல் போய்விடும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம்.

மடகஸ்கார் நீதிமன்றம் ரஜோலினாவின் ஜனாதிபதி நியமனத்துக்கு அங்கீகாரம்

madak.jpgமடகஸ் கார் உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் அன்றி ராஜோலினாவிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி மார்க் ரவலோமனானா பதவியை விட்டு விலகிய பின், அந்நாட்டு இராணுவம் 34 வயது அன்ட்றி ரஜோலினாவிடம் அதிகாரத்தை கையளித்திருந்தது. மடகஸ்கார் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் ஆகக் குறைந்தது 40 வயதை அடைந்திருப்பது கட்டாயமாகும்.

இந்த வயது நிபந்தனையின் பிரகாரம் 6 வயது இளமையான அன்றி ரஜோலினா ஜனாதிபதியாக பதவியேற்பது சட்ட சிக்கல் மிக்க ஒரு விடயமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது ஜனாதிபதி நியமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ஆபிரிக்க நாடான சாம்பியாவானது, உடனடியாக மடகஸ்காரை ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்தும் தென் ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்திலிருந்தும் நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மடகஸ்காரில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைக்கப்படும் அரசாங்கத்தை சாம்பியா நிராகரிக்கிறது” என சாம்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் கபிங்கா பண்டே தெரிவித்தார்.

மடகஸ்காரில் புதிய தேர்தலை 24 மாதங்களில் நடத்துவதாக அன்றி ரஜோலினா வாக்களித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது மிக நீண்டகாலமாகும்” என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது.

மடகஸ்கார் உலகின் நான்காவது பெரிய தீவாகும். அந்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனாகும். நாட்டு மக்களின் 70 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திலான் சமரவீர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

samaraweera.jpgஇலங்கை அணி வீரர்களில் திலான் சமரவீர நவலோக்க தனியார் மருத்துவ மனையிலிருந்து சிகிச்சைப்பெற்று வெளியேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அணியின் பயுற்றுவிப்பாளர் உட்பட 6 வீரர்கள் காயமடைந்தனர்.

திலான் சமரவீர தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது காலில் காணப்பட்ட துப்பாக்கி ரவை சிறிய சத்திர சிகைச்சை மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள திலான் சமரவீர ஏப்ரல் மாதமளவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார் என அவரது முகாமையாளர் ஒஸெஇன் சாளி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 

எண்ணெய் இறக்குமதி உரிமை நிதியமைச்சு வசமே இருக்கின்றது – அமைச்சர் பௌஸி

parliament.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் இறக்குமதி உரிமையானது இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது என்று பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.

அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கையில், ஜே.வி.யின் பின்வரிசை எம்.பி.யான ரணவீரபத்திரன பௌசி பாவம் என்றார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

எரிபொருள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ரத்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில் பெற்றோல் விலைகுறைப்பு தொடர்பான உத்தரவு மட்டும் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. எனினும் ஏனைய உத்தரவுகளின் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

எனினும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகள் பின்னர் அந்த நீதிமன்றத்தாலேயே ரத்து செய்யப்பட்டன. இதன் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் நடைபெற்று விட்டதா என அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பௌசி, இல்லை இல்லை அது (எண்ணெய் இறக்குமதி உரிமை) இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது. நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது என்றார்.

ஆனால், ஆயுதங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொள்வனவை விட பாரிய வியாபாரமான எண்ணெய் இறக்குமதியை நிதி அமைச்சு உங்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதன்போது பௌசி பாவம் என்று ரணவீர பத்திரன தெரிவித்தார்.