29

29

வன்னியில் 5000 பொதுமக்கள் பலி, 15000 க்கும் மேற்பட்டோர் காயம்: ஸ்ரீகாந்தா பா.உ

srikanthaa.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில் 500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல்; புலிகளின் பாரிய மண்அணை படை வசம்

srilanka_army1.jpgமுல்லைத் தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார். இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூதூர் பிரதேசத்தில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

pisto.jpgதிரு கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள தங்கநகரில் நேற்றிரவு குடும்பஸ்தரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

செல்லத்துரை நல்லதம்பி ( வயது 52 ) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டிற்கு முன்பாக நின்றிருந்த வேளை அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் வி.முரளிதரன் இன்று மட்டக்களப்பு விஜயம்.

karuna1.jpgதேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு வந்தடைந்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சு பதவியேற்ற பின் மட்டக்களப்புக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவையாகும். இவ் விஜயத்தில் பல்வேறுப்பட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளார்

வன்னியில் காயமடைந்த 512 நோயாளர்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

people-_flee.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் மிக மோசமான போர் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 512 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் வழித்துணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட “கிரீன் ஓசன் ஓ’ கப்பல் நேற்று இரவு 8.35 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.

புல்மோட்டையை வந்தடைந்த “கிரீன் ஓசன் ஓ’ கப்பலில் இருந்த 512 நோயளர்களையும் 20 செஞ்சிலுவைச் சங்க சர்வதேசப் பணிப்யாளர் 8 படகுகளை வேலைக்கு அமர்த்தி கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதுவரை செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழு முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் மோதல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 5500க்கு மேற்பட்டோரை கப்பல் மூலம் அழைத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவினரால் அழைத்துவரப்படும் நோயாளர்கள் திருகோணமலை, புல்மோட்டை, கந்தளாய், பதவியா மற்றும் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டோரில் இறந்தவர் தொகை 46

pullmottaiindiadoctors.jpgபெப்ரவரி 11ஆம் திகதி தொடக்கம் மார்ச் 14 ஆம் திகதி வரை திருகோணமலைக்கு முல்லைத்தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை, கண்டி, கொழும்பு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிவரை 46 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 32 பேரும் கண்டிபோதனா வைத்தியசாலையில் 09 பேரும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 05 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக 33 குழந்தைகள் பிறந்துள்ளன. திருகோணமலைக்கு கூட்டி வரப்பட்ட 3,635 முல்லைத்தீவு பொதுமக்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே 3,236 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்விபரம் வருமாறு;

வவுனியா ஆஸ்பத்திரி, நலன்புரிமுகாம்2,019
மன்னார் ஆஸ்பத்திரி908
கொழும்பு தேசிய வைத்தியசாலை61
கண்டி போதனா வைத்தியசாலை 54
மகரகம போதனா வைத்தியசாலை01
பொலநறுவை ஆஸ்பத்திரி 100
கந்தளாய் ஆதார வைத்தியசாலை57
தம்பலகமம் ஆஸ்பத்திரி 35

நேற்று சனிக்கிழமை வரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் பெப்ரவரி11 தொடக்கம் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொலிஸாருக்கோ, கருணா காரியாலயத்துக்கோ முறைப்பாடு செய்தால் பிள்ளை உயிருடன் கிடைக்காது- கிருபைராணி ஜூட் ரெஜி

Regie_Varsa“மார்ச் 11 புதன்கிழமை காலையில் ஆட்டோவில் பாடசாலைக்குச் சென்ற எனது மகள் வர்ஷாவை மார்ச் 13 வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில், திருகோணமலை நகரில் வடிகால் வாய் அருகில் உரப்பை ஒன்றினுள் சடலமாகக் கண்டேன் . கைகள் , கால்கள் ,முகம் என்பன கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சடலத்தை வர்ஷாவினுடையது என்று அந்த இடத்தில் வைத்து அடையாளங் காட்டினேன் ‘ என்று 37 வயதான கிருபைராணி ஜூட் ரெஜி, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் நடைபெற்ற மரணவிசாரனையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் சொன்னதாவது;

“எனது கணவர் ஜூட் ரெஜி டோஹாவில் தொழில் செய்கின்றார். எனக்கு இரண்டு குழந்தைகள் . மூத்தவர் மகன் , இரண்டாவது குழந்தையே வர்ஷா இருவரும் வழமையாக முச்சக்கர வண்டியிலே பாடசாலைக்கு செல்வார்கள் ஆட்டோசாரதி சித்திரவேலு இருவரையும் தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று பாடசாலையில் விடுவார். பாடசாலை முடிந்தவுடன் இருவரையும் வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவார். மகள் வர்ஷாவை நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் சித்திரவேலு கொண்டு வருவார். மகனை பிற்பகல் 2 மணிக்குக் கூட்டிவருவார். சம்பவதினம் மார்ச் காலை 11.50 மணியளவில் ஆட்டோ சாரதி சித்திரவேலு தொலைபேசி மூலம் பாடசாலையில் வர்ஷாவைக் காணவில்லை என்று எனக்குத் தெரிவித்தார். வேறுயாரும் வீட்டிற்கு வர்ஷாவைக் கூட்டி வந்துவிட்டார்களா என்றும் அவர் என்னைக் கேட்டார். அப்படி ஒருவரும் கூட்டிவரவில்லை என்று நான் பதிலளித்தேன்.

மீண்டும் 10 நிமிடங்கள் கழித்து சாரதி சித்திரவேல் வர்ஷாவைக் காணவில்லை என்று கூறினார். ஆசிரியரிடம் அது பற்றிக் கூறுமாறு நான் அவருக்குச் சொன்னேன் . ஆசிரியை என்னோடு பேசினார் . மீண்டும் வர்ஷாவைத் தேடிப்பார்க்கும்படி ஆசிரியையிடம் தொலை பேசியில் கூறி விட்டு , பாடசாலை நோக்கி உடனே புறப்பட்டேன்.

பாடசாலைக்குச் சென்றவுடன் ஆசிரியைகளும் நானும் பாடசாலை வளாகத்தில் வர்ஷாவைத் தேடினோம். பிள்ளையை எங்கும் காணவில்லை.

பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து எனது சகோதரி ராஜகுமாரி எனது செல்போன் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். என் வீட்டுச் செல்போனுடன் ஆண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதாகவும் பிள்ளையைத் தேட வேண்டாம் என்றும் பிள்ளை தங்களிடம் இருப்பதாகவும் பிள்ளையைத் தேடிச் சென்றவர்கள் அனைவரையும் வீட்டுக்குத் திரும்பும்படியும் இது குறித்து பொலிஸாருக்கோ, கருணா காரியாலயத்துக்கோ முறைப்பாடு செய்தால் பிள்ளை உயிருடன் கிடைக்காது என்றும் விடயத்தை பேசித் தீர்க்க வேண்டும் என்றும் பிள்ளையின் தந்தையுடன் தாங்கள் பேசவிருப்பதாகவும் தந்தையின் தொலைபேசி இலக்கம் தனக்கு வேண்டும் என்றும் அந்த தொலைபேசி அழைப்பை எடுத்த அந்த ஆள் கூறியதாகவும் எனது சகோதரி தெரிவித்தார்.

டோஹாவில் உள்ள கணவருக்குத் தொலைபேசி மூலம் விவரத்தைக் கூறினேன். அந்த ஆள் மீண்டும் தொலைபேசியில் பேசினால் தனது தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்கும் படி கணவர் கூறினார்.

பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்புவந்தது. கணவரின் தொலைபேசி இலக்கத்தைத் தரும்படி, அழைப்பை எடுத்தவர் என்னிடம் கேட்டார். நான் கணவனின் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டவரிடம் கொடுத்தேன். பிள்ளையைக் கடத்தி வைத்திருப்பவர்கள் மூன்று கோடி ரூபாவில் ஆரம்பித்து இறுதியில் 10 இலட்சம் ரூபா தந்தால் பிள்ளையை விடுதலை செய்வதாகவும் கூறினார்கள்.

கணவர் பல தடவைகள் தொலைபேசி மூலம் பேசினார். இரவு 8 மணிக்குமுன் 10 இலட்சம் ரூபா பணம் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். மறுநாள் காலை 10 மணிக்கு தருவதாகவும் பிள்ளைக்கு எதுவும் செய்யவேண்டாம் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

இரவு 8 மணிக்கு முதல் பணம் தரப்படவேண்டும் என்றார்கள். நாம் மறுநாள் தருவதாகக் கூறி கடன் ஏற்பாடு செய்தோம். ஆனால் மறுநாள் மாலை 7 மணியின் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புவரவில்லை. நாம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு நிறுத்தப்பட்டதால், தொடர்பு கொண்டு பேசிக்கொள்ள முடியவில்லை.

வியாழக்கிழமை முழுவதும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. வியாழக்கிழமை மாலை 7 மணியின் பின்னர் எனது கணவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில் வர்ஷாவின் குரல்போன்ற குரல் சற்று ஒலித்ததாகவும் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கணவர் என்னிடம் தெரிவித்தார்.

பிள்ளையைக் கடத்தியவர் தன்னை ரெஜினால்ட் என்று அழைத்ததால் அவ்வாறு தன்னை அழைப்பவர் எங்களது வீட்டுக்கு கம்பியூட்டர் திருத்த வேலைக்கு வரும் ரெஜி என்ற நபராக இருக்கலாம் என்றும் அந்நபர் குறித்து கவனம் செலுத்தும்படியும் கணவர் கூறினார்.

நாம் ரெஜினால்ட் பற்றி தகவல் திரட்டினோம். அந்த நபர் மார்ச்11 காலையிலும் கம்பியூட்டரின் ஒலிபெருக்கி சம்பந்தமாக என்னுடன் உரையாடியிருந்தார். நாம் பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கும்போது உரையாடியுள்ளார். பிள்ளை காணமற்போன விஷயத்தை அவரிடம் கூறியதும் அவர் அனுதாபம் அடைந்தவர் போல் பேசினார்.

பிள்ளை உயிருடன் கிடைக்கவேண்டும் என்றால் பொலிஸுக்கு சொல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் நாம் பொலிஸுக்கு முறைப்பாடு செய்யவில்லை. வேறுவழிகள் மூலம் பொலிஸார் அறிந்து வியாழன் நள்ளிரவில் பொலிஸார் வீட்டுக்கு வந்தனர்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் பிள்ளை ஒன்றின் சடலம் உரப்பை ஒன்றினுள் போடப்பட்ட நிலையில் வீதியோரத்தில் கிடப்பதாக எனக்குத் தகவல் வந்தது. உரப்பை ஒன்றுக்குள் போடப்பட்டிருந்த சிறுமியின் உடலை வெளியே எடுக்கப்பட்டு எனக்குக் காண்பிக்கப்பட்டது. அச்சடலம் எனது மகள் வர்ஷாவினுடையது என்று நான் அடையாளம் காட்டினேன். கைகள், கால்கள், முகம் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது’ என்று தாயார் கிருபைராணி கூறினார்.

ஆட்டோசாரதி இராமையா சித்திரவேல், தயாரின் சகோதரி இராஜகுமாரி கரோல் வாக்குமூலங்களும் மரண விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.மரண விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை

bati-trnco.jpgதிரு கோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண சபையின் கடந்த கால வேலைத் திட்டங்கள் ,எதிர் கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட18 பஸ் வண்டிகளில் 10 பஸ் வண்டிகள் அரசாங்கத் திணைக்களங்கள் ,பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மிகுதி 8 பஸ் வண்டிகள் தற்போது தலா 100 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் 4 ரயில் பஸ்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த 4 ரயில் பஸ்களும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் பகல் நேரம் சேவையில் ஈடுபடும் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு சிங்களப் புலிகள் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய நான்கு சிங்களப் புலி உறுப்பினர்களை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பு துறைமுகத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இந்த சிங்கள புலி உறுப்பினர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட இருந்ததாகத் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளிடம் இலட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு குறித்த சிங்கள நபர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவுப் பணிக்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஈழத்தமிழருக்காக இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்படவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

26-ramsoss.jpgமுதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சனையால்தான் இரண்டு திமுக ஆட்சியையே பறிகொடுத்தது.   எங்களுக்கா ஈழத்தமிழர் நலனில் அக்கறை இல்லை என்று ராமதாசுக்கு கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
 
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம். அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.  அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.