இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.
இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”
– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.
புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.
இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.
‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.
நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.
‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.
புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.
வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர். புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.
இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”