கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐரோப்பிய பங்குச் சந்தைகள். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாகவே சரிவுக்குள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கித் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
எச்எஸ்பிசி, பிஎன்பி பாரிபஸ், ஐஎன்ஜி போன்ற வங்கிகளில் ஒருபக்கம் வேலையிழப்பும், மறுபக்கம் பங்குகள் சரிவும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் ஐரோப்பாவில் எதிரொலிக்கும் என்பதால், அந்நாட்டின் நிலைமையை உற்று நோக்கி வருகிறார்கள் ஐரோப்பிய பொருளியல் நிபுணர்கள்.
பொருளாதார வீழ்ச்சி துவங்கிய பிறகு அமெரிக்காவில் மட்டும் 44 லட்சம் பேர் ஜனவரி வரை பணியிழந்தனர். கடந்த ஜனவரியில் மட்டும் 550,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தைகளின் பங்கு வணிகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதம் மட்டும் ஐரோப்பாவில் வேலையிழப்புக்கு உள்ளாகும் பணியாளர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.