உடனடியாக மோதலை நிறுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை

ban-ki-moon.jpgஇலங்கைப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதையிட்டு வியாழக்கிழமை கடும் கவலை தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், உடனடியாக சண்டையை நிறுத்துமாறு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வன்னிப் பிராந்தியத்தில் போர் வலயத்திலுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக வியாழனன்று அறிக்கை விடுத்திருக்கும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகம் கடந்த மாதம் நிலைமை மோசமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் மோதல் வலயம் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவாக சுருங்கியுள்ளது. 1 இலட்சத்துக்கும் 2 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான பொதுமக்கள் 14 சதுர கிலோமீற்றர் புதிய பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் புகலிடம் அடைந்திருப்பதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்கும் இலங்கை அரசும் புலிகளும் சண்டையை இடைநிறுத்த வேண்டுமென்று மீண்டும் பான் கீ மூன் அழைப்பு விடுத்திருப்பதாக அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்கள் பலர் உள்ள இடத்திலிருந்து தமது ஆயுதங்களையும் போரிடுவோரையும் அகற்றுமாறும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறும் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் தகவலின் பிரகாரம், பொதுமக்கள் யுத்த வலயத்திற்குள்ளும் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் தொடர்ந்து உயிரிழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஷெல் தாக்குதலால் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிவாரணப் பணியாளர்கள் செல்வதற்கு முடியாமல் இருப்பதால் எண்ணிக்கையை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியாமலுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியில் அதிக சனச் செறிவு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு தட்டுப்பாட்டால் மக்கள் இறப்பதாக ஐ.நா.வுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள நிலைமைகள் மலேரியா, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் மோசமாக பரவ வழிவகுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்நோய் பரவுவது தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மோதலில் சிக்கியுள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவ 155 மில்லியன் டொலர்கள் தேவையென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மோதலுக்கான பிரதான காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அதிதீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *