19

19

மேல் மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு ! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

ranjeth-gunasekara.jpgகடந்த ஐந்து வருடத்துக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி,ஞாயிறு (21,22,)  ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  மேலும் கூறியதாவது,

வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை. எனவே பொது மக்கள் எப்போதும் விழ்ப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கௌள வேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேறn;காண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரவித்தார். 

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு- படைத்தரப்பு

army-s-l.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.  இதில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கினறது

கச்சைதீவில் சமய வழிபாட்டுத்தலம்

kachchativu.gifகச்சைதீவு இலங்கைக்கே சொந்தமானதெனவும் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கச்சைதீவில் இப்போது சமய வழிபாட்டுத்தலமொன்று அமைக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பொது மக்களும் அங்கு தினமும் வந்து வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களையும் அப்பிரதேசத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

19-father.jpgநெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.  இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.

”பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார்.” அமைச்சர் முரளிதரன் லங்காதீபக்கு வழங்கிய செவ்வி.

karuna1.jpgகேள்வி : புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?

பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய விடயங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் எடுத்தியம்பி என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய ஒரே நோக்கு பயங்கரவாத தாக்குதல்களாகவே இருந்தது, அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலே போய்விட்டது, பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் ஈடுபாடற்ற தன்மையையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. மற்றது ஜெனீவா பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும் அதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்திருக்கவில்லை. இந்த நிலைமை காரணமாக எனக்கு எமது தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்படவே நான் அந்த அமைப்பிலிருந்து விலகினேன். தமிழ் மக்களின் விடிவிற்காய் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு குழம்பிப்போயிருந்த பிரபாகரனின் பாசிச போக்குத்தான் என்னை இந்த ஜனநாயக நீரோட்டத்தில் குதிக்க வைத்தது.

கேள்வி : நீங்கள் த.ம.வி.புலிகளிலிருந்து விலகி சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து உறுப்பினராவதற்கான காரணம் என்ன?

பதில் : த.ம.வி.புலிகள் அமைப்பு ஒரு எதிர்காலம் இல்லாத அமைப்பு. தற்பொழுது அக்கட்சியில் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர். பிள்ளையான், பத்மினி, பிரதீப் ஆகியோரே உள்ளனர். எதிர்காலம் இல்லாத அக்கட்சியிலிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அதனால்தான் என்னுடன் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பலரும் சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு நீங்கள் பகீரத பிரயாத்தனம் செய்திருந்தீர்களல்லவா?

பதில் : ஆம், அது முற்றிலும் உண்மை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிக்கு புலிகள் என்ற பதம் பொருத்தமான தொன்றல்ல,  இந்நாட்டின் சகல மக்களுக்கும் புலி என்ற பெயரில் அதிகபட்ஷ விருப்பமின்மையையே காணக்கூடியதாக இருக்கிறது. அதே போல் இந்நாட்டு மக்களுக்கு புலிகளால் பாரிய பொருளாதார இழப்புக்களும்,  அதே போல் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு,  அவர்களுடைய வீடு வாசல்,  அசையும் அசையா சொத்துக்கள் அழிந்திருப்பது மட்டுமில்லாது,  பல உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்,  அதிலும் பலர் அங்கவீனமடைந்துமுள்ளனர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அழிந்து போயிருக்கிறது,  இப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய புலிகள் என்ற பெயரை த.ம.வி.புலிகள் அமைப்பின் பெயரிலிருந்த நீக்குவதற்கு முயற்சித்தேன்,  அத்தோடு புலி என்ற பெயரிலிருக்கும் அமைப்பினால் (தற்கால கட்டத்தில்) தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு,  அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முடியாது என்ற யதார்த்த நிலமையை உணர்ந்த பின்புதான் நான் அந்த முடிவினை எடுத்திருந்தேன்.

கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தை அகற்றுவதற்கு பிள்ளையான் விரும்பவில்லை. நீங்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் மூல காரணமா?

பதில் : எதிர்காலமே இருண்டு போயிருக்கும் அக்கட்சியிலிருந்து கொண்டு முன்னேற்றப் பாதையில் எமது மக்களுடன் பயணிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன், முன்நோக்கிச் செல்லும் பயணம். த.ம.வி.புலிகள் கட்சிக்கு எதிர்காலமே இல்லாத காரணத்தினால் நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.

கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கோபமாக இருக்கிறீர்களா?

பதில் : இல்லை, அப்படியொரு கோபமுமில்லை,  எங்கள் இருவரினதும் எதிர்பார்ப்பு மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களுடைய ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்வதுமேயாகும். மக்களின் எதிர்காலம் பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. த.ம.வி.புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்க பிள்ளையான் விரும்பவில்லை, ஆனால் நான் விரும்பினேன். கட்சிகளுக்குள் தலைமைத்துவ பிரச்சனை என்பது பொதுவானது. இன்றுகூட ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவைகள் சாதாரணமானவைகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில்,  மக்களின் சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டுமே தவிர,  தனிப்பட்ட வைராக்கியங்களுடன் கூடிய அரசியலுக்கு இடமில்லை.. யார் தன்னலமற்ற மக்கள் சேவகன் என்பதை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்கின்ற எஜமான்கள். பெயரிலுள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு பிள்ளையானக்கு விருப்பமில்லை, அவ்வளவுதான் இதில் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு வாய்ப்பில்லை.

கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் உங்களுடன் சேர்த்து யார் யாரெல்லாம் இணைந்து கொண்டார்கள் என்று கூற முடியுமா?

பதில் : ஆம்,  என்னுடன் த.ம.வி.புலிகளுடன் தொடர்புபட்ட சுமார் 2000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்கள்.

கேள்வி : நீங்கள் என்ன எதிர்பார்ப்புடன், நோக்கத்துடன் சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்?

பதில் : எனது அரசியல் பிரவேசத்துடன் கிழக்கில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்த்தேன், அது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அதனால்தான் த.ம.வி.புலிகளிடமிருந்து வெளியேறினேன். நாட்டின் அனேக மக்களின் ஆசிர்வாதத்தின் மத்தியில்,  கிழக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தி,  அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் முதற்கொண்டு பாகுபாடற்ற சேவையினை எதிர்காலத்தில் வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்த ஒரு நிலமை ஏற்பட்டு எமது மக்கள் கௌரவத்துடனும், போஷாக்குடனும்,  பொருளாதார கல்வி வளர்ச்சியுடனும் ஏனைய சமூகங்களுக்குக் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் அவர்களுக்குக்கிடைத்து,  ஏனைய சமூகங்கள் போல் அசுர வேகத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதற்காகவுமே சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.

கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தற்பொழுது அவற்றுக்கு என்ன நடந்தது?

பதில் : குறிப்பாக எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்களைப் பாவிப்பது பயங்கரவாத அமைப்பாகும். நாங்கள் பயங்கரவாத அமைப்பல்ல. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடமிருந்த ஆயுதங்களை கையளித்து விட்டோம். என்னுடன் இருப்பவர்கள் ஜனநாயக வழிக்குத்திரும்பி விட்டார்கள்,  தற்பொழுது எம்மிடம் ஆயுதங்களில்லை.

கேள்வி : அப்படியானால் உங்களுடைய பாதுகாப்பு?

பதில் : ஏனைய அமைச்சர்களைப் போன்று எனக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கேள்வி : நீங்கள் புலிப் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இரக்கிறதா?

பதில் : இலேசான புன்னகையுடன் பதில் : நான் அப்பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்பொழுது வெளியேறினேனோ, அன்றிலிருந்து நான் அவ்வமைப்பின் முதலாவது இலக்காகத்தான் இருந்து வருகிறேன்.

கேள்வி : தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பானது,  தங்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா?

பதில் : ஆம்,  திருப்தியானதாக இருக்கின்றது.

கேள்வி : வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு, நாட்டிற்கு சிறந்ததொரு சேவையை செய்யமுடியுமென்று கருதுகிறீர்களா?

பதில் : ஏன் முடியாது? எனக்கு கிடைத்திருக்கும் அமைச்சு நாட்டின் முக்கியமானதொரு பொறுப்புவாய்ந்த அமைச்சாகும். இன்று நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும், ஒற்றுமையின்மையும்தான். மீண்டும் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலர வேண்டுமாகில் அனைத்து இனங்களும் விட்டுக் கொடப்புக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், இது பேச்சளவில் இல்லாமல் அதற்கான களம் அமைத்துக் கொடக்கப்பட வேண்டும். அந்த நிலமையை ஏற்படுத்தவதற்கு எனது இந்த அமைச்சினூடாக பல வேலைத்திட்டங்களை செய்யலாம் என்று கருதுகிறேன். நான் அமைச்சர் டீயூ குணசேகர அவர்களுடன் இணைந்து சேவை செய்ய கிடைத்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் முதர்ச்சியுள்ள, அனுபவம் மிக்க சிறந்த அரசியல்வாதி கௌரவ டீயூ குணசேகர அவர்கள்,  அவர் எனக்கு எல்லா வழிகளிலும் பக்க பலமாக, உதவியாக இருக்கின்றார்.

கேள்வி : நீங்கள் இந்த நிலையை அடைவதற்காகவே, ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தினீர்கள் என்று யாராவது சொன்னால்………

பதில் : பலரும் பத்தையும் கதைப்பார்கள். காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம் பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக்கூடாது. ஜனநாயகத்திற்கு வந்துவிட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். மேன்மை தங்கிய ஜனாதிபதின் சகோதரர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களிடமிருந்து எனக்கு விசேடமாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. நான் அமைச்சுப் பதவிக்காக காத்திருந்தவனுமல்ல,  நான் அதைக்கேட்டதுமில்லை,  எனக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தவர் ஜனாதிபதி அவர்கள். அவருடைய வேண்டுகோளிற்கு இணங்கினேன். இதில் எந்தவிதமான குறைபாடுகளும் எனக்குத் தெரியவில்லை.

கேள்வி : யுத்தம் தொடர்பான கேள்வி ஒன்று, பிரபாகரனின் இன்றைய நிலை என்ன?

பதில் : இக்கேள்வி தொடர்பான நல்லதொரு விரிவான பதிலினை இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். பிரபாகரன் தற்பொழுது அவருடைய படைகளில் மிஞ்சிய நன்கு பயிற்றப்பட்டவர்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார். இதற்காகத்தான் அப்பாவி மக்களை தனது கவசமாக வைத்திருக்கிறார்.

TMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சபையாக மாற்றம்

slfp-tmvp.jpgTMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று (மார். 18) முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ். பாக்கியராசா, உப தவிசாளருடன் மேலும் மூன்று ரி. எம். வி. பி. உறுப் பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்களில் 6 பேர் ரி. எம். வி. பி. கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக் கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே, ஓட்டமாவடி பிரதேச சபை இக்கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

55வது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் பட்டிக்கரை பிரதேசம்.

safe_zone.jpgசாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது

திருமலை சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் வரதராஜா ஜனார்த்தனன் சயனைட் அருந்தி தற்கொலை

Regie_Varsaஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். இன்று சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன 

மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் “கெயர்” நிறுவனப் பணியாளர் ஒருவர் பலி

care.jpg“கெயர்” எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக “கெயர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் “கெயர்” நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்” மேலும் தெரிவித்துள்ளது. 

திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் ரிஎம்விபி யினரின் தொடர்பு மூடி மறைக்கப்படுகின்றது. – அனுரகுமார திசாநாயக்க

Regie_Varsaதிருகோண மலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.