தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் படை வீரர்களுக்கு நாட்டு மக்களின் உயர்ந்த கௌரவம் உரித்தாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல், போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாற் படை றெஜிமன்ட் மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ. எனும் பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற கருத்து முன்னர் நிலவியது. எல்.ரீ.ரீ.ஈ.யினரிடமுள்ள ஆட்பலம் மற்றும் ஆயுத பலம் என்பவை தொடர்பாக இராணுவ புலனாய்வுகள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்பே அவர்களுடன் போராடுவதற்கு நாம் முடிவு செய்தோம். இத்தாக்குதலுக்கு நாம் திட்டங்களை வகுத்ததபோது சில தியாகங்களை செய்ய வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தோம். எனினும் இத்தியாகங்கள் மூலம் கிடைக்கும் பலாபலன்கள் எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு பேருதவியாக இருக்கும்.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள எமது படை வீரர்களின் பெயர்களை எதிர்காலத்தில் வரலாறுகள் நினைவு கூறும். நாட்டுக்காக உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரது பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி உறுதிபூன்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.