கிழக்கு மாகாணத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கென 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் குழுவொன்று அமைச்சர் முரளிதரன் தலைமையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை சந்தித்து பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடம் மீட்கப்பட்டதன் பின்னர் ஆயுதமேந்தி போராடிய கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இதிலிருந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி, சிங்கள, ஆங்கில மொழி பயிற்சி, நூலக வசதிகள், கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைத்தல், கணனி பயிற்சி, புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், கடன் வழங்குதல், உயர்கல்வி முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மற்றும் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்த இளைஞர் யுவதிகளின் மனோ நிலையை சரியான வழிக்கு இட்டுச் செல்வதற்கான ஆலோசனைகள் வழங்கும் சேவைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் முரளிதரனுக்கும், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டது. இதன் பிரதிபலனாகவே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி 48 மில்லியன் ரூபாவை 2009 ஆம் ஆண்டுக்காக வழங்குவதாக உறுதியளித்தார்.