பாதுகாப்பு படைக்கு நிரந்தரமாகவோ, தொண்டர் அடிப்படையிலோ ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட போதும் களமுளையில் இருவரும் ஒரே கடமையைத்தான் செய்கிறார்கள். எனவே தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் விதவைகள், அனாதைகளுக்கான ஒய்வூதியக் கொடுப்பனவுக்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.பாதுகாப்புப் படையினரின் விதவைகள், அனாதைகள் ஓய்வூதியத் திட்ட திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து பேசும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையில் நிரந்தர சேவைக்கு உள்வாங்கப் பட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் போரில் மரணமானால் அவர்களது மனைவிக்கு, கணவனுக்கு, குழந்தைக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் தொண்டர் அடிப்படையில் பாதுகாப்புப் படைக்கு சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஓய்வூதியம் இருக்கின்ற போதும் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லை.
தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒருவர் இன்றைய பயங்கரவாத பிரச்சினையின் காரணமாக தொடர்ந்தும் சேவையில் ஈடுபட வேண்டியுள்ளது. களமுனையிலும் அவர் அல்லது அவள் கடமை புரிய வேண்டியுள்ளது. தொண்டர் அடிப்படை என்றும் நிரந்தர சேவை என்றும் ஏட்டில் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர களமுனையில் இருவரும் சமமானவர்களே. இருவரும் ஒரே வகையில் தான் களமுளையில் இருக்கிறார்கள். எனவே விதவைகள் ஓய்வூதிய விடயத்தில் மட்டும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.
எனவே, தொண்டர் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய படைத் தரப்பு ஒருவரின் மனைவி, கணவன், குழந்தைகளும் ஓய்வூதியம் பெறும் வகையிலேயே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.