அரசாங்கம், தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள தவறி விட்டது. அதனால் தான், வன்னியில் உள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரத் தயங்குகின்றனர்.
தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வவுனியாவுக்குச் செல்ல அழைப்பு விடுக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் மதவாச்சிக்கு அப்பால் அனுமதிப்பதில்லை என்று மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மனோகணேசன் எம்.பி. கேளள்வி எழுப்பினார்.
வெறுமனே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரை விமர்சித்துக்கொண்டிருக்காமல் அது தொடர்பாக ஐ.நா.வின் பிரதிநிதிகளை அழைத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் உண்மை தன்மையினை நிரூபிக்கலாமே என்றும் அவர் கூறினார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் பொருளாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியும் செயற்படுகின்றனர்.
அங்கு தொடர்ந்து மனோகணேசன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்
நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதில் மறு கருத்துக்கு இடமில்லை. பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதிலிருந்தே சட்டம் மற்றும் ஒழுங்கின் சீர்குலைவு தெரிகின்றது. கடத்தல்கள் சட்டவிரோத கைதுகள் என மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சீருடை இல்லாமல் வெள்ளைவானில் வந்து கடத்திச் செல்கின்றனர். இதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்புக்கூறவேண்டும்.
இந்நிலையில் மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு உருவாக்கப்படாவிடின் அர்த்தம் இல்லாமல் போய்விடும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம்.