04

04

அரச படைகளின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் – றிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

risard.jpgஜனாதி பதியின் 4 வருடகால ஆட்சியில் வடக்கில் பெரும் நிலப்பரப்பினை மீட்டு அரசபடைகள் சரித்திரத்தில் தடம் பதித்துள்ளன. இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடும் எதிரமைப்புகளின் பேச்சாளராக ரவூப் ஹக்கீம் மாறியுள்ளார் என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கடற்றொழில் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்புச் செயலாளராக எஸ். எஹ்யான் நியமிக்கபபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தில்லையடியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்;

ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் உருவாக்கமானது எமது நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம், தமிழ் சமூகத்தின் விடிவுக்காகவே இருக்க வேண்டும் என்பதில் அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மிகவும் உறுதியாக இருந்தார். துரதிர்ஷ்டவசம், இன்று ரவூப் ஹக்கீம் இந்த முஸ்லிம் காங்கிரஸை, ஐ.தே.கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்து துரோகத்தனத்தை செய்து விட்டார். இந்த துரோகத் தனத்தின் மூலம் முஸ்லிம் சமூகமும் தற்போதைய அரசுக்கு எதிரானவர்கள் என்ற மாயையையும் பொய்ப் பிரசாரங்களையும் சில ஊடகங்கள் மூலம் முன்னெடுக்க முனைகின்றார்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் வாழும் சமூகங்கள் ஜனாதிபதியினை நன்றிப் பெருக்குடன் பாராட்டும் போது ரவூப் ஹக்கீம் மட்டும் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார். எதிர்க்கட்சியில் அமர்வதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிமைகளாக, அபிவிருத்திகள் இல்லாத சமூகமாக வைத்துக் கொண்டு சுயநல அரசியல் இலாபங்களை மட்டும் வைத்துச் சிந்திக்கின்ற ஒருவராக ரவூப் ஹக்கீம் இருப்பது சமூகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

18 தேர்தலில் தொடர்ந்து தோல்வி கண்ட ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரிவாக ஸ்ரீ.ல.மு.கா. இன்று மாறிவிட்டது. இம்முறையும் வடமேல்,மத்திய மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்து 19 ஆவது முறையும் மக்களினால் ஒதுக்கப்படும்.

தேசத்தை மீட்டு அதில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தை மேற்கொள்ளும் படையினருக்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்கும் தேவைக்கும் உரிமைக்கும் எதிராகச் செயற்படும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்துக்குத் துரோகமிழைத்தவர்களாகவே வரலாற்றில் பதியப்படுவர். அதிலிருந்து அவர்களை மீட்கும் போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் எக்கட்சியிலாவது இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிட ஹக்கீம் முன்வருவாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், அவரை எதிர்த்துப் போட்டியிடும் மனநிலையை தான் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முத்துக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சுப்ரமணியசாமி சந்தேகம்

muthukumar-30011.jpgஇலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.

அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.