இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
முத்துக்குமாரின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது. முத்துக்குமாரிடம், தீக்குளிக்க முன்வா. நாங்கள் உன்னை தடுத்து விடுவோம் என்று சிலர் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.முத்துக்குமார் எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் விடுதலைப்புலிகள் தொடர்பாளர் எழுதியது போல இருக்கிறது. அது நம்நாட்டு தமிழ் அல்ல, இலங்கை தமிழ் போல இருக்கிறது.
அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்றால், அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். பந்த் நடத்துவது தேசத்துரோக முடிவு. அதனை வாபஸ் பெற வேண்டும். அப்படி பந்த் நடத்தும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி.