30

30

பென்டகனுக்கு பராக் ஒபாமா முதல் விஜயம்: ஈராக், ஆப்கானிஸ்தான் குறித்து சிக்கலான முடிவுகள்

obama-pandagan.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோன்பைடன், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முப்படை தளபதி மைகல் முல்லான் ஆகியோர் இராணுவத் தலைமையகமான பெண்டகனில் முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக மிகச் சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பராக் ஒபாமா பாதுகாப்பு தலை மையகமான பென்டகனுக்கு வந்தார்.

உப ஜனாதிபதி ஜோன் பைடன், பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் கேட்ஸ், முப்படைத் தளபதி மைக்கல் முல்லான் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆப்கானிஸ்தான், ஈராக் விடயங்கள் பற்றியே முக்கிய கவனமெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகப் படைகள் அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை மைக்கல் முல்லான் ஜனாதிபதி பராக் ஓபாமாவிடம் எடுத்து விளக்கினார். இதற்குத் தீர்வாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதென்ற தீர்மானத்துக்கு பராக் ஒபாமா வந்தார். படைகளை 16 மாத காலத்துக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது என்ற ஒபாமாவின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் கவனமாக உள்ளபோதும் அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தியே படை விலக்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஈராக்கிலிருந்து படைகளை முற்றாக வெளியேற்றுவதா அல்லது கட்டம் கட்டமாக அழைப்பதா என்பதில் இன்னும் முடிவில்லை. எனினும் மிகக் குறுகிய காலத்துள் படைகள் விலக்கப்படவுள்ளன. சுமார் 36 ஆயிரம் படைகள் விலக்கப்பட்டு அவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என ஒபாமாவின் பேச்சாளர் சொன்னார். உலகெங்கும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மனச்சோர்வடைந்துள்ளது எமக்குத் தெரியும். பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படை விலகல்கள் அமையவுள்ளன.

அது எம்மையும் எமது தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பென பராக் ஒபாமா சொன்னார். அத்துடன் அமெரிக்காவின் அதிகாரங்களை நிலை நிறுத்தவும் அமெரிக்காவுக்கு களங்கம் உண்டுபண்ணவும் இராணுவப் பலமே தூண்டுகோலாகவுள்ளமை தனக்குத் தெரியும் எனவும் ஒபாமா சொன்னார்.

நேட்டோப் படைகளின் சில செயற்பாடுகளால் பொதுமக்கள் பலியாவதும், கற்பழிக்கப்படுவதும் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணியதையும், சில நாடுகளில் படைகள் விலக்கப்பட்டால் தீவிரவாதம் பலமடைவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை அதிகாரிகளுடன் பராக் ஒபாமா கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள படைகளை மிக விரைவாக வாபஸ் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்பட்டார்.

ஆனால் அங்குள்ள படை அதிகாரிகள் தற்போது வழங்கிய தகவல்களால் சற்று ஆழ்ந்து யோசனை செய்வதாக அவரது உரையிலிருந்து புலனாகின்றது. 2008ம் ஆண்டுடன் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பக்தாத் – வாஷிங்டன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபோதும் பின்னர் 2011ம் ஆண்டுவரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் திருத்தப்பட்டமை தெரிந்ததே.  இதனால் ஈராக்கில் உள்ள படைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை ஒபாமா வழங்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

காயமடைந்தவர்களை அப்புறப்படுத்த ஐ.நா. மீண்டும் முயற்சி

redcrose2801.jpgவன்னியில் மோதலில் சிக்கி படுகாயமடைந்திருக்கும் 50 சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாவது முயற்சிக்கு ஐ.நா திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திகள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அனுமதியளித்தும் மோதல்கள் தணிவடைந்துமிருந்தால் வியாழக்கிழமை (நேற்று) நண்பகல் எல்லைப்பகுதியை தாண்டி வாகனங்கள் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கிமூனின் பேச்சாளர் கூறியுள்ளார்.  அதன்பின் காயமடைந்தவர்கள் வவுனியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களை ஏற்றிவரச் சென்ற வாகனங்கள் புதுக்குடியிருப்பில் பல நாட்களாக நிற்கின்றன. சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பின் சுமார் 5 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணை அலுவலகம் கூறியுள்ளது.

யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 2 1/2 இலட்சம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பான் கிமூன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிகளவு முன்னுரிமை கொடுக்குமாறு விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg

வன்னி மக்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல இரு தரப்பினரும் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவேண்டும் – ஜயலத் ஜயவர்த்தனா

hospital.jpgவன்னியில் தற்போது தொடர்ந்து இடம் பெற்றுவரும் கொடிய யுத்தத்தின் காரணமாக காயமடைபவர்களுக்கும் ஏனைய குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கும் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கும் வைத்திய சேவைகளுக்கும் பெருந்தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் செல்லும் மார்க்கத்திற்கும் நோயாளர்களை எடுத்துச் செல்லும் மார்க்கத்திற்கும் விடுதலைபுலிகளும் அரசாங்கமும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது. இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு இணங்க நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போது நடைபெறும் இந்த யுத்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட சுதந்திரபுனம், வள்ளிபுரம், உடையார்கட்டு பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் காயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் பல வைத்தியசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதோடு, சேவையில் இருக்கும் சில வைத்தியசாலைகளின் அத்தியாவசியமான மருந்துப்பொருட்கள், வைத்திய சேவைகள் உட்பட பல வைத்திய செயற்பாடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவசர நிலையிலுள்ள நோயாளர்களுக்குக் கூட உடனடியாக சிகிச்சையளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் கூட போதியளவு அவ்வைத்தியசாலைகளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. எனவே வன்னியில் அல்லல்படும் அப்பாவி மக்களுக்கு அவசிய மருத்துவ சேவையை வழங்குவதற்கு பொறுப்பிலுள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

வன்னி அப்பாவி மக்களின் இன்னல் அறிந்து விஷேடமாக இந்தியா உட்பட்ட சர்வதேச சமூகம் முன்வந்து அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறில்லையாயின் வன்னியில் தற்போதுள்ள 4 இலட்சம் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையே தோற்றுவிக்கப்படும். இவர்களுள் கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள், முதியோர் போன்றோரும் உள்ளமை கவனிக்கவேண்டியது.

வன்னி மக்களுக்குத் தேவையான தட்டுப்பாட்டிலுள்ள மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்ய விரும்பும் தனிநபரோ, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்போ விரும்பினால் தயவு கூர்ந்து என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அவர்கள் 0112507799, 0114527297 என்ற தொலைபேசி இலக்கத்தினூடோ என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

152 மி.மீ. ரக ஆட்டிலறியும் படையினரால் மீட்பு

_army.jpgபுலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும் 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.

சார்க் மின்வலு அமைச்சர்களின் தலைவராக ஜோன் செனவிரட்ன

senaviratn.jpgசார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர் குழுவின் தலைவராக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது. சார்க் நாடுகளின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டின்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் தொடர்பாக நேற்றைய இம் மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை நிவர்த்திக்கும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

2008ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மின்சாரத்துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் நேற்றும் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன. நேற்றைய இம்மாநாட்டில் பூட்டான் பொருளாதாரத்துறை அமைச்சர் லியன்யோ காண்டுவெஞ்சுக், இந்திய மின்வலுத்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, மாலைதீவு வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைச்சர் மொகமட் அஸ்லாம், நேபாள நீர்வ ளத்துறை அமைச்சர் பிஷ்ணு பிரசாத்பாவுடே, ஆப்கானிஸ்தான் மின்வலு, நீர்வளத்துறை பிரதியமைச்சர் அஹமட் வலி ஷெர்ஷாய், பங்களாதேஷ் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஹசன் மஹ்மூத், பாகிஸ்தான் பெற்றோலியத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீ. ஏ. ஷப்ரி, சார்க் செயலாளர் நாயகம் கெண்ட் சர்மா, சார்க் செயலகப் பணிப்பாளர் ஹிலால் ரசாவில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இழப்புகள் குறித்த செய்திகளை வெளியிடுகையில் ஆதாரம் அவசியம்; இல்லாவிடில் நாட்டுக்கு அபகீர்த்தி – அமைச்சர் கெஹலிய

kkhaliya.jpgமோதல் களில் காயமடைபவர்கள் குறித்து செய்தியை வெளியிடும் போது ஊடகங்கள் சரியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் ஊடகவியலாளரின் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதுடன், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டுமென அமைச்சரும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மீள்கட்டுமாணமென்ற பெயரில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு உதவி செய்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு ரூபா கூட தொண்டு நிறுவனங்கள் செலவளிக்கவில்லையென்று முல்லைத்தீவை கைப்பற்றியதையடுத்து நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; புலிகள் சிறிதளவிலான பகுதியில் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு காயப்படுபவர்கள் மற்றும் சுகவீனமடைபவர்கள் புலிகள் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் மேலதிக சிகிச்சையை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையுள்ளது.

இவர்களுக்கு மேலதிக அவசர சிகிச்சையை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் இராணுவ கட்டுப்பாட்டு எல்லைக்கு கொண்டுவந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கையெடுத்தோம். இதன்படி  செவ்வாய்க் கிழமை சர்வதேச செஞ்சிலுவை குழு மற்றும் ஐ.நா. உதவியுடன் அம்புலன்ஸ் மற்றும் வசதிகளை வழங்கி இராணுவத்தினர் வசமுள்ள முன்னணி நிலையில் தயாராயிருந்தனர்.

ஆனால், நோயாளர்கள் வரமாட்டார்கள் என்று தகவல் வந்தது. அவர்களைப் புலிகள் தடுத்து விட்டதாகவும் அந்நோயாளர்கள் அரைவாசி பேரும் வந்து திரும்பிவிட்டனர். சில ஊடகங்கள் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அப்பகுதியிலுள்ள ஊடகவியலாளரை ஆதாரமாகக்கொண்டு செய்தி வெளியிடப்படுகின்றது. ஊடகங்கள் மூலம் செய்திவெளியிடுபவர் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாதவர். அவர் படையினர் எத்திசையிலிருந்து தாக்குவதாகவும் கூறுகின்றார். அவர் வைத்தியராக இருக்கின்ற நிலையில், எவ்வாறு எத்திசையிலிருந்து யார் சுட்டதென்று தெரிவிக்கமுடியும். வைத்தியராக இருப்பவருக்கு எவ்வாறு ஆய்வு செய்து தெரிவிக்க முடியும்.

எனவே ஊடகங்கள் சரியான மூல ஆதாரங்களைக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இவ்வாறு சரியான ஆதாரமற்ற செய்தி வெளியிடுவதால் நம்பிக்கைத் தன்மை அற்றுப் போவதுடன், நாட்டிற்கும் பாதகமாக அமைவதால் இதனை உணர்ந்து ஊடகவியலாளர் செயற்பட வேண்டும். இதேவேளை, கடல்கோள் அனர்த்த மீள்கட்டுமானம் தொடர்பில் விமர்சனங்கள் அரசிற்கு எதிராக எழுந்தன. மீள் கட்டுமானம் அரசினூடாகவல்ல நேரடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்தன.

முல்லைத்தீவில் கடல்கோள் மீள் கட்டுமானத்திற்கு செயற்பட்ட இவ்வாறான நிறுவனங்கள் ஒரு வீட்டைக் கூட நிர்மாணிக்கவில்லை. அந்நிறுவனங்கள் அம்மக்களுக்கு ஒரு ரூபாவையோ அல்லது ஒரு டொலரையோ செலவிடவில்லையென்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்நிலையிலேயே நாம் ஒரு வருடத்திற்கு முன்னர் அங்குள்ள நிறுவனங்கள் செலவிடும் கணக்குகளை காண்பிக்க வேண்டுமென தெரிவித்தோம். இதற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் வீழ்ச்சியடையுமென்று தெரிவித்து விமர்சனம் செய்தனர். அன்று நாம் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமாகியுள்ளது.

குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் நேரடியாக புலிகளுக்கு உதவியுள்ளதை அறியக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நாம் தடைசெய்தது போல் உலக நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு காலம் பிந்திய ஞானம் ஏற்பட்டுள்ளது. இப்போது தான் அவர் பாதுகாப்புப்படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் நாம் எடுத்த தீர்க்கமான முடிவினால் இந்நிலை எட்டப்பட்டதென ஊடகவியலாளரின் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண சபை நேற்று கலைப்பு

மேல் மாகாண சபை நேற்று நண்பகல் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான வெளியிட்டார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளிவரவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தல் சம்பந்தமான முடிவுகளை தேர்தல் ஆணையாளர் பின்னர் அறிவிப்பார். இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான தெரிவிக்கையில், நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் மாகாண சபை கலைக்கப்பட்டதாகவும் இதற்கான தேர்தல் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூடி ஆராய்ந்த பின் அதற்கமைய தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பாளர் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமையவே மேல் மாகாண சபையைக் கலைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், மேல் மாகாண சபை நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். விரைவில் ஊவா மற்றும் தென் மாகாணமும் கலைக்கப்படலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.