ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்து சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்காதிருப்பதன் நோக்கமே தேர்தலை முறைகேடாக நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கேயாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியையும் ஐக்கிய தேசியக் கட்சி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் கண்டியில் இடம்பெறும் வைபவமொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வர் என கடந்த வாரம் முழுவதும் அரச ஊடகங்கள் பெரியளவில் பிசாரங்களை மேற்கொண்டன. இதனைக் கண்ணுற்ற நான் அவர்கள்யார் எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு கண்டியில் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கருகிலிருந்த கட்டிடமொன்றின் மேல் மாடியில் நின்றவண்ணம் அவதானித்துக் கொண்டிருந்தேன். கூட்டத்துக்கு ஊர்வலமாக வந்தவர்கள், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களும் அரச ஊழியர்களுமே என்பதை இந்த இடத்தில் உறுதிபடக் கூறவிரும்புகின்றேன். அரச அலுவலகங்கள், திணைக்களங்களிலிருந்து அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்பட்டிருந்தனர். மத்திய மாகாணத்துக்கு வெளியே இருந்தும் அரச ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பச்சை நிறத் தொப்பிகளையும், சாப்பாட்டுப் பார்சல்களையும் சுதந்திரக்கட்சியினர் விநியோகிப்பதை எமது ஆதரவாளர்கள் நேரிடையாகவே கண்டுள்ளனர். ஆறுவருடங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் ஊர்வலத்தில் காணப்பட்டார்.
மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஜனாதிபதியா அல்லது சரத் ஏக்க நாயக்காவா என்பது குறித்து சந்தேகமேற்பட்டுள்ளது. மத்திய மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் ஜனாதிபதியின் பெயர் மட்டுமே பெரிதாகக் காட்டப்படுகின்றது. சரத்ஏக்க நாயக்காவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வெளிவருவதில்லை அத்துடன் ஜனாதிபதியே தேர்தல் சட்ட விதிகளை மீறிவருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்காக கண்டி மகாவலி ரீச் ஹோட்டலிலிருந்து மாத்திரம் இதுவரையில் 27 ஆயிரம் சாப்பாட்டுப் பார்ச்சல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளின் படி உபசரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு புடவைகளும் சாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. வங்கி ஊழியர்கள் மூவாயிரம் பேருக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் விருந்துபசாரமளிக்கப்பட்டுள்ளது.
மகிந்த சிந்தனை ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய மாகாணத்தில் தோல்வி கண்டது. இந்த மாகாண சபை தேர்தலிலும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை ஜனாதிபதி நன்குணர்ந்துள்ளார். முழு நாடும் ஜனாதிபதி தேர்தலில் ஏமாந்த நிலையில் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களின் மக்கள் ஏமாறவில்லை. கண்டி மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்த சிந்தனை தோற்கடிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்த பொதுத் தேர்தலில் கூட கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் ஐ.தே.க.வே வெற்றியீட்டியது மத்திய மாகாணத்தின் சுதந்திரமுன்னணி முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட குழுவினால் தேர்தல் களத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நன்குணர்ந்ததன் காரணமாகவே அரச வளங்களையும், பணத்தையும் அள்ளி வீசி வெற்றியை தமதாக்கிக் கொள்ள ஜனாதிபதி குறுக்குவழிகளை நாடியுள்ளார். நடப்பவற்றை அவதானிக்கும் போது இத்தேர்தலை இரத்துச் செய்யக் கூடிய முறைகேடுகள் கூடிக் கொண்டே வருகின்றது. தேர்தல் ஆணைக்குழு இருந்தால் அரசு இத்தகைய முறைகேடுகலீடுபட முடியாது.
தேர்தல் காலத்தில் அரச நியமனங்களோ, விண்ணப்பங்களோ கோர முடியாது. ஆனால் இவ்வாறான நியமனங்களும், விண்ணப்பங்கள் கோரப்படுவதும் மத்திய, வடமேல் மாகாணங்களில் தாராளமாக இடம்பெற்று வருகின்றன. இத்தகைய தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நாம் ஒவ்வொன்றாக தேர்தல் ஆணையாளருக்கு பட்டியலிட்டு அனுப்பிவருகின்றோம். அவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.