19

19

தமிழர் விரோத நடவடிக்கைகளை சோனியாகாந்தி தடுத்துநிறுத்த வேண்டும்

vmani.jpgகாங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

மட்டு. மத்திய கல்வி வலயம் 2009 ஐ கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனம்

batti_.jpgமட் டக்களப்பு மத்திய கல்வி வலயப்பிரிவு பாடசாலைகளில் இவ்வருடம் கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல். எம். ஜெய்னுத்தீன் மேற்கொண்டிருப்பதாக ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி ஐ. எல். இஸட் ஆப்தீன் தெரிவித்தார்.

புதிதாக நிறுவப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப்பிரிவில் 62 பாடசாலைகள் உள்ளன. கிழக்கில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறுபட்ட அனர்த்தங்கள், மோதல் சூழ்நிலைகள் காரணமாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப் பிரிவின் பாடசாலைகளது கல்வி நிலைமை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையிலேயே இவ் வருடம் இப்பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில் மிக வேகமான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக கோட்டக்கல்வி அதிகாரி குறிப்பிட்டார்.

கல்வித்துறை இன்று வித்தியாசமான பரிமாணத்தினைக்கொண்டு நாளும் பொழுதும் விரிவடைந்து செல்கின்றது. இந்த மாற்றத்திற்கு ஏற்பவே நாமும் கல்வித் துறையில் வீறு நடைபோட வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயமாகும். தரமான கல்வியின் மூலம் தரமான பிரஜைகளை நாட்டிற்காக உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் கல்விசார் ஆளணியின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் கோட்டக்கல்வி அதிகாரி மேலும் தெரிவித்தார்.