எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் உயிரையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதன் ஊடாக இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிளிநொச்சி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கருணா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல்களில் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளின் உயிர்கள் பலியாகின. இன்னமும் பலியாகத் தேவையில்லை. ஆயுதங்களை கீழே வைத்து அரசியல் நீரோட்டத்துக்குள் வருவதன் ஊடாக சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை அடையலாம். அப்பாவி இளைஞர்களின், யுவதிகளின் உயிர்கள் பலியாவதை தடுக்கலாம். எனவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்றும் கருணா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கும் ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
வன்னி மண் முழுமையாக இன்னும் சில நாட்களில் படையினரால் மீட்கப்பட்டு அங்கு அகதிகளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள் அடங்கிக் கிடக்கும் எமது உறவுகள் பிரபா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்படும் போதுதான் அனைத்துலக நாடுகளில் வாழும் உறவுகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிதைந்து கிடக்கும் எமது தமிழ்ப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பி ஒளி பொருந்திய ஓர் அபிவிருத் திப் பாதையில் மக்களையும் தேசத்தையும் வழிப்படுத்தி எம்மக்கள் நிம்மதியான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனநாயக வழியே ஒரே தீர்வு என்பதை பிரபாகரன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.