மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *