நேற்று பிற்பகல் விசுவமடு சந்தியைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படையணியினர் அதனைத் தொடர்ந்து விசுவமடு நகரப் பகுதி முழுவதையும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். விசுவமடு பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகள், அரசியல் அலுவலகங்கள் மாவீரர் இல்லங்கள் என்பவற்றையும் படையினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
January
January
இலங்கையின் போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தற்போது போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்களை பிடித்துள்ள ராணுவம், தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க போராடி வருகிறது.
இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் அப்பாவிப் பொதுமக்கள் வன்னிக் காட்டுப் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்களில் சுமார் 50 குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்டு, சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “புலிகள் அனுமதித்தால், இன்று பகல் நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.காயமடைந்தவர்களை போர் நடக்கும் பகுதியில் இருந்து மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு, புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. இப்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ராணுவத்துடன் நடந்த கடும் சண்டையில் விடுதலை புலிகளின் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, புலிகள் ஆதரவு இணையதளம் கூறியுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள உடையார்காட்டில் கடந்த திங்களன்று நடந்த கடும் சண்டையில், எல்டிடிஈ மூத்த தலைவரும் சிறப்பு உறுப்பினருமான பாலகுமாரன் படுகாயமடைந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அந்த இணையதளம் கூறுகிறது. ‘ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பின் (ஈராஸ்) முன்னாள் தலைவரான பாலகுமாரன், கடந்த 90-களில் தனது ஆதரவாளர்களுடன் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகளின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஏற்பட்ட மிகமோசமான பாதிப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பரில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் (முன்னாள்) தமிழ்செல்வன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று காலை மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். பின்னர் சட்டென்று தனது கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்து போனது. உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். ‘மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், ‘பெண்னே நீ மாத இதழில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.
.
ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குரின் வாக்குமூலம்
”ஈழத் தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்” என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார். இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, ‘என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்’ என முத்துக்குமரன் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்துக்குமரன், ”எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத் தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்றார்.
முத்துக்குமாரின் மரணத்துக்கு பிறகாவது இந்தியா போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் – வைகோ
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் முத்துக்குமரனின் மரணத்துக்கு பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த வைகோ, மருத்துவமனை உள்ளே சென்று முத்துக்குமரனின் கருகிப்போன சடலத்தைப் பார்த்து அழுதார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரத்தமிழன் முத்துக்குமரன் ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை போக்கியிருக்கிறார். மருத்துவர்கள் தன்னுடைய உயிரை காப்பாற்றிவிடக் கூடாது என்ற வைராக்கியமாக, லட்சியத்தோடு தீக்குளித்திருக்கிறார். கருகிப்போன முத்துக்குமரனின் கால்களைப் பிடித்து அழுதேன். ஈழத் தமிழர்களுக்காக போராடும் வரலாற்றில் முத்துக்குமரனுக்கு தனி இடம் உண்டு. வசந்தம் தேடும் வாலிப வயதில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுடைய இன்னுயிரை கொடுத்திருக்கிறார். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் எரிமலை போல் வெடித்தார்கள்.
அதேபோலத்தான் இப்போது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக, தமிழக இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த போராட்டம் பெரிய அளவில் எழுச்சித் தரும். முத்துக்குமரனின் மரணத்துக்கு பின்பாவது இந்திய அரசு இலங்கையில் நடக்கும் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்னியில் கைக்குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் என ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்துக்கு அஞ்சி தவிக்கின்றனர். இலங்கை அதிபர் சர்வதேச செஞ்சசிலுவை சங்கங்கள், பத்திரிகையாளர்களை அழைத்து உண்மை நிலவரம் என்ன என்பதை அறிவிக்க வேண்டும்.
முத்துக்குமரன் சாவுக்கு இந்திய அரசுதான் பொறுப்பு: திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். இதற்கு மேலேயும் இந்திய அரசு ஈழத்தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் பல முத்துக்குமரன் உருவாகுவதைத் தடுக்க முடியாது. சிங்கள அரசுடன் இணைந்து இந்திய அரசு தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு மனநோய் பிடித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் முத்துக்குமரனின் மரணத்துக்கு இந்திய அரசே காரணம் என்றார்.
முத்துக்குமார். கடைசியாக எழுதிய கடிதம்
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம்.
வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சகதமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா? ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.
உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலி ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் 99 வீதமான இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் இணக்கப்பாடு இல்லாத முக்கிய ஒருசில விடயங்களை அடுத்த சர்வகட்சி மாகாநாட்டின் மூலம் எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் 104 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றபோது இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்த அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இணக்கம் காணப்படாத ஏனைய ஒரு வீதத்தையும் சர்வகட்சி மகாநாட்டின் மூலம் இணக்கப்பாடு எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் 105 ஆவது கூட்டத்தை 2 அல்லது 3 ஆம் திகதியில் நடத்த இருந்த போதிலும் அத்தினங்களில் கண்காட்சியொன்று இடம் பெறவுள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் (27) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியவேளை வன்னியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு எதனையுமே எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று மட்டுமே மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்புக்கு திடீர் விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிவிட்டு புதன் அதிகாலை அவசரமாகப் புதுடில்லி திரும்பியது தெரிந்ததே.
“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் இலங்கை அரசைக் கோரியுள்ளோம்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளின் மனிதாபிமான நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது என்றும் அரசு பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உறுதியளித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசு பாதுகாப்பு வலயங்களை மதிக்கிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என்று முகர்ஜி சொன்னார்.
பொதுமக்களின் அவலங்களை நீக்கி அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது இந்த இலங்கை விஜயத்துக்கான அடிப்படைநோக்கம் என்றும் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.அனைத்து இலங்கையர்களும் குறிப்பாக மோதலின் பாதிப்பை அனுபவித்துள்ள தமிழ் மக்கள் கூடிய விரைவில் சுமூக வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவோம் என முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி, இலங்கை – இந் திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த கூறினார். அதேநேரம், அதில் கூறப்பட்டு ள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற்கான வழிமுறைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் முகர்ஜி கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இலங்கை சம்பந்தமாக தெரி வித்துக்கொண்ட விடயங்க ளையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன். இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்தி கள் இரு நாடுகளுக்குமி டையிலான நட்புறவுகள், பரஸ்பர அக்கறையுள்ள பிரா ந்திய விடயங்கள் குறித்தும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி னோம். இலங்கை-இந்திய உறவுகள் மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றன. எமது உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் உணரப்பட்டு வருகின்றது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து தான் கொண்டுள்ள நம்பிக்கை களை இலங்கை ஜனாதிபதி விளக்கினார். வடமாகாணம் உட்பட இலங்கை முழுவதும் இயல்பு நிலையைக் கட்டியெழுப்பத் தேவையான அரசியல் சந்தர்ப்பத்தை வழங்க இராணுவ வெற்றிகள் வழிவகுத்துள்ளன. 23 வருடகால மோதல்களின் பின் இந்த நிலை தோன்றியிருப்பதாக நான் தெளிவு படுத்தினேன். இலங்கை ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தன் மனநிலையும் இதுவே என்று கூறினார். இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து சகல இலங்கையரும் குறிப்பாக மோதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.
இந்த வகையில் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்ப நாம் தயா ராக இருக்கின்றோம் என்பதையும் நான் இலங்கை ஜனாதிபதிக்குக் கூறினேன். இதன்மூலம் யுத்தத்தின் அழிவுகளிலிருந்து விடுபட்டு உறுதியான சமாதானத்துக்கான பொருளாதார மற் றும் அரசியல் அடித்தளங் களை இடுவதன் மூலம் சகல சமூகங்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படும் இடங்களில் புனரமைப்புப் பணிகளில் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளோம். இந்திய அனுசரணையுடன் 500 மெகா வோட் மின் உற்பத்தி திட் டம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதையிட்டு நான் மகிழ்க்சியடை கின்றேன்.
இலங்கை அரசியல் சாசன த்தின் 13வது திருத்தத்தை மிக விரைவில் அமுல் செய்யப் போவதாகவும் இல ங்கை ஜனாதிபதி கூறினார். இது 1987ம் ஆண்டு இல ங்கை-இந்திய ஒப்பந்தத் தின் கீழ் உருவாக்கப்பட் டது. இதில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு யோசனை களை மேலும் விருத்தி செய்து அமுல் செய்வதற் கான வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகின்றார். மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம். மோதல்களின்போது தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் ஏற் படுத்தப்பட்டுள்ள பாதுகா ப்பு வலயத்தை மதித்து நட க்கப் போவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப் படும் மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும்.
எமது கலந்துரையாடலின் பின் தமிழ்நாடு முத லமைச்சர் திரு. மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரடியாகப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக விரைவில் இயல்பு நிலையையும், ஜனநாயகத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியது, சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் நிலைநிறுத்துவதில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்த இலக்கை அடைய இந்தியா சகலரோடும் இணைந்து சகல வழிகளிலும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் “யுத்த நிறுத்தம் அல்ல’ – கெஹலிய ரம்புக்வெல
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் யுத்தநிறுத்தம் குறித்து பேசுவதற்காக அல்லவென்றும் வடக்கை முழுமையாக மீட்டதும் அடுத்தகட்டமாக அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதே முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று புதன்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் முகர்ஜியின் கொழும்பு பயணம் இடம்பெற்றதாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறினார். பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
இலங்கை நிலைவரம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தார். அவரை மட்டும் அழைக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியே வந்துள்ளார். கருணாநிதி சுகவீனம் காரணமாக வரவில்லை. அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வேலை காரணமாகவோ என்னவோ ஜெயலலிதா வரவில்லை.
பிரணாப் முகர்ஜி இங்கு வருவதற்கு முன் இந்தியாவில் வைத்து தமிழ் மக்கள் குறித்தே தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை நாம் வழங்குவதாகவும் எனினும், விடுதலைப்புலிகள் தொடர்பில் எதுவும் பேசப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார். இதிலிருந்து பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தில் இந்தியா இருப்பது தெரிகிறது. ஜனாதிபதியுடனான முகர்ஜியின் சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் குறித்தல்லாமல் வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்குள்ள மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டம் முதல் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்தே பேசப்பட்டது. இதனை செய்வதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக வடபகுதியை மீட்டு நாடு ஒன்றிணைக்கப்படுவதை இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் பெறுவதாக உணர்கின்றேன். இதன்பின் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பயமின்றி சுதந்திரமாக வாழமுடியுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் வலுவாக அபிவிருத்தியடைந்து வருகின்றன என மேலும் தெரிவித்துள்ள முகர்ஜி, இலங்கையின் வடபகுதியில் புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார் என்பதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், விடுதலைப் புலிகளைத் தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு அவர்கள் கேகாரிக்கை விடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் கூறியுள்ளார். “வன்னியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயங்கள் மதிக்கப்படும் என்றும், பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரசு பிரணாப் முகர்ஜியிடம் உறுதியளித்தது.’ எனக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகர்ஜியின் கொழும்பு பயணம் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றம்
தமிழர்களை பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் ஏமாற்றமாக முடிந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதுடன் தமிழினத்துக்கு எதிரானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய வேளை வந்துவிட்டதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;
தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில், இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்ற தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை ஜனாபதியிடமும் அயலுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. போரை நிறுத்த என்பதைக் கேட்டு வருவதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு நேரில் சென்று வரத் தேவையில்லை.
இன்றே போர்நிறுத்தம். நாளை பேச்சுவார்த்தை. அடுத்து அமைதியான வாழ்வு. அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப்பேரவைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.
தமிழினத்தை அழித்துவிட முயற்சிப்போருக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடுவெடுத்துச் செயல்படுவோம். தமிழினத்தைக் காப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் 320 சிவிலியன்களை சிகிச்சைக்காக வவுனியாவிற்குக் கொண்டு வருவதைப் புலிகள் தடுப்பதானது பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-
வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்தவர்கள், நோயாளர்களென 320 பேர் புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியாவிற்குக் கொண்டுவந்து சிறந்த முறையில் சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் ஐ. நா. அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் பலரும் வன்னிக்குச் சென்றுள்ளனர். இறுதி நேரத்தில் அந்த நோயாளிகளை ஒப்படைக்க புலிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கம் உச்ச அளவில் சிகிச்சை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே காயமடைந்தோரை அழைத்துவர தீர்மானித்தது.
அப் பகுதியில் பல சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் சிவிலியன்களா அல்லது பயங்கரவாதிகளா என எப்படி இனங்காண்பது? ஆயுதத்தைக் கீழே வைத்தால் புலிகளும் சிவிலியன்கள்தானே? இவர்கள் சிவிலியன்கள் என ஒரு அரச சார்பற்ற அமைப்பினருக்கு எவ்வாறு இனங்காண முடிந்தது?
எந்த சிவிலியன்களை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் இது பற்றி அங்குள்ள டாக்டர்கள் தமக்குத் தகவல் தந்ததாகத் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் தகவலின்படி அத்தகைய பெயருடைய எவரும் அரசவைத்தியர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த டாக்டர்கள் தகவல் தெரிவிக்கையில்:-
இராணுவத்தினரே இம்மக்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர்கள் எவ்வாறு இப்படி கூற முடியும். இவர்கள் புலிகள் அமைப்பின் டாக்டர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு டாக்டர் எப்படி யுத்த நிலைமை சம்பந்தமாக விளக்கமுடியும்? எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பினார்.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.
அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இலங்கை வர வேண்டும் என்றும், பிடித்து வைத்துள்ள தமிழர்களை விடுவிக்கும்படி விடுதலைப் புலிகளை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜபக்சே கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப் புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்றார்.
மேலும் இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். இதற்காக கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் ராமேஸவரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் வடிவேலு. இப்போராட்டத்தில் பேசும்போது, ‘’நம்ம தமிழச்சிகளை கற்பழித்து உடம்பு முழுக்க பிளேடால் கிழிக்கிறான் சிங்களன். இந்த கொடுமையெல்லாம் எப்போது முடிவுக்கு வரும்’’ என்று அப்போது வேதனைப்பட்டார். பின்னர், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த இலங்கை பிரச்சனை போராட்டத்திலும் கலந்து கொண்டு குரல்கொடுத்தார்.
இந்நிலையில், இலங்கை பிரச்சனையை முன்வைத்து 7 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை சந்தித்தார் வடிவேலு. அப்போது, ‘’இலங்கையில் 300 பேர் இறந்துவிட்டனர், 1000 பேர் காயமடைந்தனர் என்ற செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கு. தமிழனாக ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வேதனையாக இருக்கு’’ என்றார். அவர் மேலும், ‘’மாணவர்கள் போராட்டம்தான் எல்லா போராட்டத்திற்கும் வெற்றியை அளித்துள்ளது. இப்போராட்டமும் வெற்றியை அளிக்கும்’’ என்றார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு இமாம் கொமெய்னி நிதி நிறுவனத்தால் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் மஃமூத் றகிமி கோஜி கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.
ஈரான் தூதுவர் மஃமூத் றகிமி கோஜிக்கும், கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸ¤க்கும் இடையே நேற்று முன்தினம் (27) ஈரானிய தூதுவராலயத்தில் ஒரு மணிநேரம் இச் ந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது கல்முனை மாநகரத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பற்றி முதல்வர் உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கையுடனும், ஜனாதிபதியுடனும் ஈரான் கொண்டுள்ள தொடர்புகளுக்கும் ஈரான் இலங்கைக்கு வழங்கி வரும் அபிவிருத்திசார் உதவிகளுக்கும் தனது மகிழ்ச்சியை தெரிவித்த கல்முனை முதல்வர் கிழக்கு மாகாணம் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படும் கைத்தொழில்துறை, விவசாயம், மீன்பிடி என்பனவற்றின் முன்னேற்றம் பற்றியும் முதல்வரினால் எடுத்துக் கூறப்பட்டது. புலிகள் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தற்போதைய அரசியல் சூழல், கிழக்கு மாகாண நிர்வாக செயற்பாடுகள், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கல்முனை முதல்வர் ஈரான் தூதுவருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்துள்ள கலாசார பெருவிழா மார்ச் மாதம் முதல்வாரத்தில் நடைபெறவு ள்ளது. இவ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள் ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் ஈரானிய உயர் ஸ்தானிகருக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இக் கலாசாரப் பெருவிழாவில் ஈரான் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஈரான் நாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கும் உதவித் திட்டத்தில் ஈரான் கிராமிய மின் திட்டங்களுக்கு கூடுதல் உதவி புரிகின்றது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்கும் இம்மின்சாரத் திட்டத்தை விஸ்தரிக்க வேண்டுமெனவும் கல்முனை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.