2009

2009

பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்

intercity-bus.jpgபயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ் மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் கொண்டிருக்க வேண்டிய பயண வசதிகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளை கவர்வதற்கான சிறந்த பயண சேவையை வழங்கும் நோக்கில், இந்த அறிவித்தலை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கிணங்க, ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரைச் சொகுசு பஸ்களில் பின்வரும் 8 பயணிகள் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். பயணிகள் ஆசனம் 700 மில்லிமீற்றர் உயரமும் 40 பாகை சரிவையும் கொண்டிருப்பதுடன் பக்க வாட்டில் கை இருக்க வசதிகள் இருக்கவேண்டும்.

ஆசனத்துக்கு மேலே இருக்க வேண்டிய இடைவெளி 680 மில்லிமீற்றர் ஆகவும் இரு ஆசனங்களுக்கு இடையிலான தூரம் 300 மில்லிமீற்றராகவும் இருப்பதுடன் ஆசனங்கள் இலக்க மிடப்பட்டிருப்பதுடன் பயணச் சீட்டுகள் ஆசனங்கள் தொடர் இலக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ஆசனங்களின் எண்ணிக்கை 40க்கு அதிகமில்லாமலும் பொதிகள் வைப்பதற்கான இடம் ஒரு சதுர மீற்றர் இடைவெளி கொண்டதாகவும் இருப்பதுடன் சாரதிக்கான பக்க கண்ணாடிகள் தவிர ஜன்னல் கண்ணாடி இலேசான நிறம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

அத்துடன், சொகு பஸ் வண்டிகளுக்கு இந்த வசதிகளுடன் மேலதிகமாக ஆசனங்கள் 25 ஆக இருப்பதுடன் குளிரூட்டப்பட்ட பஸ் சேவையாக இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் நிலையான கொள்கையை கொண்டிருக்கவேண்டும்’

vote.jpgசமூகத் தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அச்சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் ஆளுமையிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய மாகாணசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் மாட்டு வண்டிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவின் தலைமை வேட்பாளரான எஸ். ஸ்ரீநிவாசன் இத்தேர்தலை தமிழர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் மந்தண்டாவளை பிரதேச தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஒரு சமூகம் ஆளுமை மிக்க தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்வதன் மூலமே தமது சமூகத்திலிருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுக்ககூடியதான புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

எனவே இந்த மாகாணசபைத்தேர்தலில் மலையக தமிழ் மக்கள் தம்மை முறையாக வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்துக்கொள்வது அவசியமாகும் ஒரு சமூகத்தை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் பச்சோந்திகளைப் போல் அவ்வப்போது நிறமாறிக்கொண்டிராது, நிலையானதும் உறுதியானதுமான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும். தனது ஆளுமையை தனது மக்களது மேம்பாட்டுக்கு தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாத்தளை மாவட்டத்திலேயே பெருமளவிலாக கல்விமான்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். பெரும்பாலும் சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமையும் உறுதியான அரசியல் கொள்கையுமுள்ள தலைமைத்துவமொன்றை உருவாக்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதால் பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வாக்குப்பலமிருந்தும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரைக் கூட தெரிவுசெய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அன்றுமுதல் இன்றுவரை மாத்தளை வாழ் தமிழ் சமூகம் குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக பெரும்பான்மை சமூக கட்சிகளுக்கே இரையாகிப் போயுள்ளனர். இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட மாத்தளை மாவட்டத்தில் பெரும்பான்மைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழர்கள் வெற்றிபெறவேண்டும். குறைந்தபட்சம் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெறவேண்டும். இதேசமயம், சுயேச்சைக்குழுவில் போட்டியிடும் நாம் வெற்றிபெறவேண்டுமெனில் சுமார் 6 ஆயிரம் விருப்புவாக்குகளை பெற்றுவிட்டால் போதுமானது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும் 18 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும் என்றார்.

இரு தசாப்த கால அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்றுப்புள்ளி – அமைச்சர் றிஷாட் பதியுதீன்

risard.jpgஇரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முற்றுப் புள்ளி வைக்கும் காலம் அண்மித்துவிட்டதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னாரில் தெரிவித்தார். மன்னார் முருங்கன் பரியாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான இரு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் சந்தியாகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது; சமூகத்திற்கான விடுதலைக்கு போராடுவதாகக் கூறிக்கொண்டு தனது இனத்தைச் சார்ந்தவர்களை அழித்துவந்த வரலாற்றை நாம் ஒரு போதும் மறந்துவிட முடியாது. இந்த காரணத்தால் இன்று சுமார் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு இந்தியாவில் அகதி முகாமில் அவலம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அதேபோல் எத்தனை உயிர்களை எமது சகோதரர்கள் இழந்துள்ளனர்.

உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய நாங்கள் இன்று சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு கூட பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்கள் எனக்களித்த வாக்குப் பலத்தால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கும் வடக்கில் வாழும் எமது மக்களுக்குமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கிலஸ் பிள்ளை, கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல், அமைச்சின் இணைப்பு செயலாளர் அலிகான் ஸரிப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்வதில் புதிய நடைமுறை

ballot-box.jpgதேர்தல் மோசடிகள் இடம் பெறுவதை தடுப்பதற்காக தேர்தல் திணைக்களம் இம் முறை சில விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் பந்துல குலதுங்க தெரிவித்தார்.

வழமையாக வாக்களிப்பு முடிவடைந்தவுடன் வாக்குப்பெட்டிகளில் கட்சி பிரதிநிதிகளின் ஸ்ரிக்ர்கள் ஒட்டப்பட்டபின் வாக்குப் பெட்டிகள் சீல் வைத்து எடுத்துச் செல்லப்படும். ஆனால் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வழியில் மோசடிகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான பொதிகளில் இட்டு ‘சீல்’ வைத்து வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுடன் கட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் உடன் செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தில் வாக்கு மோசடிகள் இடம்பெறுவதை தடுக்கவும், விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படாதெனவும் வாக்காளர்அட்டை அற்றவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

school2701.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நீக்க இரத்ததான முகாம்கள் நடத்தப்படுவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதாரநல கல்வி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். முருகானந்தம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேற்படி நிலையத்தின் மாணவர்களினால் 30 பைந்த் இரத்தம் சேகரிக்கப்பட்டது. நாளொன்றுக்கு 50 முதல் 60 பைந்த் இரத்தம் இரத்த வங்கியிலிருந்து விநியோகிக்கப்படுவதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

வன்னி மனிதாபிமான நெருக்கடி குறித்து இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் கவலை.

peneetha.jpgஇலங் கையில் ஏற்பட்டிருக்கும் “மனிதாபிமான நெருக்கடி’ தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவிடம் கவலை தெரிவித்துள்ளனர்.  “சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வோல்ட்னர், ஐ.நா.மனிதாபிமான முகவரமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் பாதையை நோக்கிய அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று பெனிற்றா கூறியுள்ளார். அதேசமயம், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயம் செயற்படும் முறைமை குறித்து விளக்கங்களை அளிக்குமாறு பெரேரோ வோல்ட்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையாளர் கதரீன் அஸ்ரனும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகளையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, பெல்ஜியப் பிரதமர் ஹேர்மன் ரொம்பையையும் சந்தித்துள்ளார

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

tna.jpgவன்னியில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  வடக்கு, கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;

வன்னி நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாய மடைந்தவர்களுக்குக் கூட போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் கடமைகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை கூட மரணச் சடங்குகள் செய்ய முடியாமல் தொடர்ச்சியான விமான, ஷெல் தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூர்ந்தும் தாக்குதலைக் கண்டித்தும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பக் கோரியும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஷெல் வீச்சுகளை நிறுத்தக் கோரியும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தமிழர் தாயம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தினத்தில் பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாயகத்தில் உள்ளவர்கள் ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.  கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.

வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.  போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.

தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை: ராஜபக்சே உறுதியளித்தாக பிரணாப் முகர்ஜி தகவல்

prathaf-mahi.jpgவிடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியை மதித்து நடப்பதாகவும், ராஜபக்சே தெரிவித்ததாக பிரணாப் கூறியுள்ளார்.  அவசர பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக பிரணாப் கூறினார்.

அதற்கு ராஜபக்சே போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாக பிரணாப் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்கும் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொக்கலகாமா மற்றும் சில அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. இதற்கிடையே வன்னிப்பகுதியில் போரில் காயமடைந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்களை காப்பாற்ற உதவ தயார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படலாம்

lanka-map-02.jpgமேல், ஊவா, தென் மாகாண சபைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம். இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் ஒபாமா.

obama.jpgஅமெரிக் காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது.இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா. மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர்.இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன்.இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதை புரியவைப்பதே எனது பணி.  பரஸ்பர நலன்,மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.இதை அரேபிய,இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது.இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது. பதவியில் அமர்ந்து 100-நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன். அல் காய்தா தலைவர்களான ஒசாமா பின்லேடன்,ஜவாஹிரி ஆகியோரின் கருத்துகள், யோசனைகளை யாரும் இப்போது செவிகொடுத்து கேட்பது இல்லை. எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம்.

பின்லேடன்,ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது.முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன்.பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.