2009

2009

புலிகளின் முக்கிய தலைவர் பலி; வாகனமும் சேதம். ஆயுத, ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கிய நிலையில் புலிகள்

armyvictory.gifபுதுக் குடியிருப்பில் அம்பலவன் பொக்கணை, மற்றும் முள்ளியவளை, சாலை ஆகிய பகுதிகளில் தேடுதல் நடத்தி வரும் படையினர் பெருந்தொகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தி வந்த பங்கர்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

இதேவேளை, படையினர் நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பயணித்த வாகனம் படைகளின் தாக்குதலுக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

விடுதலைப் புலிகள் தற்போது பெரும் ஆயுதப் பற்றாக்குறைக்கும் ஆட்பற்றாக்குறைக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் பெருமளவான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதுடன், இராணுவத்தினர் புலிகளின் பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட தலைவர்கள் மட்டத்திலுள்ள சகலரும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னேறிச் செல்லும் படையினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய, வடமேல் மாகாண சபைகளின் முதல்வர்கள், அமைச்சர்கள் சத்திய பிரமாணம்

cp-cm.jpgமத்திய, வட மேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் இரு மாகாண சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும் வடமேல் மாகாண முதலமைச்சராக அதுல விஜேசிங்கவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.

மத்திய மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட சரத் ஏக்கநாயக்க அம்மாகாண சபையின் நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனிதவலு, கல்வி கலாசாரம், உல்லாசத்துறை, போக்குவரத்து, காணி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

வடமேல் மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அதுல விஜேசிங்க அம்மாகாணத்தின் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம், மனித வலு, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள், காணி, போக்குவரத்து, சூழல், சுற்றுலாத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகம் மற்றும் முதலீட்டு இணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

மத்திய மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம் சமூக நலன்புரி, சிறுவர் நன்னடத்தைச் சேவை அமைச்சராக எதிரிவீர வீரவர்தனவும், விவசாயம், சிறுநீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி கமநல அபிவிருத்தி, சூழல், சமுத்திர வள அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு எரிசக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பந்துல யாலேகமவும், கைத்தொழில் விளையாட்டுத் துறை, மகளிர் விவகாரம், கிராமிய அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசாரம், கல்வி, இளைஞர் விவகார அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

வடமேல் மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், கமநல அபிவிருத்தி அமைச்சராக கே. டபிள்யூ. சாந்த பண்டாரவும், சமூக நலன்புரி சிறுவர் நன்னடத்தை மகளிர் விவகாரம் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக நிரஞ்சன் விக்கிரமசிங்கவும், நெடுஞ்சாலை அபிவிருத்தி, மின்வலு, வீடமைப்பு நிர்மாணத்துறை கடற்றொழில் அமைச்சராக அருன்திக பெர்னாண்டோவும் சுகாதார, சுதேச மருத்துவ, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக அசோக வடிமங்காவவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சகல மாகாண சபை பிரதிநிதிகளும் தம்மைத் தெரிவு செய்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

cp-cm.jpg

சமையல் எரிவாயூவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு!

gas_silindar.jpgநேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் மேலும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ கிறேம் கொண்ட லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்று 334 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 310 ரூபாவினலும் குறைக்கப்படும்

கூட்டுறவு மொத்த விற்பனை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை அறிவித்தார் கடந்த ஆறு மாத காலத்துக்குள் லாப் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 790 ரூபாவினாலும் ஷெல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 554 ரூபாவினாலும் அரசாங்கம் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
 

நிவாரணக் கிராமங்களில் சின்னம்மையினால் பீடிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க தனியான ஆஸ்பத்திரி

trico.gifவவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத் தங்கல் முகாம்களில் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பூவரசன் குளம் அரசினர் வைத்தியசாலை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரை அங்கு சுமார் 143 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துகள், தாதியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த பொது மக்கள் பல நாட்களாக காட்டுக்குள் ஒளிந்தும், புழுதியில் படுத்துறங்கியும், நீராட வசதியின்றியுமே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்தனர். இதனால், அவர்களுக்கு சின்னம்மை வைரஸ் தொற்றியுள்ளது. முகாம்களுக்குள் வந்தவுடனேயே சின்னம்மை வைரஸ் தலைதூக்கியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இவர்களை முகாம்களில் வைத்திருக்காமல் வேறுபடுத்தி வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், சின்னம்மையினால் பாதிக்கப்பட்ட 143 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களை தங்கவைக்க தற்காலிக கொட்டகைகளை அமைக்க மாவட்ட செயலகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்னி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் வசித்தவர்கள்.

வவுனியாவில் பகலிலும் இரவிலும் கடும் வெப்பமான காலநிலை உள்ளது. கூடாரங்களிலும், தகர கொட்டகையிலும் தங்கியுள்ள மக்களே சின்னம்மை நோய்க்கு இலக்காகிவருகின்றனர் எனவும் செட்டிகுளம் வைத்தியசாலையிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ள மருத்துவ குழுவினர் நிவாரணக் கிராமங்களில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கமு/ பெரியநீலாவணை விஷ்ணுவில் 4 ஆசிரியர், 29 மாணவர் திடீர் மயக்கம்

medicine-01.jpgகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய த்தின் 4 ஆசிரியர்கள் உட்பட 29 மாணவர்கள் திடீர் மயக்கம், மற்றும் உடல் அழற்சி காரணமாக மருதமுனை, கல்முனை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் பெற்றோர் பாடசாலைக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் பதற்றத்துடன் ஓடித்திரிந்தனர்.

பாடசாலைக்கருகேயுள்ள தோட்டத்தில் காய்கறிகளுக்கு விசிறிய கிருமிநாசினி காற்றோடு கலந்து பாடசாலை மேல்மாடியில் நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மேல் பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மயக்கம், உடல் எரிவு, அழற்சி காரணமாக மருதமுனை வைத்தியசாலையில் 4 ஆசிரியர்களும் 23 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் அனைவரும் வீடு திரும்பினர் என மருதமுனை ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. மேலும், கல்முனை பெரியாஸ்பத்திரியில் இரண்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில வினாடிகளில் மாணவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரியை நோக்கி அழுதவண்ணம் படையெடுத்தனர். சிலர் எங்கே எமது பிள்ளைகளை கொண்டு சென்றார்கள் எனத் தெரியாமல் கல்முனை அஷ்ரஃப் ஆஸ்பத்திரிக்கும் சென்று அழுது புலம்பினர்.

கல்முனை பெரியாஸ்பத்திரியிலுள்ள இரண்டு மாணவர்களைத் தவிர ஏனையோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும், வைத்திய சாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். எம். ஹாரிஸ், டாக்டர் மெளலானா, டாக்டர் உவைசுல் பாரி ஆகியோர் கொண்ட குழுவினர், உடனடி சிகிச்சைகளை வழங்கினர்.

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி

eastern-university.jpgவடக்கு, கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம், சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு கல்வியைத் தொடர்ந்த அனைத்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இக்கொலைச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு அங்குள்ள முஸ்லிம், சிங்கள மாணவர்களும் தமது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற முஸ்லிம், சிங்கள மாணவர்களும் ஏனைய பகுதி பல்கலைக்கழகங்களுக்கு கல்விக்காக இடமாற்றப்பட்டனர்.

பிந்தியதாக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்

குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.

அரிசிக்கு அதிக விலை அறவிட்டால் நடவடிக்கை வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு எச்சரிக்கை

bandula_gunawadana.jpgகட்டுப் பாட்டு விலையை விட அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, சம்பா வகை அரிசியை 70 ரூபாவுக்கு அதிகமாகவும், நாட்டு அரிசியை 65 ரூபாவுக்கு அதிகமாகவும், விற்பனை செய்யும் சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான இத்தீர்மானம், கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் வாராந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதை அடுத்து அங்கு ஒரு இலட்சத்து 31,176 ஏக்கர் புதிய வயல் நிலங்களில் நெற் செய்கை மேற்பட்டுள்ளதால், பெருமளவான நெல் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.

திருகோணமலையில் 29,008 ஏக்கர் புதிய வயல் நிலத்திலும் மட்டக்களப்பில் 63,365 ஏக்கர் நிலத்திலும் அவ்வாறே அம்பாறையில் 38,803 ஏக்கர் நிலத்திலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அறுவடை செய்யப்படும் நெல்லில் குறைந்தபட்சம் 60 வீதமான, 4 இலட்சத்து 80,260 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விற்பனைக்காக விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து 59 சிவிலியன்கள் கடல்வழியாக நேற்று வருகை

police_spokperson.jpgமுல்லைத் தீவு பழைய மாத்தலன் பகுதியிலிருந்து 59 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை கடல் மார்க்கமாக வந்து கடற் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைக் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 59 பேரும் 5 டிங்கி படகுகள் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் இவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் 120 பேர் வருகைதந்துள்ளனர். இவர்களில் 47 பெண்களும், 23 சிறுவர்களும், 25 சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 120 பேரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து ஓமந்தைக்கு வந்துசேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதார வீழ்ச்சியால் வறிய மக்கள் மேலும் அவலத்தில்

economics.jpgசர்வதேச பொருளாதார பின்னடைவால் செல்வந்த நாடுகள் தமது வரவு செலவுத்திட்டத்தில் உதவி வழங்கும் தொகையை பல பில்லியன் டொலர்களால் குறைத்து ஒதுக்கீடு செய்யவுள்ள நிலையில், உலகின் வறிய மக்கள் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 50 இற்கும் அதிகமான குழுக்கள் உதவி வழங்கும் நடவடிக்கை கூட்டணியில் உள்ளன. இவற்றில் 175 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருடாந்தம் 9 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தனிப்பட்டவர்கள், வர்த்தக நிறுவனங்கள், மன்றங்கள் என்பனவற்றிடமிருந்து இந்த வருடம் 1 பில்லியன் டொலர் குறைவாகவே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமை (பொருளாதார வீழ்ச்சி) 2010 இற்கும் தொடருமானால் உலகின் வறிய மக்கள் வாழும் பகுதிகளுக்கான உதவிகள் கணிசமான அளவு குறைந்துவிடுமென எதிர்பார்க்கலாம் என்று செயற்பாட்டுக்குழு தலைவர் சாவ் வேர்த்திங் ரன் ராய்ட்டருக்கு கூறியுள்ளார். பிரிட்டனில் பவுண்ஸின் பெறுமதி வீழ்ச்சியால் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிம்பாப்வே, இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் நெருக்கடியில் மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் பல சமூகங்களுக்கு உதவித் தேவைகள் அதிகரித்துள்ள தருணத்தில் இந்த உதவி முடக்கம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் 322 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வருமானம் அடுத்த வருடம் அரைவாசியாக வீழ்ச்சி கண்டுவிடுமென தெரிவிக்கப்படுகிறது.