2009

2009

அக்குரஸ்ஸ தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு கவனம்!

akkurassa-02.jpgமாத்தறை, அக்குரஸ்ஸவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அக்குரஸ்ஸ,  கொடபிட்டிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழா வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்தி,  குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் அவற்றை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் ஆணைக் குழு பொலிஸ்மா அதிபரைப் பணித்துள்ளது. இந்த வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டார்களா என்பது குறித்தும் பொலிஸ் திணைக்களம் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இது வரை 99 பேர் கைது செய்யப்பட்டு விசாரணகளுக்குட் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். 

பிரபாகரனை அழிக்க நினைத்தால் கடும் விளைவு-வைகோ

vaiko.jpgபிரபா கரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிய இக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

இதில் வைகோ பேசுகையில், இலங்கை தமிழ் மக்களின் தலைவராக பிரபாகரன் போன்று யாரும் தோன்ற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு ஏன் கூறவில்லை? தமிழக சட்டசபை தீர்மானம் என்ன ஆனது? தமிழன் என்ற முகவரியை உலகத்திற்கு தந்தவர் பிரபாகரன்தான். தேசிய பாதுகாப்பு சட்டத்தை காட்டி எங்களை யாரும் மிரட்ட முடியாது என்றார்

“முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்”‘: வருண் காந்தி

varun-gandhi.jpg‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்”  என மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய பேச்சால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில்,  இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான். வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருந்து பொருட்களை உடனடியாக அனுப்பக் கோரி அமைச்சிற்கு முல்லைத்தீவு , கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடிதம்

medicine.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் நிலவும் மருந்து பற்றாக்குறைகளை விளக்கியும் , நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளரால் சுகாதார அமைச்சு, அமைச்சின் ஆலோசகர் டாக்டர் வி.ஜெகநாதன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக போதுமான மருந்து வகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு கிடைக்கவில்லை .கடந்த வருட இறுதி காலாண்டிற்கும், இவ்வருட முதல் காலாண்டிற்குமாக 5 சதவீதத்திற்கும் குறைவான மருந்து வகைகளும், துணி வகைகளும் கிடைக்கப்பெற்றன.இது தொடர்பாகவும் மருந்து பொருட்களின் தேவைகள் குறித்தும் ஏற்கனவே இரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அறிவித்திருந்தோம்.

மோதல்கள் காரண்மாக அதிகமானோர் காயமடைகின்றனர்.எனவே அதிகளவு மருந்துப் பொருட்கள் தேவைப்படுகின்றது.முக்கியமாக அனெஸ்தெடிக்(Anesthetic),அன்டிபயோடிக்ஸ்(Antibiotics),அனல்ஜெசிக்ஸ்(Analgesics) மற்றும் IV புளூயிட்(IV fluids) போன்ற மருந்து வகைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

2009 ஜனவரி மாதம் வரை 500 பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், பின்பும் உயிரிழந்துள்ளமை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேவேளை வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் படுகாயமடைந்தமையே உயிரிழப்பிற்கு காரணம்.

வைத்தியசாலைகளில் போதுமான மருந்துப் பொருட்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்பட்டிருப்பின் அதிகளவான உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.எனினும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் அவசர உயிர்கப்பு சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ,நிலமையை கருத்திற் கொண்டு உயிரிழப்புக்களை மேலும் குறைப்பதற்கு ஊடனடியாக அடுத்துவரும் ஐ.சி.ஆர்.சி கப்பலில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு அக்கடிதத்தில் கோரி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜன் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை மருந்துப்பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து மாகாண ஆணையாளர் அடுத்த தடவை கப்பல் வரும்போது அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தார் எனினும் அவ்வாறு மருந்துப் பொருடகள் அக்கப்பலில் சுகாதார அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்படவில்லை என ஐ.சி.ஆர்.சி தமக்கு அறிவித்ததாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

rdhs-mul.jpg

வர்ஷா கொலை தொடர்பாக 5 பேர் தடுத்து வைப்பு

varsa.jpgஆறு வயது மாணவி வர்ஷா கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக்கவில்லை. இவர்கள் மீது தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒப்ரின் மெரர்வின் ரெனோனின் மரண விசாரணையை திருகோணமலை நீதிவான் ரி.எல்.ஏ. மனாப் நடத்தினார்.

இம்மரண விசாரணையும் மாணவி வர்ஷாவின் கொலை பற்றிய மரண விசாரணையும் திருமலை நீதிவான் மனாப்பினால் இன்னொரு திகதியில் நடத்தப்படவிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

‘உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது’

mahinda-rajapaksha.jpgஉலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும்போது அரசாங்கம் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது நாட்டை வேறு எந்த நாட்டுக்கோ நிறுவனத்துக்கோ கீழ்ப்படுத்த இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், முழு உலகமும் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ள இத்தருணத்தில் நாட்டின் நலன், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக்காது அரசியல் இலாபம் தேடுவதிலேயே சில சக்திகள் முனைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் 92 பேருக்கு புதிதாக கணக்காளர்களாக நியமனம் வழங்கும் விசேட வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. அமைச்சர்கள் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பந்துல குணவர்தன உட்பட திறைசேரி மற்றும் நிதியமைச்சின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

முழு உலகுமே பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நிதி நெருக்கடி உள்ளது. இத்தகைய வேளையில் நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் கடன் பெற முற்படும்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகின்றனர். இவர்கள் குறுகிய அரசியல் இலாபத்திற்காகச் செயற்படுகின்றனர். அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் பயணம் தொடர வேண்டும். மக்கள் அரசாங்கத்திடம் வழங்கிய ஆணை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.

இதனை விமர்சிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு எந்தளவு நிதி செலவாகியது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டனர். கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 103 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பல முன்னணி நாடுகள் தமது குறிக்கோளையும் எதிர்கால இலக்கினையும் மாற்றிக்கொண்டுள்ளன.

அமெரிக்க உட்பட பல நாடுகள் அரச துறைகளில் வேலை நீக்கத்தை மேற்கொள் கிறது. சம்பளத்தை குறைப்பதுடன் வீடுகளி லிருந்து வெளியேற்றும் நடவடிக்கை களையும் முன்னெடுத்து வருகிறது. எத்தகைய நிலையிலும் எமது அரசாங்கம் இத்தகைய தீர்மானங்களை எடுக்கவில்லை. மாறாக அரச துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையின் அரசதுறை தனியாருக்குப் பலமாகியுள்ளது. உலக பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாம் ஏற்கனவே மேற்கொண்ட ஆயத்தங்கள் காரணமாக நெருக்கடிகளிலிருந்து மீள முடிந்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி, பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், உலக பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையேற்றம் என ஒரே வேளையில் நான்கு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து அதில் வெற்றி கண்டுள்ள அரசு எமது அரசே.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எமது படையினர் அர்ப்பணிப்புடன் பல தியாகங்களைச் செய்து வடக்கு மக்களைப் புலிகளிடமிருந்து மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 20 கிலோ மீற்றர் தூரமே கைப்பற்றப்பட வேண்டியுள்ளது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமேயன்றி ஒரு இனத்திற்கு எதிரான யுத்த மல்ல. அப்பாவி மக்களை மீட்கும் மனிதாபிமான பணியே இடம்பெறுகிறது.

இத்தகைய தருணத்தில் ஏனைய பகுதிகளில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி நாட்டை திசை திருப்ப புலிகள் முயற்சிக்கின்றனர். இதன் விளைவே அக்குறஸ்ஸ தாக்குதல். புலிகளுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலும் மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாறு புலிகளுக்கு உண்டு என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித் துள்ளதாக வன்னிகள முனையில் ஈடுபட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதி ரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறை யினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன்: ஜேர்மன் செஞ்சிலுவை சங்கம் 6 கொள்கலன்கள் அன்பளிப்பு

sri-lanka-red-cross.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆறு நடமாடும் கொள்கலன்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமார் 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்களைக் கையளிக்கும் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்க, தேசிய செயலாளர் எஸ். எச். நிமல் குமார், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அன் றெஸ் லிண்டனர், மொங்கோலிய நாட்டின் பிரதி சுகாதார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் உரையாற்றுகையில், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் போதிய வைத்தியர்கள், தாதியர்கள் அப்பிரதேசங்களில் தங்கியிருந்து மக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது. மஹிந்த சிந்தனையை உண்மைப்படுத்தும் வகையில் சுகாதார சேவைகளை சுகாதார அமைச்சு சிறப்பாக செய்து வருகின்றது. ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்த மக்களும் தேவையான சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகின்றது. எமது அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நட மாடும் கொள்கலன்கள் இடம்பெயர்ந் துள்ள மக்களின் பிரதேசங்களுக்கு விரை வாக அனுப்பி வைத்து அம்மக்களின் சுகாதார சேவைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் – அமைச்சர் ரோஹித

rohitha_bogollagama.jpgபயங்கர வாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு உட்பட பாரிய செலவினங்களுக்குள்ளும் நாட்டின் சுகாதாரத்துறையில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு புலிகளின் பிரதேசத்திற்கும் அரசு மருந்துப் பொருட்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அனுப்பி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்து ள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புக்கான நிதி முக்கியத்துவம் குறித்து பிராந்திய அமைச்சர்கள் மட்ட மாநாடு நேற்று கொழும்பு சினமன் ஹோட்டலில் ஆரம்பமானது. இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- சாதாரணமான காலகட்டத்தில் மட்டுமன்றி அசாத்தியமான காலகட்டத்திலும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் சிறப்பான அவசர சுகாதார சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதற்கு உதாரணமாக சுனாமி கால கட்டத்தைக் குறிப்பிட முடியும். சுனாமிக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எந்த நோயும் இலங்கையில் பரவாமை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதப் போராட்டத்தின் மத்தியிலும் சிறந்த சுகாதார சேவை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கிலும் சுகாதார சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை எந்தத் தடங்களுமின்றி சுகாதார சேவை முன் னெடுக்கப்பட்டு வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அரசாங் கத்தினால் அனுப்பப்படுகின்றன. போது மான வைத்தியர்கள் மற்றும் தாதிகளும் அனுப்பப்பட்டு சிறந்த சுகாதார சேவை அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகள் மருந்துகளை தமது சொந்தப் பாவனைக்காக பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்தும் அப்பகுதி மக்களின் நல னைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படுகிறது.  பல சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆபத்துக்களைச் சந்திக்க நேர்ந்த போதும் தரை, கடல், ஆகாய மார்க்கமாகவும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இத்தகைய விடயங்களைப் பொறுத்த வரையில் பல்தேசிய நிதி நிறுவனங்கள் வர்த்தக சமூகங்கள், தனியார் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து செயற்படுவதையும் குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

போர் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்தே இராணுவ முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன – இராணுவ பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgபடையினர், போர் சட்டவிதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் போர்ச் சட்டத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்திச் சேவையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளின் மேற்படி குற்றச்சாட்டினை பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். வன்னியில் இடம்பெயர்ந்துத் தங்கியுள்ள பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர். நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. பொதுமக்களுக்கு சேதம் எற்படும் வகையில் படையினர் தமது இராணுவ முன்னெடுப்புக்களை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்ட பிறகே அவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் படையினரின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் வன்னியிலிருந்து வரும் பொதுமக்களை படையினர் மிகவும் அன்போடுதான் வரவேற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் படையினராலேயே வழங்கப்பட்டு பின்னர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதிலும் படையினர் பின்வாங்கவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கச் சென்றதில் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்துள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் போர் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அவர்களே பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.