2009

2009

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிறந்த சாணக்கியன்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

epdp-sec.jpgதமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

“கருணாநிதி, எந்த நேரத்தில் எவ்வாறான ஓர் கருத்தை முன் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தை நன்கு தெரிந்தவர். வன்னிப் பிரதேசத்தில் பிரபாகரனினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 70,000 பொதுமக்களை விடுதலை செய்வது குறித்து கருணாநிதி அக்கறை காட்ட வேண்டும்” என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழ் சிங்களப் பாடசாலைகளின் இரண்டாம்; தவணை நாளை ஆரம்பம்!

schools_stu.jpgநாட்டி லுள்ள தமிழ் – சிங்கள – பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை இன்றுடன் முடிவடைவதுடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் நாளை 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன்,  முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச்செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.

இந்த வருடத்தின் பாடசாலைக் கல்வி; நடவடிக்கைகள்; யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

புலிகளுக்கெதிரான மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பம்

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளைச் சித்தரிக்கும் மற்றுமொரு புகைப்படக் கண்காட்சி நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின்போது கடந்த மூன்று தசாப்தங்களில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் என்பவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பவற்றுடன் இணைந்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமிருந்தும் சர்வதேச செய்தி முகவர் நிலையங்கள்,  வெளியீட்டு நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்தும் பெறப்பட்ட புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. புலிகளின் கொடுமைகளை சித்தரிக்கும் இவ்வாறான புகைப்படக் கண்காட்சிகள் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நோர்வே தூதரகம் முன் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

norway-colombo.jpgநோர் வேயின் ஒஸ்லோ நகரில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டன.

நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தைத் தாக்கியவர்கள் குறித்து நோர்வே அரசாங்கம் மௌனப் போக்கினை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

35000 மக்கள் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு : பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு

puthu.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல்  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு 

 “24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”

இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம் 
 
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.

civiling_flee_vanni_01.png

civiling_flee_vanni_02.png