2009

2009

கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள்

யாழ். மாவட்டத்தில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் பெண்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுவரும் “ஹலோ ரஸ்ட்’ நிறுவனம் இதற்கான விண்ணப்பங்களையும் உடல்வலிமையையும் ஆண்களைப் போல பணி செய்யக்கூடிய பெண்களிடமிருந்து கோரியுள்ளது.

முதல்கட்டமாக இருபது பெண்களைத் தெரிவு செய்து செப்டெம்பர் மாதம் முதல்வாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்குப் பயிற்சி வழங்கப்படுமென ஹலோரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயிற்சிக் காலத்தில் ஊக்குவிப்புத் தொகை மட்டும் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

பயிற்சி வழங்கப்பட்டவர்களை வெற்றிடம் வரும்போது பணியில் இணைத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சுயவிபரக் கோவையுடன் இம்மாத முடிவுக்குள் செயல்பாட்டாளர் ஹலோ ரஸ்ட் நிறுவனம், 12 நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம் என்று முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக குடாநாட்டில் கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஆண்களையே ஹலோ ரஸ்ட் நிறுவனமும் டெனிஸ் கண்ணி வெடியகற்றும் நிறுவனமும் ஈடுபடுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் தேர்தல் புகார்கள் முடிவை பாதிக்கலாம் – புகார் ஆணையம்

vote000.jpgஆப்கானிஸ் தான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிபர் தேர்தலின் முடிவுகளை பாதிக்கலாம் என தேர்தல் புகார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்த ஆணையத்தின் தலைவர் கிராண்ட் கிப்பன் கூறும்போது, தங்களுக்கு 225 புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 35 முக்கியமானவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என முத்திரையிடப்பட்டிருப்பதாக கூறினார்.

அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

20 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

தலவாக்கலை, பெல்கிரேபியா தோட்டக் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் அந்த வீடுகளிலிருந்த சகல பொருட்களும் எரிந்து

நாசமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சேதங்கள் தொடர்பான மதிப்பீடு மற்றும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென தீ பிடித்துள்ளதாகவும் லிந்துல பொலிஸாரும், நகர சபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து பல நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளி லிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தீக்கிரையான வீடுகளில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருந்துள்ளனர்.

சுங்கத் திணைக்களத்தின் 200வது ஆண்டு விழா

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் 200வது வருடம், எதிர்வரும் 25 ஆம் திகதி பூர்த்தியடைகிறது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி 200 வருட பூர்த்தி விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக சுங்க திணைக்களப் பணிப்பாளர் எஸ். ஏ. சீ. எஸ். ஜயதிலக தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சேவையாற்றும் 40 முஸ்லிம் சுங்க அதிகாரிகளின் ஏற்பாட்டில் மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய பணிப்பாளர் தகவல் தருகையில், இந்த நாட்டில் தேசிய வருமானத்தில் ஐம்பது வீதத்தை சுங்கத் திணைக்களம் பெற்று வருகின்றது. இது 2009 ஆம் ஆண்டில் 427 பில்லியனும் 2007 ஆம் ஆண்டில் 315 பில்லியனும் 2008 இல் 279 பில்லியனும் வருமானமாகப் பெற்றுள்ளது.200 ஆண்டு விழாவின் போது இருபத்தைந்து ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்த சுங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் சின்னம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தின் போது மருதானைப் பள்ளிவாசல் இமாமினால் துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திஹாரிய அங்கவீன நிலைய த்தின் மாணவர் ஒருவருக்கு முச்சக்கர நாற்காலியும், செவிப்புலன் சாதனங்களும், பாத்திமா அனாதை இல்லத்தில் உள்ள மாணவிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இவ்வைபவம் சுங்கத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இஸ்மாயில் சாபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் மரணம்

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இன்று பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்  மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹஸ்முக் ஹிங்கு என்பவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். குஜராத்தில் மட்டும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியை சேர்ந்த அனில் சேஷ்ராவ் சவான் (26) என்ற வாலிபரும், ஹரியானா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானார்கள்.

டெல்லியில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

2வது கட்ட தாக்குதல் அபாயம்

பன்றிக் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 2வது கட்ட பன்றிக் காய்ச்சல் தாக்குதல்  ஏற்படவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் இதை சமாளிக்க தயாராகிக் கொள்ளுமாறும் அது எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மழைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் கடுமையாக இருக்கும் எனவும் அது கூறியுள்ளது.

உலகம்  முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1799 பேர் உயிரிழந்துள்ளனர். 177 நாடுகளை பன்றிக் காய்ச்சல் பாதித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களில் ஒரு லட்சம் பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

flood.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் அடங்கலாக சுமார் ஒரு லட்சம் பேரை விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சுமார் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்காகக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும், வீதிகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், மின்சார விநியோகச் செயற்பாடுகள் உட்பட உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி
 
ga-vavuniya-222.jpgவவுனியா முகாம்களில் தங்கி இருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்போது முகாம்களில் உள்ளவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்டோர், மனநோயாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளிகள் தங்கள் உறவினர்களோடு சென்று வாழ விரும்பினால் தமது உறவினர்கள் தொடர்பான சரியான விபரங்களை வழங்குவõர்களேயானால் அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்போம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவார்களானால் அதனை அப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிபரிடம் அல்லது கிராம சேவகரிடம் ஒப்படைத்து இவர்களது பதிவுத் தகவல்களை உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்போம். அது தொடர்பான வேலைகளை தற்பொழுது நாம் மேற்கொண்டு வருகிறோம்.

தத்தமது பிரதேசங்களில் சென்று வசிப்பதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர். இவற்றில் பாதுகாப்பு தரப்பினரை நாடி நாங்கள் பேசியுள்ளோம். எனவே அனைவரினதும் ஒத்துழைப்புக்களுடனும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் மழை பெய்ததால் கூடாரங்கள் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பை ஏற்படுத்தினாலும் தற்போது அந்நிலைமை சீர்படுத்தப்பட்டுள்ளது. நீர் தேங்கி நின்ற பகுதியில் உள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் அக்கூடாரங்களில் வசித்த மக்களுக்கு வேறு கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வடிகான்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்திருந்த கூடாரங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மழை காலத்தை சமாளிக்கும் வகையில் அம்மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

ஈழ தமிழர்களின் துயர்நீக்கும் விடிவு விநாயக சதுர்த்தி-அர்ஜூன் சம்பத்

ராஜதந்திரம் என்ற பெயரில் நாடகமாடிய கருணாநிதியை ஈழத்தில் மண்ணாகி போன அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்காது. இந்த ஆண்டு விநாயக சதூர்த்தி ஈழ விடிவு சதுர்த்தியாக கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி…

தமிழக முதல்வர்  கருணாநிதி, ஈழத்தில் பிஞ்சு குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அரசு ஈழத்தையே எழவு காடாக்கிவிட்டது.

கருணாநிதி தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாமல் இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத் தமிழர்கள்  நாதியற்றுப் போய்விட்டனர்.

ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறு என திடீரென தமிழக அரசு மிரட்டல்  அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி தமிழக அரசு மிரட்டுகிறது.

விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?

அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை.

ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க எழும் தமிழ் ஈழம் என்கிற பெயரில் கட்-அவுட்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார். திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது.

பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது. ஆனால், இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியாது.

தோல்வியடையும் நிலையில் அவுஸ்திரேலியா

eng0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா  அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா மேலும் 443ஓட்டங்கள் பெற வேண்டும்

பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையில் பயிற்சிக் கல்லூரி

பயங்கர வாதத்தை முறியடிப்பது எப்படி என்று சர்வதேச நாடுகளின் படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக இலங்கையில் விசேட பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட்  ஜெனரல் ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் படையினர் பயங்கரவாதத்தை உள்நாட்டில் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைப் படையினரால் யுத்த நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களையும் இராணுவ உத்திகளையும்  அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் இராணுவத்தினர் ஏற்கனவே  இலங்கை இராணுவத்தினரிடம் பயங்கர வாத ஒழிப்பு நடவடிக்கைகள் சம்பந்தப் பட்ட பயிற்சிகளை பெற்றுள்ளனர்  என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விழிப்புக்குழுக்கள் – பொலிஸார் நடவடிக்கை

வவுனியா வில் கிராம சேவைப் பிரிவுகள் தோறும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணிகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்ததந்தப் பிரிவுகளில் உள்ள மதத்தலைவர்கள், கிராமசேவை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய இந்த விழிப்புக் குழுக்களில் பொலிசார் இருவர் அங்கம் வகிப்பர். பிரதேசத்தில் அமைதியை நிலவச் செய்யும் நோக்கில் பொதுமக்களிடையே ஏற்படும் பொதுவான பிணக்குகள்,  பிரச்சினைகள் போன்றவற்றை தீர்ப்பதில் இக்குழு ஈடுபடம்.

அதேவேளை சமூக விரோதச் செயல்கள்,  இளைஞர்கள், சிறுவர்களின் நலன்கள் என்பவற்றில் இந்தக் குழு கவனம் செலுத்துவதுடன், அப்பகுதியில் ஏற்படுகின்ற கொள்ளைகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளிலும் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்தப் பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருந்து செயற்படும் இந்தக் குழு,  அந்தப் பிரதேசத்திற்கு வருகின்ற புதியவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புக்குழுக்கள் செயற்படத் தொடங்கியதும், அந்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தொடர்பான விபரக்கோவையும் பதிவில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது