2009

2009

முல்லைத்தீவு மாவட்டம்: சிவில் நிர்வாகத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து ஆராய்வு

mullai-ga.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அம்மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டக் கட்டளைத் தளபதியும் சந்தித்து ஆராய்ந்துள்ளனர். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும், மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவுமே இது விடயமாக நேற்று முன்தினம் ஆராய்ந்திருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குக் கண்னி வெடிகளைத் – துரிதமாக அப்புறப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சமயம் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, புனரமைப்பு பணிகள் என்பன தொடர்பாகவும் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன.

இதேவேளை மாங்குளத்தில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி கிளைகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப் பாடுகளையும் அவ்வங்கிகளின் அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் ஸ்தலத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்திருக்கின்றனர்.

வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில்

06-cargo-ship.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு கொலராடோ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் முற்பகுதியில் அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கான சாத்தியமுள்ளதாக நம்பிக்கை இலங்கை செ.சங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் அச்சங்கத்தின் தேசிய செயலாளர் நிமால் குமார் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளவர்களுக்கு விநியோகிக்குமுகமாக எமது சங்கத்துக்கு 650 தொன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்பொருட்கள் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்னும் துறைமுகத்திலிருந்து வெளியிலெடுக்கப்படவில்லை.

சங்கம் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடைமுறை செயற்பாடு பூர்த்தியாகாததன் காரணமாகவே வெளியிலெடுக்க முடியாதுள்ளது. இப்பொருட்களை வெளியிலெடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கையெடுத்து வருகிறோம்.

அநேகமாக வார முற்பகுதியில் இப்பொருட்கள் வெளியிலெடுக்கக் கூடியதாகவிருக்குமென நினைக்கிறேன். இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

கொலராடோ கப்பல் மூலம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் இப்பொருட்கள் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. வன்னி அகதிகளுக்கென புலம்பெயர் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஐரோப்பாவிலிருந்து கடந்த ஏப்ரலில் கப்டன் அலி கப்பல் (வணங்காமண்) நிவாரணப் பொருட்கள் தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில் மூலம் கொண்டுவரப்பட்டது. இலங்கை கடல் எல்லைக்குள் கப்பல் அனுமதிக்கப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு இக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு சென்று கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு கொழும்புக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

கிரேக்கத்தில் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு

greece_athens_fires.gifகிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், அதென்ஸ் நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

அடுத்துவரும் தினங்களில் இடி மின்னலுடன் மழை; அவதானமாகயிருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

flood1111.jpgகிழக்கு,  ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

அதன் காரணத்தினால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி பகுதிகளில் பெரும்பாலும் மாலை வேளையிலேயே இடி, மின்னலுடன் மழைபெய்யும்.

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இடி, மின்னல் தாக்கம் காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளையில் திறந்த வெளியில் நடமாடவோ, வயல் வேலைகளில் ஈடுபடவோ வேண்டாம். மோட்டார் பைசிகிள், பைசிகிள் போன்ற வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். தொலைக்காட்சி, வானொலி என்பவற்றைப் பயன்படுத்த வேண்டாம், மின்சார உபகரணங்களின் மின் இணைப்பை துன்டித்து விடவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள யாழப்பாணம், மன்னார் குடும்பங்கள் இரு வாரத்தினுள் மீள்குடியேற்றம்

r-b00001.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மன்னார் மற்றும் யாழ். மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரென மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரம், நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டிருப்பதால் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் அவ்வப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை மன்னாரில் மாந்தை மேற்கு, மடுவின் சில பகுதிகளில் தற்போதும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்தவர்களை மடுவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசமொன்றினுள் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக மீளக்குடியமர்த்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மெனிக்பாம் நிவாரண கிராமத்தில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் யாழ்ப்பாணத்தில் மிதிவெடியகற்றப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் தமது சொத்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத பகுதிகளை தமது சொந்த இருப்பிடங்களாக கொண்டவர்கள் அப்பணிகள் நிறைவடையும் வரை யாழ்ப்பாண நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவரேனவும் அமைச்சர் றிசாட் சுட்டிக்காட்டினார்.

பன்றிக் காய்ச்சல்; உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிவுறுத்தல்

10092009.jpgபன்றிக் காய்ச்சலுக்கு (ஸ்வைன்புளூ) எதிரான மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து புதிய அறிவுறுத்தல்களை விடுத்திருக்கும் உலக சுகாதார அமையம், சிக்கலான வியாதிகளற்ற நோயாளர்கள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுக்க வேண்டிய தேவை இல்லையென்று கூறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்து காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் காணப்படுகின்றனர். அவர்கள் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்து வருவதாக உலக சுகாதார அமையம் மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிபுணர்கள் குழுவின் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் புதிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் சிக்கலற்ற வியாதியுடைய நோயாளர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைச் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டிய தேவை இல்லை என்று உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.

ஒசெல்றமிவிர் (Oseltamivir) சனமிவிர் (Zanamivir) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நோயின் தாக்க கடுமையையும் மரணங்களையும் தடுக்கக் கூடியதென்றும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் தேவையையும் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் காலத்தையும் குறைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வைன்புளூ மற்றும் வழமையாக ஏற்படும் காய்ச்சல் என்பவற்றால் மரணத்திற்கு வழிவகுக்கும் காரணமான நியூ மோனியா ஆபத்தைக் கணிசமான அளவுக்குத் தடுக்கும் மருந்தாக ஒசெல்றமிவிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு ஏற்பட்டால் ஒசெல்ரமிவிர் கிடைக்காது விடின் சனமிவிரை கொடுக்கலாம் என்று உலக சுகாதார அமையம் தெரிவித்துள்ளது.

ஸ்வைன்புளூ தாக்கத்திற்கு உட்படும் அதிக ஆபத்து கர்ப்பிணிகளுக்கு இருப்பதாகவும் நோய் அறிகுறிகாணப்பட்டால் சாத்தியமான அளவுக்கு விரைவாக அவர்கள் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் உலக சுகாதார அமையம் சிபார்சு செய்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்குக் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட சிறாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 5 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவருக்கு அவர்களுக்கு நோயின் தாக்கம் கடுமையாக ஏற்படாவிடின் அல்லது நிலைமை மோசமடையாவிடின் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சு விடுதல் சிரமம், மார்பு வலி, கடும் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தல் போன்றவை H1N1 தாக்கத்துக்கான அறிகுறிகளாகும். H1N1 தாக்க அறிகுறி இருப்பதாக சந்தேகப்பட்டால் அல்லது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும். குழந்தைகள் மூச்சுவிட சிரமப்பட்டால், எழுந்திருக்கக் கஷ்டப்பட்டால், விளையாட ஆர்வம் காட்டாவிட்டால். சாப்பிடாமல் விட்டால் எச்சரிக்கைக்குரிய அறிகுறிகளாகும் என்று உலக சுகாதார அமைய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை அனுமதி பெறுவதற்கு கல்வியமைச்சுக்கு வரவேண்டாம் – அமைச்சு செயலர் தெரிவிப்பு

sri-lankan-students.jpgமாண வர்களை பாடசாலைக்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சை நாடி வரவேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதே போன்று 5 ஆம் ஆண்டு, 6 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் அடிப்படையிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படியே மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமா யின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் – பசில் ராஜபக்ஷ கூறுகிறார்

basil-raja.jpgஇலங்கை யின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் கொழும்பு, பெய்ஜிங் நிதி ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

“அண்மைய காலங்களில் இலங்கை மீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் சீனா எமக்கு ஆதரவு வழங்கியது’ என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட அனல் மின் உலையின் முதற்கட்ட நிறைவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியில் பிரதான பங்குதாரராக சீனா இருப்பதாக அவர் கூறியுள்ளார். “முக்கியமான தருணங்களில் இலங்கைக்குச் சீனா உதவமுன்வந்துள்ளது என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அனல் மின் உலைத்திட்டத்திற்காக 455 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்காக பெய்ஜிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்படும் இந்த அனல் மின் உலையின் முதல் கட்டப்பணி பூர்த்தியடைந்திருப்பதுடன் அடுத்த வருடம் முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீதிகள், புகையிரதப் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்ய சீன அரசு நிதி உதவி அளிதிருப்பதாகவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உலை முதற்கட்டப் பணிபூர்த்தியடைந்துள்ளநிலையில் இதன் மூலம் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் 25 சதவீதம் பூர்த்தி செய்யப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சீனாவிலிருந்து புத்தர் சிலையொன்று கொண்டு வரப்பட்டு இந்த அனல் மின் உலை இடத்தில் வைக்கப்படவிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று தெரிவித்தது.

நெலுங்குளம் பிரதேசத்திலிருந்து 16 கிலோ எடையுள்ள நான்கு தற்கொலை அங்கிகள் மீட்பு

nimal_madiwaka.jpgவவுனியா, நெலுங்குளம் பிரதேசத்திலிருந்து 16 கிலோ எடையுள்ள நான்கு தற்கொலை அங்கிகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்று தெரிவித்தார்.

அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட நிலையிலேயே நான்கு தற்கொலை அங்கிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றை அடுத்தே நெலுங்குளம் பொதுமயானத்திற்கு அருகிலிருந்து இத் தற்கொலை அங்கிகளையும் மீட்டெடுத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினர்.

பாதுகாப்பு செயலர், படைத் தளபதிகள் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிப்பு

சப்ரகமுவ மாகாண பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி, பாணந்துறை வீதியிலுள்ள சப்ரகமுவ மகா சமன் தேவாலய முன்றிலில் நடத்திய பேரானந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களின் விபரங்கள்;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முன்னாள் முப்படைகளின் தளபதி ஏர்சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப் படைகளின் கட்டளை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த நாணயக்கார, விமானப்படைத்தளபதி ஏயார் மாஷல் ரொசான் குணதிலக்க, பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரட்ன, சிவில் பாதுகாப்பு படையினரின் கட்டளை அதிகாரி அட்மிரல் சரத் வீரவன்ச ஆகியோருக்கு பேரானந்த விருது வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை இரத்தினபுரி, கேகாலை மாவட்ட அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, மகிந்த ரட்னதிலக்க, பி. ஜயசேகர பவித்ரா வன்னியாராச்சி, எச்.ஆர். மைத்திரிபால, மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத், மாகாண அமைச்சர்களான ஜி.எம். கருணாபால, ஜானக்க வக்கும்புற, ஸ்ரீலால் விக்கிரமசிங்க, ரஞ்சித் டி சொய்சா, தலைவர் அத்துலகுமார ராகுபத்த, உபதலைவர் ரஞ்சித் பண்டார ஆகியோர் வழங்கினர்.

இவர்களுக்கான சன்ளஸ் பத்திரங்களை இம்மாகாண சிரேஷ்ட பௌத்த குருமார்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.