December

December

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இத்திட்டத்தின்படி தண்ணீர் விநயோகம் செய்யக்கூடியமாதிரி குழாய்கள் பொருத்தப்பட்டு வேலைகள் ஆரம்பித்திருந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவில் தடைப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வன்னி விவசாயிகள் எதிர்க்கின்றனர். கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக இருக்கும் பட்சத்தில் இரணமடுக்குளத்திலிருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை என கிளிநொச்சி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். இவரது வாக்கு வங்கி கிளிநொச்சி என்ற வகையில் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகளின் பக்கம் நிற்பதில் ஒரு நியாயமும் உள்ளது. அதேபோல் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்கு வங்கி யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தண்ணியை யாழ் கொண்டு வருவது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியம்.

ஒருபக்கம் சமமான வளப்பங்கீடு பற்றி பேசினாலும் மறுபக்கம் வளச்சுரண்டல் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். யாழ் மாவட்டத்தின் நீர்ப்பற்றாக்குறைக்கு அம்மாவட்டத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம். யாழிலில் காணப்பட்ட பல நீர் நிலைகள் மூடப்பட்டு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊதிப் பெருத்த நகரத்தாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நன்னீர் நிலைகள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் பழுதடைந்துள்ளன. குறிப்பாக சுண்ணாகம் மின்சார உற்பத்தி மசகு எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்கடியில் விடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடிநீர் கெட்டுப் போனமையும் குறிப்பிடத்தக்கது. ஏன் யாழ் மாவட்டம் மாற்றுத் திட்டங்களை ஆலோசிக்க கூடாது. கடல் நீரை நன்னீராக சுத்திகரித்தல், மழை நீரை சேகரிக்கலாம், சட்டவிரோத கட்டிடங்களை தகர்த்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்கலாம் என கிளிநொச்சியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி !

பா உ அர்ச்சுனாவுக்கும் சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வர அமைச்சர் சந்திரசேகரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். டிசம்பர் 26 நேற்று, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இனிமேல் பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அமைச்சர் உங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி, வைத்தியர் அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

கிளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வழமை போல கல்வித் தகமை உள்ளதா..?, நீங்கள் மக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்? தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து, அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசாவை பா.உ அரச்சுனா பேச, தம்பி தம்பிராசாவும் எதிர்த்துப்பேசவே கூட்டம் அமைதியையிழந்ததது.

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு

ருஹூனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் உபவேந்தர் சுஜீவ அமரசேன உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் இதுவொரு அரசியல் பழிவாங்கல் எனவும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை நியமிப்பது தொடர்பில் வழமையாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் அடிப்படை உரிமை மீறல் வழக்கில் கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா ! 

கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா !

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமது கோழி பண்ணை விரிவாக்கத்தை அதிகரித்தது அமெரிக்கா. இதனால் 1963 இல் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே “கோழிச்சண்டை” (chicken war) ஒன்று ஆரம்பமானது. ‘மலிவான’ அமெரிக்க கோழி இறக்குமதியால் பாதிப்புற்ற உள்ளூர் கோழி வளர்ப்பாளர்கள் பிரான்ஸ் அரசிற்கெதிராக போர்க் கொடி தூக்கினர். இதன் எதிர்வினையாக, ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்க கோழிகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி (tariff) அதிகரித்தது. கோபமடைந்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளின் வாகன இறக்குமதிகளுக்கு மேலதிக வரி விதிக்க ஆரம்பித்தது. இன்றும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்மிடையே இந்தக் கோழிச்சண்டையுள்ளது. ஐரோப்பிய ஒன்றியச் சந்தை, அமெரிக்க கோழி இறைச்சியால் நிரம்பிவிடாமல் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தர நிர்ணயக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றது.

சீனா மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக ஏற்றுமதி வரி விதிப்பும், மசகு எண்ணெய் இறக்குமதியை வைத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது மேலதிக வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதும் அந்தக் காலத்து கோழிச் சண்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதையே காட்டுவதாக பொருளியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். முன்பு கோழிக்கு அடிபட்டவர்கள் இப்போது chips (semi-conductor இற்கு மோதிக் கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

நத்தார் தினம் பிறந்த காலை 7:30 கிளிநொச்சியில் டிப்பர் ஓட்டியவர் குடித்துவிட்டு மது போதையிலேயே வாகனத்தை ஓட்டியுள்ளார். இவரைவிட இன்னும் 250 பேர் நேற்றைய தினம் குடிபோதை மயக்கத்துடன் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 9,000 குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் என்றும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் தினமும் 7 விபத்து மரணங்கள் இடம்பெறுகின்றது. பலர் காயமடைகின்றனர் ஊனமடைகின்றனர். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்ததுடன், தாயார் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாக மதுபானசாலைகள் இருப்பதைக் கண்டித்து டிசம்பர் 24இல் மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். போராட்டம் நடைபெற்று மறுநாள் இவ்விபத்து ஒரு குடும்பத்தை புரட்டிப் போட்டவிட்டது.

அரசு மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அவர்களுடைய மூச்சை சோதணை செய்து உறுதிப்படுத்துவதற்காக 1,500 சுவாசத்தை சோதித்து மது அருந்தியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் சாதனத்தை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கியுள்ளது. மேலும் பொலிஸாருக்கு கமரா பொருத்தப்பட்ட மேலங்கிகளும் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் பொலிஸார் மக்களோடு எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் இக்கமராக்கள் பதிவு செய்யும். இருந்தாலும் கமராக்களை நிறுத்திவிட்டு பொலிஸார் தம் இஸ்டத்திற்கு நடந்துகொள்வது பிரித்தானியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் வேகத்தடைக் கமராக்களையும் பொலிஸார் அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக அமையும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணத்தை அதிகரித்து அதனை போக்குவரத்தை மேம்படுத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊர்காவற்துறை முதல் மாத்தளை வரை 24 கொள்ளைகள் 4 யாழ் இளைஞர்கள் கண்டியில் கைது!

ஊர்காவற்துறை முதல் மாத்தளை வரை 24 கொள்ளைகள் 4 யாழ் இளைஞர்கள் கண்டியில் கைது!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த நான்கு வருடங்களாக கொளையடித்து வாழ்ந்துள்ளனர். 19 வயதுமுதல் 26 வயதுவரையுடைய இவர்கள் வடக்கில் யாழ் ஊர்காவற்துறை முதல் மத்திய மலைநாடுவரை சென்று 21 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கோடிக்கணக்கில் கொளையடித்த இவர்கள் அதனைச் செலவிழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். யாழ் அடகு கடையொன்றில் திருடிய நகைகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மீது 24 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பான பதிவுகள் உள்ளது. யாழில் மட்டும் 9 பிடியாணைகள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 21 வீடுகளிலும் கோயில்களிலும் இவர்கள் திருடியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் கொழும்பில் இருந்து கணவன் மனைவியாக வந்து திருட்டில் ஈடுபட்ட கணவன் சிலவாரங்களுக்கு முன் கோப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே. சோம்பேறித்தனமாகவும் இரவோடு இரவாக லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான திருட்டுத் தனங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கொள்ளை மட்டுமல்லாமல் கொள்ளைக்கா சில கொலைகளும் இடம்பெற்றுள்ளது. அத்தோடு மண் கடத்தல், மரம் கடத்தல், போதைவஸ்து கடத்தல் என இளைஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவுக்குப் பின் காலையில் நடக்கின்ற டிப்பர் விபத்துக்கள் கள்ள மண் ஏற்றுபவர்களினாலேயே பெருமளவு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையைக் காதலிக்கும் சுற்றுலாப் பயணிகள் – 2 மில்லியனைத் தாண்டும் வருகை !

இலங்கையைக் காதலிக்கும் சுற்றுலாப் பயணிகள் – 2 மில்லியனைத் தாண்டும் வருகை !
2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று 26ஆம் திகதியுடன் 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமானநிலையத்தில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. வரலாற்றில் 4ஆவது தடவையாக சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. முன்னதாக 2016, 2018, 2018 ஆண்டுகளில் இது பதிவாகியிருந்தது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல், கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளதார வீழ்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் இலங்கையின் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை குறித்தளவு முன்னேற்றத்தை எட்டிவருகின்றது.
இதேவேளை புதிய அரசு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு 39 நாடுகளுக்கு இலவச விசா நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. 2025இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கசிப்பு உற்பத்தியை தடுக்க பார் வேண்டுமாம்: கிளி பார் அனுமதிகளை ஆராய விஷேடகுழு !

கசிப்பு உற்பத்தியை தடுக்க பார் வேண்டுமாம்: கிளி பார் அனுமதிகளை ஆராய விஷேடகுழு !

கசிப்பைத் தடுக்க பார்கள் திறக்கப்பட வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு பார் வேண்டும், பார்களினால் மாவட்டத்துக்கு வருமானம் வரும் என்றெல்லாம் முன்னைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யாழ் மாவட்ட பா உ க இளங்குமரன் தற்போது பார்களும் கூடிவிட்டது கசப்பு காச்சுவதும் கூடிவிட்டது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். டிசம்பர் 26 இல் கிளிநொச்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஶ்ரீ பவானந்தராஜா, இராமநாதன் அர்ச்சுனா, சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டனர்.

அப்போது கிளிநொச்சியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பார் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் கிளிநொச்சியின் நகர்ப்புறத்தை சூழவுள்ள பார்களின் பெருக்கத்தைப்பற்றியும் விவாதிக்கப்பட்டது. இவ் விவாதங்களின் போது பார் அனுமதிப்பத்திரத்திற்கு யார் சிபார்சு வழங்கியது என்பதும் மீண்டும் பேசு பொருளானது. சம்பந்தப்பட்ட சிபாரிசு கொடுத்தவர்களின் விபரங்களை நாங்கள் பாராளுமன்றத்தில் கேட்டு வாங்குவோம் என இராமநாதன் அர்ச்சுனா கூற அதனை ஆமோதித்த சிவஞானம் சிறிதரன், அப்போது எல்லாப் பிரச்சினையும் முடியும் என்றார்.

கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த ரணிலால் வழங்கப்பட்டது என்று கருதப்படுகிற பார் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்து தீர்மானம் போடுவோம் என சிறிதரன் பரிந்துரைத்தார். அதற்கு அர்ச்சுனாவும் ஒத்து ஊதினார். இவ்விடயத்தில் நிதானத்தை கையாண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபரினுடைய ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டார். மேலும் பார் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் போது பணத்தை செலவு செய்து பார்களை திறந்துள்ள பார் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்புக்கள் பற்றி குறிப்பிட்டடார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டுக் கொண்டார். அரசாங்க தரப்பில் பார் அனுமதிகள் வழங்கப்படும் போது மதுவரி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதாவது பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் இடங்கள் போன்ற மேலும் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பொதுமக்கள் சார்பிலும் பார் விடயம் மட்டுமல்ல கள்ளச்சாராயம் என்றழைக்கப்படும் அதிகரித்த கசிப்பு வியாபாரம் தொடர்பிலும் விசனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த என்பிபி பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் “இப்போது போதைப்பொருள் மற்றும் கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதாக முறைபாடுகள் வருவதாக கூறிய அவர், மேலும் கூறுகையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இதேமாதிரியான கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியை தடுக்க பார்கள் தேவை என கூறப்பட்டதாகவும் இப்போது பார்களும் அதிகரித்திருக்கின்றது கசிப்பு உற்பத்தியும் அதிகரித்திருப்பதாக சர்ச்சையை கிளப்பினார். இதனை உடனடியாக மறுத்த சிறிதரன் , அப்படியாக ஒரு விடயம் பேசப்பட்டிருந்தால் அறிக்கைகளில் வந்திருக்கும் எனவே கடந்த கால கூட்டங்களின் அறிக்கையை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். இறுதியாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் பார் விடயம் தொடர்பில் ஆராய ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார். பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகை 25.12.2024 வயாவிளானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் வேதநாயகன், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள்இ வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனவும் இவற்றை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தி வருகின்றேன் என்றார் ஆளுநர்.

அரகலய போராட்டங்கள் அனுர அலையினால் காணாமல் போன 6,000 அரசியல்வாதிகள் – FAFERAL

அரகலய போராட்டங்கள் அனுர அலையினால் காணாமல் போன 6,000 அரசியல்வாதிகள் – FAFERAL

2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிரான அரகலய போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 6,000 அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் பெப்ரல் (Faferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில், “போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் நம்பிக்கை இழந்து அரசியலில் இருந்து விலகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்

பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய மேலும் 2,000 பேர் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும், ஏனைய கட்சிகளை உருவாக்குதல், ஏனைய கட்சிகளுடன் இணைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் சுமார் 30 அரசியல் கட்சிகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு கோரப்பட்ட நிலையில் 80,000க்கும் அதிகமானோர் வேட்பாளர்களாக தாம் தோற்றியிருந்த – தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் இல்லை, என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசியமக்கள் சக்தியின் அனுர அலையால் மிக நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் முதல் நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவர்களை பொருத்தவரையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.