17

17

நீக்கப்படுகிறது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஆயுதப்படை பாதுகாப்பு !

நீக்கப்படுகிறது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஆயுதப்படை பாதுகாப்பு – 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியள்ளார்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசாங்கம் இதுவரை செலவிட்ட பணத்தில் சுமார் 1200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – வடக்கு மாகாண ஆளுநர்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்

யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல், வீடமைப்புத் திட்டம், வாழ்வாதார உதவி மற்றும் வேலை வாய்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி தமிழகத்தில் தற்போதும் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய ஆளுநர், அதற்குரிய திட்டங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி தேடுகிறார்கள் – பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

17.12.2024 பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கங்களின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தேடப்பட்டதாக தெரிவித்தார்.

“எங்கள் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் கொலிபிகேஷன் தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கே இருக்கும் நம் பலரின் கொலிபிகேஷனை தேடுகின்றனர். கொலிபிகேஷனை கேட்கிறார்கள், அதை கேட்கிறார்கள்… இதை கேட்கிறார்கள்.

மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்கத்தில் உள்ளவர்களின் கல்வித் தகுதிகள் தேடப்படவில்லை என்பது ஒருபுறம் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் திருட்டையே தேடினார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

தையிட்டி விகாரைக்கு வரலாறு உள்ளது! பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிப் பிரச்சினையை தூண்டக்கூடாது! மாத்தளை சுனீத்த ஹாமத்துறு

தையிட்டி விகாரை சங்கமித்தை வந்து ஒரு நாள் தங்கிச் சென்ற வரலாறு கொண்ட விகாரை. இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் கைவிடப்பட்டுள்ளது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு. இவர் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் சட்டவிரோதமாக அந்த விகாரை தையிட்டியில் அமைக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே விகாரை இருந்த இடத்திலேயே அது மீள் நிர்மாணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். இந்த விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஜாதிவாதத்தையூட்டி இதனை ஒரு இன மதப்பிரச்சினையாக்கக் கூடாது என்கிறார் மாத்தளை சுனீத்த ஹாமத்துறு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனீத்த ஹாமத்துறு தன்னுடைய இளவயதிலேயே துறவறம்கொண்டு மாத்தளை விகாரையில் பணியாற்றுவதுடன் நாமினி ஓயா மத்திய மகாவித்தியாலயத்தில் தமிழ், பாளி மொழி கற்பிக்கின்ற ஆசிரியராகவும் உள்ளார். ஜாதிவாதம் இல்லாத சமாதான பூமியாக இலங்கை உருவாக வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனத் தெரிவிக்கும் அவர், தமிழர்கள் பலர் பௌத்தத்தை கடைப்பிடிப்பதாகவும் யாரும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் துப்பாக்கி முனையில் விகாரைகளை பாதுகாப்பது பௌத்தத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார். பெரும்பாலும் விகாரைகளில் கணபதி தெய்வம் இருக்கின்றார். சிங்கள மக்கள் சைவத் தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதில் ஜாதிவாதம் வரத்தேவியில்லை எனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

 

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சபாநாயகர் பதவியை துறந்தது போல பார்பேர்மிட் சிபாரிசு செய்தவர்களும் பாராளுமன்ற உரிமையில் இருந்து விலக வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

பார் பேர்மிட் வழங்குவதற்கு சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் அது நல்லதொரு விடயம், அதை நான் வரவேற்கின்றேன்.

இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். இதேபோன்று பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.

ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் பேர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபாரிசு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபாரிசு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்” – என்றார்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

இலங்கை ஜனாதிபதி இந்தியாவை முதன்மைப்படுத்தியுள்ளார் – பிரதமர் மோடி மகிழ்ச்சி:

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் கூட்டாக செய்தியாளர் மாநாட்டை நடத்தினர். அப்போது பரஸ்பரம் இரு தலைவர்களும் இத்தகைய ஒரு சந்திப்பு இரு நாடுகளிடேயும் இடம்பெற்றது தொடர்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

மோடி செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் போது இந்தியாவை முதலாவதாக தெரிவு செய்தமைக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட இலங்கை ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவின் வெளிவிகாரக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தொடர்பாக இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் “இந்தியாவின் பாதுகாப்பிற்கிற்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்வகையில் இலங்கையின் பிரதேசத்தை ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது” என்ற உறுதிமொழியையும் தனது உரையில் இந்தியாவிற்கு வழங்கினார்.

ஜனாதிபதியின் இக் கூற்றானது இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பில் சீனாவுடனான இலங்கை உறவை மையப்படுத்தி எழுப்பட்டு வந்த ஐயப்பாட்டை துடைத்தெறிவதாகவும் இலங்கை இந்தியாவின் தொப்புள் கொடி உறுவுதான் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

அனுராவின் இந்திய விஜயம்: இலங்கையில் வடகடலில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு முதல் டிஜிற்றலைசேசன் வரை புரிந்துணர்வு ஒப்பந்தம்:

மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையில் செம்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாலும் இந்திய குடியரசு தலைவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவினாலும் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் காந்தி சமாதிக்கு மலர்வளையம் வைத்து ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனால் காந்தியின் உருவப்படம் பொதித்த நினைவுச் சின்னமும் மற்றும் காந்தியின் புத்தகமும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கும் டெல்லியில் பிரதமர் மோடிக்கும் இடையில் இந்தியப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அப்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர். குறிப்பாக இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பிலான அபிலாசைகளை நிறைவேற்றுதல், எல்லை தாண்டி வட இலங்கையில் அடி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் மற்றும் அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரட்டை வரி விதிப்பை தடுத்தல் மற்றும் அரச அதிகாரிகளின் திறன்மேம்பாடு தொடர்பில் இந்திய- இலங்கை ஆட்சித்தலைவர்கள் முன்பு இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை பிறந்தால் லைக்காவில் வேலை போகும்! 60 மில்லியன் பவுண் வரி நிலுவை! அரசியலிலும் சறுக்கல்! வியாபாரத்திலும் சறுக்கல்!

தை மாதம் 31 திகதி லைக்காவின் பணியாளர்கள் 316 பேர் வேலையை இழக்க உள்ளனர். பிரித்தானியாவில் பணியாற்றுகின்றவர்களில் 90 சதவீதமானவர்கள் வேலைநீக்கப்பட, 50க்கும் உட்பட்டவர்களே பிரித்தானியாவில் இருந்து பணியாற்ற உள்ளனர். 2022 இல் லைக்கா நிறுவனம் 24 மில்லியன் பவுண்கள் நட்டமடைந்ததாக கணக்கியல் கோவைகள் தெரிவிக்கின்றது. அத்தோடு கடந்த ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் லைக்கா மோபைல் எட்டாயிரம் பவுண்களுக்கு அதிகனான தொகை வரி செலுத்தவேண்டும் என உத்தரவுவிட்டிருந்தது. அத்துடன் லைக்கா மோபைல் நிதிமோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றசம்சாட்டியிருந்தது. மேலும் பிரித்தானிய நீதி மன்றம் லைக்கா மோபைல் நிறுவனம் 51 மில்லியன் பவுண்கள் வரி செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி அண்மையில் தீர்ப்பளித்து இருந்தது.

லைக்கா சுபாஸ்கரனும் லிப்பரா பாஸ்கரனும் 2000ம் ஆண்டுகளில் தொலைபேசி அட்டை விநியோகத்தில் போட்டாபோட்டியாக வளர்ந்தவர்கள். இவர்களுக்கு கீழ் இயங்கியவர்கள் மற்றவர்களது தொலைபேசி அட்டை விற்பவர்களைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவத்தில் லிப்பரா நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கண்டு வசீகரன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அன்று 2008இல் அவர் தேசம்நெற்றை அணுகியதால் இச்செய்தி எமது சகோதரப் பத்திரிகையான லண்டன் குரலில் வெளியிடப்பட்டு வசீகரனுக்கு நட்டஈட்டையும் இரு நிறுவனங்களும் வழங்கியது.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவித்த வசீகரன் தற்போது தனது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாகவும் 2008இல் நடந்த சம்பவங்களை மீளவும் எண்ணிப்பார்த்தார். மேற்படி வன்முறைச் சம்பவம் பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியிலேயே இடம்பெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன் தங்கள் வியாபார விளம்பர நிலைகளுக்காக மல்லுக்கட்டிய இரு நிறுவனங்களும் கடந்த இருபது ஆண்டுகளில் அமோக வளர்ச்சியை எட்டின. லிப்பரா பாஸ்கரன் மொபைல் வியாபாரத்தை விற்று முற்றிலும் தமிழ் சூழலுக்குள் தனது எஞ்சிய காலத்தை கழிக்க எண்ணியுள்ளார். விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட ஐபிசி ஊடகத்தை பொறுப்பேற்ற பாஸ்கரன் ஒரு முதலமைச்சர் கனவோடு இயங்கி வருகின்றார். இவரது கனவை குலைத்து வரும் எம்ஏ சுமந்திரனை ஐபிசி பாஸ்கரன் முழுபலம் கொண்டு ஓரம்கட்ட முனைந்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசத் துரோகியாக்கியதில் பாஸ்கரனின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் ஐபிசி பாஸ்கரன் எதிர்பார்த்தது போல் தமிழரசுக் கட்சியை தன் பண, ஊடக பலத்தைக் கொண்டு தோற்கடிக்க முடியவில்லை. சுமந்திரனையும் கட்சியை விட்டு துரத்த முடியவில்லை. இப்போதும் ஐபிசி பாஸ்கரனின் முதலமைச்சர் கனவுக்கான தடை விலகவில்லை.

மாறாக அல்லிராஜா சுபாஸ்கரன், நேரடியாக அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அரசியலில் தான் ஒரு ‘கிங்மேக்கர்’ ஆக வரவேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது. லண்டனில் 24 மில்லியன் பவுண்கள் நட்டக் கணக்கு 2022இல் காட்டப்பட்டாலும் இலங்கைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தார். தமிழ் பொது வேட்பாளராக சங்கு அரியநேந்திரன் நிறுத்தப்பட்டு அவரது வெற்றிக்கு நிதி வாரி வழங்கப்பட்டது. மறுபுறம் ஜனாதிபதி ரணிலுடைய தேர்தல் பிரச்சார நிதியையும் அல்லிராஜா சுபாஸ்கரனே வழங்கியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள் முற்றாக மறுக்கின்றனர்.

மேலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தெற்கில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 15 லட்சம் சமபளம் கொடுத்து ஒலிவாங்கியில் போட்டியிட்டவைத்தார். வடக்கில் சங்கு சின்னத்தில் முதலீடு செய்தனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக அது முடிந்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதனைத் தவிர ஏனையவர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை இழந்தனர். வி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வியாபராத்தில் சறுக்கினார்களோ அல்லது கணக்குப் புத்தகத்தை சறுக்க வைத்தார்களோ என்பது எல்லாம் ‘லிங்க பூசை’ ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணனுக்குத் தான் வெளிச்சம். ஆனால் அரசியலில் சாண் ஏறாமலே முழம் சறுக்கியது. ‘ஒருவன்’ என்று தற்போது ஒரு ஊடகத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் வெக்ரோன் தொலைக்காட்சியை நடத்தியவர்கள் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒருவன் என்ற ஊடகத்தை ஆரம்பித்துள்ளனர். பணம் பலதும் பத்தும் செய்யும் என்பதற்கு லைக்கா சிறந்த உதாரணம்.

லைக்காவுடைய பெரும்பாலான வர்த்தகச் செயற்பாடுகள் தற்போது இந்தியா நோக்கி நகர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் 60 மில்லியன் பவுண்கள் வரி நிலுவை இருக்கின்ற போது எப்படியும் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மீதான செயற்பாடுகள் இறுக்கமடையும். அதனால் செலவுக்குறைப்புக்கான செயற்பாடு என்ற பெயரில் லைக்கா இந்தியாவை நோக்கி நகர்கின்றது. மேலும் லைக்கா நிறுவனம் சினிமாவிலும் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளதால் அவர்கள் இந்தியா – தமிழகம் நோக்கி நகர்கிறார்கள்.