07

07

பௌத்த பிக்குவின் பூதவுடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள் – சிலாகித்து பேசும் சிங்கள ஊடகங்கள்! 

பௌத்த பிக்குவின் பூதவுடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள் – சிலாகித்து பேசும் சிங்கள ஊடகங்கள்!

கேகாலையில் முஸ்லிம் மக்கள் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

காலஞ்சென்ற கனேகந்த ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் பரதெனியே சந்தரதன தேரரின் இறுதி சடங்கு முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கன்னத்தோட்டையில் வாழும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்த தேரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள தமது வர்த்தக நிலையங்களை மூடி, தேரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுலைமானியா மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்ற நிலையில், தேரரின் சடலத்தை முஸ்லிம் மக்கள் சுமந்து சென்றுள்ளனர். சமூகங்களுக்கிடையில் பிணைப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அறநெறியில் ஈடுபட்ட தேரர் தனது 69ஆவது வயதில் கடந்த நான்காம் திகதி காலமானார்.

சிங்கள இனத்தை சேர்ந்த தேரருக்கு முஸ்ஸிம் மக்களால் வழங்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகம் சிலாகித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தொடரும் மருத்துவசாலை ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் !

வடக்கில் தொடரும் மருத்துவசாலை ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் – கவனத்தில் கொள்வார்களா வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள வைத்தியர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடமை நேரத்தில் மருந்து வழங்கும் ஊழியர்கள் இல்லாததால் மருத்தை பெறுவதற்கு நீண்டநேரமாக நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு தினமும் வெளிநோயார்கள் பலர் வந்து செல்கின்றனர். அந்தவகையில் தூர தேச பிரதேசங்களில் இருந்தும் மக்கள் சிகிற்சை பெறுவதற்காக அங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் 07.12.2024 அதிகாலையில் வந்து காத்திருந்த நோயாளிகள் மருத்துவரிடம் மருந்து சீட்டை பெற்று மருந்து வாங்க மருத்துவமனை மருந்தகத்தில் அதிக நேரமாக தாம் காத்திருப்பதாகவும், எனினும் மருந்து வழங்கும் ஊழியர்கள் இதுவரை வரவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.  இதனை சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவேற்றியும் உள்ளார்.

இலங்கையின் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளுமே முறையாக செயற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. அவற்றின் இயங்குநிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. எனினும் மருத்துவசாலைகள் தொடங்கி பாடசாலைகள் வரை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கவனக்குறைவான ஊழியர்கள் நடவடிக்கைகள் என பல குறைபாடுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மருத்துவமாபியாக்களை கைநீட்டி  பாராளுமன்றம் சென்ற வைத்தியர் ஊசி அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றம் சென்ற சிறீபவானந்தராஜா என இரண்டு மருத்துவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இந்த நிலையில் மருத்துவசாலைகள் முறையாக செயற்படவும் – அதிகாரிகள் ஊழியர்கள் ஊழல் இல்லாமல், வேலை மற்றும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் செயற்படவும் என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்க போகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/s2hTYjDkECG7i9uc/

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான தடை – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் கோரிக்கை!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது.

ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டமானது, இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விஸா அனுமதி தடைகள் தொடர்பான 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப் பதிவுகளையும் கோரியிருக்கின்றது.

மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல், மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன.

அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதித்துவமின்மை இனவாதமா?

அமைச்சரவையில் முஸ்லீம் பிரதிநிதித்துவமின்மை இனவாதமா? மாவடிப்பால மரணங்களுக்கு யார் பொறுப்பு?

சட்டத்தரணி, மனித உரிமைவாதி மற்றும் அரசியல் ஆய்வாளர் செய்ட் பசீர்

 

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீட்க அனுர அரசுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீட்க அனுர அரசுடன் கைகோர்க்கும் அமெரிக்கா!

 

இலங்கையில் இருந்து வௌிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயார் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் டொனால்ட் லூவுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு தேவையான போதெல்லாம் ஆதரவளிக்க தயார் எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் கூடாரம் மீது திட்டமிட்டு தாக்கிய இஸ்ரேல் – இருபதுக்கும் அதிகமானோர் பலி !

தெற்கு காசாவின் கான் யூனிஸின் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கும் முன் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக தனது மத்திய கிழக்கு தூதுக் குழுவை கட்டார் மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கும் நிலையிலேயே இந்த பயங்கர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலினால் மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட மவாசியில் நேற்று முன்தினம் இரவு போர் விமானங்கள் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் இலக்கு வைத்ததாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘மவாசி பகுதியில் பொதுமக்கள் மாத்திரமே இருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் மஹ்மூத் பசல் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுமியை கொலை செய்து கழிவறை குழியில் வீசிய சோகம்  – இலங்கையை உலுக்கிய கொலையின் பின்னணி !

14 வயது சிறுமியை கொலை செய்து கழிவறை குழியில் வீசிய சோகம்  – இலங்கையை உலுக்கிய கொலையின் பின்னணி !

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிசார் தற்போது வௌியிட்டுள்ளனர்.

டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.

முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

02.12.2024 அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, ​​காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய அந்தப் பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது,  மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

05.12.2024 வரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முறைப்பாட்டாளரின் 42 வயதுடைய கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

02.12.2024 அன்று கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.

போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு,  சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில்  போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 06.12.2024 அன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 16.12.2024 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.