08

08

தேசிய இனப்பிரச்சனை தீர்வு குறித்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு !

தேசிய இனப்பிரச்சனை தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (07) மாலை இடம்பெற்றது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பிலும், புதிய அரசாங்கத்துடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் சுவிஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின், இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வோல்ற், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப்பிற்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற், சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன் உள்ளடங்கிய குழுவினர் தமழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.

இதில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியா வாள்வெட்டு சம்பவம் – ஐவர் கைது !

வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கி முனையில் மட்டும்தான் விதிகள் கடைப்பிடிக்கப்படுமா? இதுவென்ன பழக்கதோசமா?

துப்பாக்கி முனையில் மட்டும்தான் விதிகள் கடைப்பிடிக்கப்படுமா? இதுவென்ன பழக்கதோசமா?

தமிழ் – முஸ்லீம் உறவு நிலையும் தேசிய நல்லிணக்கமும் சாத்தியமா? பிரிவினைக்கான தேவை உள்ளதா:

ஆய்வாளர் சட்டத்தரணி மொகமட் நிஸ்தார் மற்றும் ஆய்வாளர் கலைஞர் மாவடி ஏஆர் சிறிதரன் ஆகியோருடன் இன உறவுகள் தொடர்பான உரையாடல்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். குறித்த சந்திப்பில் மேலும் பேசிய நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

மழைபெய்தாலும் அனுரா தான் குற்றவாளி – தென்னம் பாளை விடாவிட்டாலும் அனுர தான் குற்றவாளி

“மழைபெய்தாலும் அனுரா தான் குற்றவாளி – தென்னம் பாளை விடாவிட்டாலும் அனுர தான் குற்றவாளி” விசித்திரமான டிசைனில் இலங்கை அரசியல்!

அரிசி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பை மேற்கோள் காட்டி ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அனுர குமார அரசின் மீது தமது காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

இதுவேளை, நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகவும் அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான மாற்று திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கான அறிவுறுத்தல்களை அரசு தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதேவேளை அரசி தொடர்பான விலை அதிகரித்தமையாலும் மக்கள் பாதிக்கப்படுவதாக பல ஊடகங்கள் மேற்கோள் காட்டிய நிலையில், வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அவசர சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு விலைகளின் உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூ. 225 மொத்த விலைக்கும் ரூ. 230 சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடு கடந்த கால அரசுகளின் பொருளாதார திட்டமிடல் இல்லாத சூழலின் விளைவுகளேயாகும். தேர்தலில் தோல்வியடைந்த குழுவினர் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது இந்த பொருளாதார நெருக்கடியை போட்டுவிட்டு கடந்து விடப்பார்க்கிறார்கள் என தேசம் நெட் நேர்காணலில் சட்டத்தரணி நிஸ்தார் மொகம்மட் தெரிவித்தார். குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட இன்னுமொரு அரசியல் ஆய்வாளரான மாவடி சிறீதரன் எதற்கெடுத்தாலும் அனுர அரசை குறை சொல்வதில் தான் பலருடைய கவனமும் இருக்கிறது. இவர்களுக்கு மழை பெய்தாலும் அனுரதான் காரணம். வெள்ளம் வந்தாலும் அனுர குமார தான் காரணம். நீண்ட கால திட்டமிடல்களுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலை செய்வதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்காமல் கடந்த கால அரசுகளின் தவறுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது ஆரோக்கியமான விடயம் இல்லை என மாவடி சிறீதரன் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்தாமல் சாராயக் கடைகளை நம்பி நாட்டை நடத்தினாரா ரணில் விக்கிரமசிங்க..? 

தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்தாமல் சாராயக் கடைகளை நம்பி நாட்டை நடத்தினாரா ரணில் விக்கிரமசிங்க..?

கடந்த வாரம் முழுமையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கையின் ஊடகங்கள் அனைத்திலும் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் கடந்த அரசு தேர்தல் காலத்தை இலக்கு வைத்து வழங்கிய மதுபான சாலை அனுமதிகளால் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் மதுபான சாலைகள் நிறைந்து காணப்படுவதாகவும் கிளிநொச்சிக்கு 16 புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி வழங்கியதன் மூலம் 5000 பேருக்கு ஒரு மதுபான கடை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் விசனம் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னால் வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பில் மேலும் பேசிய ரணில் விக்கிரமசிங்க, ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை. இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. ” என தெரிவித்துள்ளார்.

நாட்டினை முன்னேற்றவும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் – திறைசேரியை நிறைக்கவும் முறையாக செயற்படுத்தவும் கூடியதான நீண்டகால திட்டங்களை கொண்டு வராமல் மூத்த அரசியல்தலைவரான  ரணில் விக்கிரமசிங்க சாராயக்டைகளை நம்பி செயற்பட்டுள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஓர் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான எந்த திட்டங்களையும் செயற்படுத்தாமல் வெளிநாட்டு கடன்களை பெற்று தமது ஆடம்பரத்தை அரசியல் தலைவர்கள் மேம்படுத்தியதும் – தேவையற்ற பொருளாதார திட்டங்களை முன்னைய அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தியதுமே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் மதுபான சாலைகளை நம்பிய ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற கொள்கை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலிந்து சர்வதேசத்தை அழைக்கின்றனர்! ஆனால் சர்வதேசம் காஸாவில் இனப்படுகொலை செய்வதில் படு பிஸியாக இருக்கின்றது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலிந்து சர்வதேசத்தை அழைக்கின்றனர்! ஆனால் சர்வதேசம் காஸாவில் இனப்படுகொலை செய்வதில் படு பிஸியாக இருக்கின்றது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாவட்டத் தலைவிகள் ஒருவர் மாறி ஒவ்வொருவராக வந்து “எங்களுக்கு உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேசம் தான் வேணும் ஆனால் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை” என்று ஒப்புவித்தனர்.

இவர்கள் அழைக்கின்ற சர்வதேசம் அமெரிக்கா உட்பட்ட நட்பு நாடுகளின் பூரண சம்மதத்துடனேயே 2009 பேரழிவுக்கு இட்டுச்சென்ற ‘ஒப்பிரேசன் பீக்கன்’ என்று பெயரிடப்பட்ட இறுதியுத்தம் 2006 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் களத்தில் இலங்கை இராணுவம் நின்றபோதும் பின்னணியில் யுத்தத்தை இயக்கியது இந்தியாவும் அமெரிக்கா உட்பட்ட இணைத் தலைமை நாடுகளுமே.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் இம்மாவட்டத் தலைவிகள் வலிந்து அழைக்கும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேசம் இலங்கையில் நடந்தது யுத்தக் குற்றம் என்றும் இனப்படுகொலை என்ற வரையறைக்குள் அதனை உட்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டனர். ஆனால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளில் 300 பேர்வரை கிணற்றுத் தவளைகளாக குரல் எழுப்பியே மரணித்துவிட்டார்கள் என்கிறார் இவ்வமைப்புகளிலிருந்து வெளியேறிய ஒரு பெண்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் எங்களுடைய தேர்தல் கட்சிகள் போல் சிதறுண்டுபோய் சின்னாபின்னமாகிவிட்டதாகவும் இந்த அபலைகளான அப்பாவிகளை பலரும் தத்தம் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் முன்னணி அரசியல் செயற்பாட்hளரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவியுமான ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார. அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கிக்காகவும் வெளிநாடுகள் தங்களுடைய நலனுக்காகவும் இந்த அபலைப் பெண்களைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

சில பெண்களுக்கு வெளிநாட்டுப் பயணம் என்ற ஆசiவார்த்தைகளைச் சொல்லியும் இவர்கள் தூண்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இவர்களது போராட்டத்தை தக்க வைக்க நிதி வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிதி இவர்களை அமைப்பாக உருவாக்கி வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாக அக்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாவட்டத் தலைவியர் காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிக் கதைத்ததிலும் பார்க்க அவர்களிடம் ஒரு அரசியல் நோக்கம் இருந்ததைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக எழுதிக்கொடுத்ததை ஒப்புவித்தனர். அத்தோடு மிக வலிந்து தற்போதுள்ள அரசு முன்னைய அரசுகளைக் காட்டிலும் மோசமானது என்றும் தற்போது புலனாய்வுப் பிரிவினரின் அட்டகாசங்கள் கூடிவிட்டதாகவும் மாவீரர் தினத்தைக் கொண்டாடியவர்களை கைது செய்யுமாறு ஆளும்கட்சி அமைச்சர்களே கூறுவதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என்றும் தெரிவித்து வருவதாகவும் உண்மைக்குப் புறம்பான பொய்களை ஊடக மையத்தில் தெரிவித்தனர். அத்தோடு இனிமேல் புலனாய்வுப் பிரிவினர் தங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களோடு கைகலப்பு ஏற்படும் என்று பொதுத்தளத்தில் வந்து சொல்லுமளவுக்கு நாட்டில் ஜனநாயகம் வந்துவிட்டதையும் அவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது – டமாஸ்கஸை கைப்பற்றியது கிளர்ச்சி படை !

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்தனர். மேலும் டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது வட்ஸ்அப் பதிவில், “டமாஸ்கஸ் நகரத்தை பஷர் அல்-ஆசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.