03

03

மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

இனவாதத்தை தூண்டியதாக கைதான தென்னிலங்கையை சேர்ந்தவர் விடுதலை – மாவீரர் தினத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை  என கொழும்பு பிரதான நீதவான் கேள்வி !

நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் , மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு ஏன் அவர்களை கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக திரித்து இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிலங்கையில், கெலும் ஹர்ஷன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு , குற்ற விசாரணைப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் – ஆளுநர் வேதநாயகன்

யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

“விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள். இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா. சுதர்சனும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார்.

கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன் தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்”- என்றார்.

அனுர அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம் – பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(3) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு இவ்வாறு வங்ரோத்தடைந்துள்ள நிலையில் ஐனாதிபதி அதனை மறைப்பது, வருத்தமளிப்பதாக உள்ளது.

இதேபோலவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவர்களால் நடத்தப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம். நாங்கள் எவ்வாறு சிங்கள மக்களின் இனமத அடையாளங்களை மதிக்கின்றோமோ அதே போல் தமிழினத்தின் அடையாளங்களும் தேசிய தனித்துவமும் மதிக்கப்பட வேண்டும்.  2/3 பெரும்பாண்மையை பெற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு தரப்போகின்றது?” என வினவியுள்ளார்.

நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(03.12.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வேண்டுமென்றே பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், எங்களுக்கெதிராக இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முயற்சித்தனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என கூறியவர்களே தற்போது இனவாதக் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

“மாகாண சபை முறை நீக்கப்படாது – உறுதியளித்த அனுர தரப்பு ” – “வேறு அதிகாரங்கள் வேண்டாம். மாகாண சபைகளே போதும் என கூறும் தமிழ்தேசியம்!

மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ள கருத்து பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தாக்கப்பட்ட ஊசி அர்ச்சுனா – பின்னணி என்ன..?

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.

‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன். அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள். அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.

பொதுமக்களை செவிமடுங்கள் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் !

இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.

இந்த தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எங்களிற்கு இந்த தேசத்தின் பிரஜைகள் விடுத்துள்ள சவாலை கரங்களில் எடுங்கள் பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றார்கள் என்பதை செவிமடுங்கள்,

நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை சிறந்த இடமாக மாற்றுவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை தலைப்புச்செய்திகளை மட்டுமே வைத்து அரசியல் பேசும் தமிழ் தேசியவாதிகள் – டில்வின் சில்வா உண்மையிலேயே தெரிவித்தது என்ன..? 

பத்திரிகை தலைப்புச்செய்திகளை மட்டுமே வைத்து அரசியல் பேசும் தமிழ் தேசியவாதிகள் – டில்வின் சில்வா உண்மையிலேயே தெரிவித்தது என்ன..?

டில்வின் சில்வா மாகாண சபை நீக்கம் பற்றி பேசிய கருத்தை வைத்து என்.பி.பி அரசு மீதான தமது எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் ” மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான  மக்கள் ஆணை எதுவும் பெறப்படவே இல்லை.  அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால் , மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந் தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரச மைப்புதேவை . அதில் மாகாண சபை இருக்குமா , இல்லையா என்பதே விடயம்” என ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  விளக்கமளித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துகொள்ள டில்வின் சில்வா ” 2024 நவெம்பர் 30 வீரகேசரி செய்தித்தாள் என்னுடன் நடாத்திய நேர்காணலைச் சார்ந்ததாக  பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரிசெய்யவேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க  1987 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டின் சகல இனத்தவராலும் ஏற்றுக்கொள்ள ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக என்.பி.பி மீது கல் எறிவதற்கான சூழலை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். இனவாதம் நீங்கிப் போனால் தாம் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடே  தமிழ்தேசிய தலைமைகளின் எதிர்ப்புக்கு காரணம் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டிலேயே டில்வின் சில்வா கூற வந்த விடயம் இனவாதமாக ஊடகங்களினால் கையாளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மேலும் 13ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபை முறையை தமிழர்கள் தம் ஆஸ்தான நாயகர்கள் என கூறப்படும் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என சட்டத்தரணி பஷீர் செய்யத் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.