யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,
“விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள். இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா. சுதர்சனும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார்.
கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன் தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்”- என்றார்.