தற்சார்பு பொருளாதாரத்தை வளப்படுத்தாமல் சாராயக் கடைகளை நம்பி நாட்டை நடத்தினாரா ரணில் விக்கிரமசிங்க..?
கடந்த வாரம் முழுமையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கையின் ஊடகங்கள் அனைத்திலும் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் கடந்த அரசு தேர்தல் காலத்தை இலக்கு வைத்து வழங்கிய மதுபான சாலை அனுமதிகளால் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் மதுபான சாலைகள் நிறைந்து காணப்படுவதாகவும் கிளிநொச்சிக்கு 16 புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி வழங்கியதன் மூலம் 5000 பேருக்கு ஒரு மதுபான கடை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் விசனம் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமானவை அல்ல எனவும், அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னால் வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பில் மேலும் பேசிய ரணில் விக்கிரமசிங்க, ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளது. அவை சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை. இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. ” என தெரிவித்துள்ளார்.
நாட்டினை முன்னேற்றவும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் – திறைசேரியை நிறைக்கவும் முறையாக செயற்படுத்தவும் கூடியதான நீண்டகால திட்டங்களை கொண்டு வராமல் மூத்த அரசியல்தலைவரான ரணில் விக்கிரமசிங்க சாராயக்டைகளை நம்பி செயற்பட்டுள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஓர் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான எந்த திட்டங்களையும் செயற்படுத்தாமல் வெளிநாட்டு கடன்களை பெற்று தமது ஆடம்பரத்தை அரசியல் தலைவர்கள் மேம்படுத்தியதும் – தேவையற்ற பொருளாதார திட்டங்களை முன்னைய அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தியதுமே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் மதுபான சாலைகளை நம்பிய ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற கொள்கை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.