தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !
தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார். பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகை 25.12.2024 வயாவிளானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் வேதநாயகன், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள்இ வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனவும் இவற்றை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தி வருகின்றேன் என்றார் ஆளுநர்.