அரகலய போராட்டங்கள் அனுர அலையினால் காணாமல் போன 6,000 அரசியல்வாதிகள் – FAFERAL
2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிரான அரகலய போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக 6,000 அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் பெப்ரல் (Faferal) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில், “போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் நம்பிக்கை இழந்து அரசியலில் இருந்து விலகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்
பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய மேலும் 2,000 பேர் இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும், ஏனைய கட்சிகளை உருவாக்குதல், ஏனைய கட்சிகளுடன் இணைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் சுமார் 30 அரசியல் கட்சிகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு கோரப்பட்ட நிலையில் 80,000க்கும் அதிகமானோர் வேட்பாளர்களாக தாம் தோற்றியிருந்த – தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் இல்லை, என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசியமக்கள் சக்தியின் அனுர அலையால் மிக நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் முதல் நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவர்களை பொருத்தவரையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.