இலங்கையைக் காதலிக்கும் சுற்றுலாப் பயணிகள் – 2 மில்லியனைத் தாண்டும் வருகை !
2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நேற்று 26ஆம் திகதியுடன் 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமானநிலையத்தில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. வரலாற்றில் 4ஆவது தடவையாக சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. முன்னதாக 2016, 2018, 2018 ஆண்டுகளில் இது பதிவாகியிருந்தது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல், கொரோனா மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளதார வீழ்ச்சி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் இலங்கையின் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை குறித்தளவு முன்னேற்றத்தை எட்டிவருகின்றது.
இதேவேளை புதிய அரசு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு 39 நாடுகளுக்கு இலவச விசா நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. 2025இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.