September

September

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.” – பெண்கள் அமைப்பு விசனம் !

இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என பெண்கள் கூட்டமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது.

 

சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல் இரக்கமற்ற மனிதாபிமானமற்ற அவமானகரமாக நடத்தப்படுதல் போன்ற அடிப்படை உரிமை மீறல்களை இலங்கையின் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர் என அபிமானி என்ற பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

கைதுசெய்யப்பட்டதும் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அடிக்கடி எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அபிமானி பெண்கள் கூட்டமைப்பு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமைகள் உரிய நடைமுறைகள் மனிதாபிமானற்ற மற்ற விதத்தில் நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு போன்றவை மீறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

 

தங்களை கைதுசெய்த பின்னர் போதைப்பொருள் வைத்திருந்த பொய்யான குற்றச்சாட்டின்கீழ் தங்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதாகவும் பொலிஸாரும் வாடிக்கையாளர்களும் தங்களை துன்புறுத்துவதாகவும் பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எங்கள் கைதுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றதும் நாங்கள் போதைப்பொருள் வைத்திருந்தோம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என சகுனி மாயாதுன்ன என்ற பாலியல் தொழிலாளி தெரிவித்துள்ளார்.

 

பாலியல் தொழில் என்பது சட்டபூர்வமற்றது என்பதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வார்கள்என சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பிரிவை சேர்ந்த ரேணுகாஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

எனினும் நாட்டில் அனைத்து பிரஜைகளிற்கும் அடிப்படை உரிமை உள்ளது தடுத்துவைப்பவர்களை தாக்குவதற்கு நாங்கள் பொலிஸாருக்கு அனுமதியளிக்கவில்லை மேலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பணிக்கு அமர்த்தவேண்டும் இவை நடக்காவிட்டால் முறைப்பாடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால் இலங்கையில் மது – போதைப்பொருள் பாவனையை இல்லாது செய்யலாம்.” – சஜித் பிரேமதாச

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது,புகையிலை,சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ”போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” VIP வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போன்று, போதைபொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்.

 

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதைய பாடசாலை கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என சஜித் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் அரசியல் கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை.”

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை யாதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,

 

எதிர்கால கொள்கை பிரசாங்கள் குறித்து சுருக்கமாக கூறினால் திருமண தரகர்கள் போன்று இருபுறமும் பேசும் கதை போன்று இருக்கின்றது. அதை தருகின்றோம் இதை தருகின்றோம் என்று கூறுவார்கள். அதில் அதிகமான விடயங்கள் செய்ய முடியாதவை.

 

கிரிகெட் சபைக்கு வாக்கெடுப்பு நடத்தி பகிரங்கமாக தான் தெரிவு செய்வார்கள். அரசியலில் போன்று ஒரு பட்டியலை எடுத்து கொண்டு வந்து அதில் உள்ளவர்களை அதிகாரிகளாக நியமிக்க மாட்டார்கள்.

 

கட்சிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை. காலி வீதியில் இருந்து பத்தரமுல்லை வரையில் இருக்கும் காரியாலயங்களில் மட்டுமே இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றது.

 

அரசியல் கட்சியில் தங்களுக்கு ஒரு அசாதாரணம் நிலவும் போது அனைத்து விடயங்களையும் வெளியில் கூறி விடுவார்கள். கொள்கை பிரசாரத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் போது இது பிழை என்று யார் கூறினார்கள்.

 

விவசாயிகளும் இளைஞர்களும் வீதிக்கு வந்த பிறகே அது கூறப்பட்டது. அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் தான் எதிர்க்கட்சிக்கு சென்று அமர்ந்தார்கள். இல்லாவிட்டால் யாரும் செல்ல மாட்டார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆண்டுதோறும் இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 900 குழந்தைகள் கண்டறியப்படுகிறார்கள்.” – தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்

ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 900 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

பிறந்தது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குழந்தை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது எனவும், அந்தவகையில் புதிதாக 471 ஆண் பிள்ளைகளும் 454 பெண் பிள்ளைகளும் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சமூக வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் குழந்தை புற்று நோயாளர்கள் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் – அர்மேனியா இடையோன போர் – அகதிகளாக அலையும் மக்கள் !

ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது. இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர்.

கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது. இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தே செயற்படுகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களை இலங்கைக்கு கொண்டுவந்து சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறிப்பாக துபாயில் வசிக்கின்றனர் தங்கள் சகாக்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் அங்குள்ளனர் என்ற  கேள்விக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ளனர் எனினும் துல்லியமான எண்ணிக்கை தெரியாது என டிரான் அலெஸ்தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதல் காலாண்டு பகுதியில் 35 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலே சடலம்  உள்ள நிலையில் கிளிநொச்சி குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுக்களுக்கு இடையேயான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என  ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“உணவு வழங்காமல் உள ரீதியான சித்திரவதை- 5 கொன்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர்.” – சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் வழங்கிய வாக்குமூலம் !

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளைக்குத்  தாயான இருபத்தொரு வயதான தியாகசெல்வி என்பவரே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த அவர் தெரிவித்துள்ளதாவது,

“ கடந்த ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றேன். அங்கு நான் பணிபுரிந்து வந்த வீட்டில் உள்ளவர்கள் எனக்கு உணவு வழங்காமல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்தனர்.

இதனையடுத்து எனது நிலை குறித்து வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருந்தேன். இதனால் கோபமடைந்த வீட்டு உரிமையாளரும் அவரின் தாயாரும் ஒன்றாக சேர்ந்து என்னை கொடூரமான முறையில் தாக்கியதோடு, பின்னர் 5 கொன்கிரீட் ஆணிகளை விழுங்கும்படியும்  கட்டாயப்படுத்தினர்.

பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஒன்றையும் விழுங்கவைத்தனர். இதன்போது குறித்த இரும்புத் துண்டு தனது தொண்டையில் சிக்கியது. சில நாட்களுக்குப் பின்னர் எனது வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியதையடுத்து குடியிருப்பாளர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்போது  என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது  வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டு, எனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.அதன் பின்னர் சவூதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டின் மூலம் தூதரகத்தின் ஊடாக நான் இலங்கைக்கு  அழைத்து வரப்பட்டேன்.

பின்னர் கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்து பார்த்த  போது எனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி அகற்றப்பட்டதோடு  மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் தற்போதும் உள்ளது” இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்த பெண்ணின் தாயார், கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது  மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காகவே  வெளிநாடு சென்றார் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனவிரக்தியால் 23 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை !

மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (26) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே இவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் மாதம் அவரது மாமா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.