August

August

சீனாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு தாய்வான் பயணம் !

தாய்வானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனாவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தாய்வான் சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தாய்வானை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் எல்லையில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிவதற்குள், பெலோசியை தொடர்ந்து 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு நேற்று தாய்வானுக்கு சென்றது. தைபே நகரில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில், அமெரிக்க அரசு விமானம் நேற்றிரவு தரையிறங்கும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி பதவி நீக்கம் செய்யப்பட்டு  ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி போராடுவோர் மீது கடுமையான இராணுவபலம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாது இருக்கும் நிலையில் இராணுவ ஆதிக்கம் இன்னும் அங்கு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.

அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

உரிமைகளை கேட்டு போராடிய பெண்களை அடித்து விரட்டிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.

இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பெண்கள் முன்னேறி செல்ல முயன்றதால் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலைந்து ஓடிய பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கினர். மேலும் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தலிபான்கள் அடித்து விரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட்டினி அபாயம் நிறைந்த ஆபிரிக்கா நோக்கி பயணமானது உக்ரைனின் தானியக்கப்பல் !

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மிஷெல் தெரிவித்தார்.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் கண்ணாடி ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு சீனாவில் விலங்குகளிடமிருந்து பரவும் புதிய வகை வைரஸ் !

கிழக்கு சீனாவில் பரவிவரும் புதிய வகை வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Novel zoonotic Langya virus identified in China

கிழக்கு சீனாவில் பரவிவரும் LayV (The novel Langya henipavirus) என்ற புதிய வகை வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

LayV வைரஸ் சீனாவின் Shandong மற்றும் Henan மாகாணங்களில் பரவியுள்ளது

காய்ச்சல், சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

LayV தொற்று ஆபத்தானது அல்லவென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தொற்று தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி – உதவிக்கரம் நீட்டுகிறது அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி !

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’ ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா, இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட பரிசுத்தொகையினையே அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

முடிவுக்கு வந்ததது காலிமுகத்திடல் போராட்டம் – ரணிலை ஜனாதிபதியாக்கியதை தவிர எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத சிறுபிள்ளை வேளாண்மை !

தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சக்களின் ஆட்சியே என குற்றஞ்சாட்டப்பட்டு காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்தால் ராஸபக்சக்களின் ஆட்சி கவிழ்க்கப்படவும்  இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் இலங்கை ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் காரணமானது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நோ டீல் கம என ரணிலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம் மௌனித்துப்போனதுடன் – அடுத்தடுத்து கோட்டா கோ கம போராட்டத்தின் முக்கியமான  போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு பக்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான இடதுசாரிகளின் போராட்டம் தான் கோட்டாகோகம என பேசப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு முன்னணியில் நின்ற செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த அதிகப்படியான நிதியுதவி, ரணில் பதவியேற்றதும் தொடர்ந்து பேணப்பட்ட  போராட்டக்காரர்களின் மௌனம் என பல விடயங்கள் போராட்டம் ரணிலுக்கு சார்பான மேற்குலக நாடுகளால் நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக  09.08.2022 காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியிருந்த வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்திருந்தார்.

அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

போராட்டத்தில் எந்தவொரு வலுவான கோரிக்கைகளையும் இந்த போராட்டக்காரரர்கள் முன்வைக்கவில்லை. பாரிய மக்கள் போராட்டம் என கூறப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான வெற்றிகள் எவையுமே கிடைக்கவில்லை. பொருளாதார மீட்பையே வலியுறுத்தியதாக இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை இன்னமும் அதளபாதாளத்திலேயே வீழ்ந்து போயுள்ளது. சுருக்கமாக சொல்வதாயின் சமூக வலைத்தளங்களில் இயங்குநிலையில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமும் – அரசியல் லாபமீட்ட முனைந்த சில பெரியவர்களுமாக சேர்ந்து செய்த இந்த போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல எந்த வெற்றியும் தராது முடிந்து போயுள்ளது.

 

இந்த போராட்டங்களின் ஒரே விளைவு மக்களின் ஆணையால் வழங்கப்படாத ரணிலின் நீண்ட கால ஜனாதிபதி இருக்கையை அவர் பிடித்துக்கொண்டது மட்டுமே. வேறு எந்த மாற்றத்தையுமோ – சிங்களவர்களின் ஆதிக்க மனோநிலை சார்ந்த எந்த மாற்றத்தையுமோ இந்த போராட்டங்கள் வழங்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிரான பதிவை பேஸ்புக் முடக்கி உள்ளது!!!

தேசம்நெற்றில் அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரையை: “ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?” சமூகவலைத்தளமான பேஸ்புக் முடக்கி உள்ளது. யூலை 30இல் இல் தேசம்நெற்றில் வெளியான கட்டுரை, அதனை எழுதிய கட்டுரையாளரால் அவருடைய முகநூல் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் படத்தோடு வெளியான கட்டுரையை பேஸ்புக் முடக்கியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். https://www.thesamnet.co.uk//?p=87861

அமெரிக்க ஐஎம்எப் இன் மிலேச்சத்தனமான திறந்த பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து இருந்த இக்கட்டுரை, காலிமுகத்திடல் போராட்டத்தை அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டதுடன் பாகிஸ்தானில் இம்ரான் கானை ஆட்சித் தலைமையில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தி இருந்ததையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தப்பட்டதும், இலங்கையில் அமெரிக்க – ஐஎம்எப் நலன்களைப் பாதுகாக்கவே என்பதையும் அக்கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் – முகநூல் கருத்தியல் சர்வதிகாரத்தை நிறுவுவதில் பெரும்பிரயத்தனம் செய்து வருகின்றது. இவ்வாறு கட்டுரைகள் ஆக்கங்கள் முடக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கானோரின் முகநூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகள், தொடர்கொலைகள், மற்றும் குற்றச்செயல்களுக்காகவே குறிப்பாக அறியப்பட்ட படங்களை வைத்து பதிவுகளை நீக்கி வந்த முகநூல் தற்போது பதிவுகளின் உள்ளடக்கத்தையும் அதன் ஆழமான கருத்தியலையும் ஆராய்ந்து அதற்கேற்ப பதிவுகளை நீக்கி வருகின்றது. இதன் மூலம் கருத்தியல் சர்வதிகாரம் ஒன்றை நிறுவ முயல்கின்றது. இதில் தேசம்நெற் போன்ற சின்னஞ்சிறு இணையங்கள் மட்டுமல்ல முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் கூட மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழக்கின்றார். எந்த பேஸ்புக் அவரை ஜனாதிபதி ஆக்கியதோ அதே பேஸ்புக் இன்று அவரை ஓரம்கட்ட முயற்சிக்கின்றது.

உலகம் தட்டை என்றும் சூரியன் தான் பூமியைச் சுத்துகிறது என்று முகநூல் தீர்மானித்தால் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கப்பட்டுவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் அதீத உற்பத்தியும் ஆதிக்கமும் (mass production) எவ்வளவு ஆபத்தானதோ அதனைக்காட்டிலும் ஆபத்தானது சமூகவலைத்தளங்களின் பெரும் தொடர்பாடல் (mass communication). உலகத்துக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ தொழில்நுட்பம் வழமைபோல் உலகை தன்னுடைய சர்வதிகாரத்திற்குள் கொண்டுவந்து இதுவரை பொருளாதார அடிமைகளாக இருப்பவர்களை கருத்தியல் அடிமைகாகவும் என்றென்றைக்கும் கட்டுக்களை உடைக்க முடியாதவர்களாகவும் ஆக்குகின்றது.

தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி – தொடரும் பதற்றம் !

சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

 

இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் திகதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் திகதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன இராணுவம் அறிவித்தது. அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா இராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது.

 

சீன இராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சீன இராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன இராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன இராணுவம் தெரிவிக்கவில்லை. தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கி போரை தூண்டும் அமெரிக்கா !

உக்ரைனுக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷ்ய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

இதே வேளை போரை முடித்துவைப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளாலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி போரை தூண்டுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதே நேரம் ரஷ்யா – உக்ரைன் போரினால் தொடர்ந்தும் பல நாடுகளில் உணவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துச்செல்கின்றது. இதனை கருத்தில் கொண்டு போரை முடித்து வைக்காது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எந் தமுயற்சியும் மேற்கொள்ளாது  போரை தூண்டி விட்டு தங்களுடைய நீண்டகால விரோதியான ரஷ்யாவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதே வேளை சீனாவுடனான ஆதிக்கப்போரை தாய்வானை சீனாவுக்கு எதிராக தூண“்டிவிடுவதன் மூலம் அமெரிக்கா தீவிரமாக செயற்படுத்துவதால் தென்சீனக்கடல் பகுதியில் போர் ஏற்படுவதற்கான அபாயமான சூழல் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.