06

06

நாடு திரும்புகிறார் கோட்டாபாய – பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அதற்கு பக்க பலமாக நாம் இருப்போம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள்  ஜனாதிபதியின் வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாகவும் தான் இலங்கைக்கு வரும்போது தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அன்ரனியோ குட்டெரஸ் வாழ்த்து !

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் (António Guterres) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது முகங்கொடுத்துள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு தேவையான சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் முக்கியமானதாக அமைந்துள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய திட்டத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சியை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியின் போது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிதல், சட்டவாட்சி, அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்தல் என்பனவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் துரித மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாக செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்காகவும் சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பாலஸ்தீனிய போராளி குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 5 வயது சிறுமி உட்பட 10 பேர் பலி !

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலில், 5 வயது சிறுமி மற்றும் 23 வயது பெண் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

மேலும், இஸ்லாமிய ஜிஹாத் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான தைசீர் அல் ஜபாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவான குத்ஸ் படைப்பிரிவின் தளபதியாகவும், அதன் இராணுவ சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த வார தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மற்றொரு மூத்த போராளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவை குறிவைப்பதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிகள் பல மணிநேரங்களுக்குப் பிறகு ரொக்கெட்டுகளை சரமாரியாகத் தாக்கினர், மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.இஸ்லாமிய ஜிஹாத் 100 ரொக்கெட்டுகளை ஏவியது.

இஸ்ரேல் மற்றும் காசாவின் போர்க்குணமிக்க ஹமாஸ் ஆட்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளில் நான்கு போர்கள் மற்றும் பல சிறிய போர்களில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில் 14 இலங்கையர்களிடம் விசாரணை !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பலிடம் இருந்து 60 செல்போன்கள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்திய போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர்.

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரித்தது.

சோதனையின் போது, என்ஐஏ குழு 60 செல்போன்கள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக் கணினியையும் கைப்பற்றியிருந்தனர்.

முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கைதிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக செயற்படுவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது

மகளின் தொலைபேசியை பார்வையிட்ட தந்தையின் மண்டையை உடைத்த தாய் – யாழில் சம்பவம் !

யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது..

மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.

இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.

இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா்ர்.

சர்வ கட்சி அரசை அமைக்கவே கோட்டாபாய பதவி விலகினார் – நாமல் ராஜபக்ஷ

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் கிளர்ச்சி உருவாகும் பட்சத்தில், அதை அடக்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரே ஒரு போனஸ் ஆசனத்துடன் பாராளுமன்றம் வந்தவர் ரணில் – போராட்டம் தொடரும் என்கிறார்கள் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் !

கோட்டா கோ கமவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், முடிந்தால் தம்மை வெளியேற்றுமாறும் கோட்டா கோ கம எதிர்ப்பாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.

4 மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரிடமோ அல்லது அரசாங்கத்திடமோ அனுமதி பெற்று மக்கள் போராட்ட இடத்திற்கு வரவில்லை எனவும், பொலிஸார் உத்தரவிடுவதால் தாம் அந்த இடத்தை விட்டு வெளியேறபி போவதில்லை எனவும் காலி முகத்திடலை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான சாந்த விஜேசூரிய தெரிவிக்கிறார். மேலும் பேசிய அவர்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ராஜபக்ச எம்.பி.க்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதில் அரகலய இதுவரை வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் இங்கு ஒரு முறை மாற்றத்தை செய்ய வந்துள்ளோம், அரசியல் தலைவர்களை மாற்றுவதற்காக அல்ல. கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பெரும் ஆணை பெற்றிருந்த நிலையில், தலைவர் என்ற முறையில் தோல்வியடைந்ததன் காரணமாகவே தனது ஆசனத்தை விட்டு வெளியேற நேரிட்டது. அப்படியானால், மக்கள் ஆணையின்றி ஒரே ஒரு போனஸ் ஆசனத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க எப்படி ஏற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காலை 5.00 மணிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு பொலிஸார் அறிவித்தனர். ஆனால் அவர்களின் அறிவிப்புகளுக்கு செவிசாய்க்க மாட்டோம். எங்களின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்தால் பரிசீலிப்போம். கூட்டு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எப்போது, ​​எங்கு வெளியேறுவது என்பதை தீர்மானிப்பார்கள் அதுவரை நாங்கள் வெளியேற மாட்டோம். மேலும், முடிந்தால் எங்களை அனுப்பி வைக்க முயற்சி செய்யுமாறு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கூறுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகிறார் சி.வி. விக்னேஸ்வரன் !

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சர்களும், 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படும் அதேவேளை, தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவிகள் மாறும் எனவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும்போது போது தமது உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த நாட்களில் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நிமல் லன்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்க பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

……………………….

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டதாக கூறப்பட்ட மக்கள் போராட்டத்தின் முடிவில் கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினார். தொடர்ந்து அடுத்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்தேசிய கட்சிகளின் முடிவு இறுதிவரை குழப்பமானதாகவே கூறப்பட்டது. இறுதியில் ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தார் என கூறி  தமிழ்தேசிய கூட்டமைப்பு டலஸ்அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்ததது. எனினும் கூட்டமைப்பில் சில எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ரகசியமாக வாக்களித்ததாக கூறப்பட்டது. மேலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தலை புறக்கணித்ததது. எனினும் சி.வி.விக்கினேஸ்வரன் தேர்தலுக்கு முதல்நாள் இரவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சாக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

யாரும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சக்களுக்குரியது. இந்தப் பெருமையை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியாது. புலிகளின் தமிழ் தேசியம் சிங்கள தேசியமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கள தேசியத்தின் தலைவராக ராஜபக்சாக்கள் இருப்பார்கள். அது வரலாறாகின்போன உண்மை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் போராட்டங்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இது உலக போராட்ட வரலாற்றிலேயே முக்கியமானது. அப்படி இருந்தும் இலங்கை இராணுவம் அரசியலில் தலையீடு செய்யவும் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றவும் இல்லை. இன்னமும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது. ராஜபக்சாக்களைக் காப்பாற்றியது கூட இராணுவத் தலைமையே.

அரகலியாக்களின் போராட்டத்தை தடுக்க கோட்டபாயா ராஜபக்ச கட்டளை வழங்கி இருந்தால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆட்சியை சிலவேளை தக்க வைத்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சிங்கள தேசியத்தின் மீதான பிடி தளர்ந்த்து இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமைக்கு ஆபத்து வருகின்ற போது தங்கள் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயதங்களை திருப்பினர். மக்களையே மண்மூட்டையாகப் பாவித்தனர். ஆனால் கோட்டபாய ராஜபக்ச தான் தப்பி ஓடுகின்ற போது கூட அரகலியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. வலிந்து படைபலத்தினூடாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சிக்கவில்லை. மீண்டும் தேர்தல் மேடைக்கு வரும் நம்பிக்கையோடு தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எண்பதுகளுக்கு பிற்பாடு இலங்கையில் அபிவிருத்திக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது ராஜபக்சக்களின் காலத்திலேயே. வறுமை ஆறு வீதத்திற்கு குறைக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. நாடு பூராவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று வடக்கில் மண் வீடுகள் கொட்டில்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

விலை வீக்கத்தை குறைக்க வரியைக் கூட்ட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் ஒரு எடுகோள். பிரித்தானியாவிலும் விலைவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிரித்தானிய ஆளும்கட்சியின் தலைமைப் பதவியை வெல்லப் போவவராகக் கருதப்படும் லிஸ் ரஸ்ட் வரியைக் குறைப்பேன் என்று உறுதியாக அறிவித்து பலத்த ஆதரவையும் பெற்றுள்ளார். ஆனால் பிரித்தானியாவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி இல்லை. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவும் வரியைக் குறைத்துக் கொண்டார். அவர் வரிக்குறைப்புச் செய்தது கோவிட்டுக்கு முன்னைய காலப்பகுதியில். வரியைக் குறைத்தால் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவருடைய கணக்கு. ஆனால் துரதிஸ்ட வசமாக வரிக்குறைப்பைத் தொடர்ந்து கோவிட் பரவியது. நாடு முடக்கப்பட்டது. முதலீடுகள் உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. வரிமூலம் திறைசேரிக்கு வரவேண்டிய வருமானம் ஸ்தம்பித்தது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சென்றது.

கோவிட் பாரிய நோய்ப் பரம்பல் மிகத் தீவிரமாக பரவி வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. செல்வந்த நாடான அமெரிக்காவிலேயே இன்றைக்கும் நூற்றுக்கணக்காணவர்கள் மரணித்துக்கொண்டு தான் உள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அயல்நாடான இந்தியாவில் 5 மில்லியன் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஆனால் பொருளாதாரத்தை பற்றி எண்ணாமல் உயிர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகக் கடுமையான முடக்கத்தை கொண்டு வந்தபடியால் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு பொருளாதார ரீதியாக பெரும் விலையைக் கொடுத்தது. நாட்டின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 13 வீதத்தை ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறை ஸ்தம்பித்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இன்மையால் அசேதனப் பசளை இறக்குமதியை திடிரென நிறுத்தியதால் சேதனப்பசளைக்கு மாறும்படி அரசு அறிவித்தது. கோட்டபாயாவின் இந்த முடிவு நீண்ட கால நோக்கில் மிகுந்த நன்மையை ஏற்படுத்துவதாக இருந்த போதும் உடனடியாக நாட்டின் உணவு உற்பத்தியில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறையான பெரும்தோட்டத் துறையிலும் பாரிய வீழ்ச்சியைக் கொடுத்தது. அரசு சேதனப் பசளைப் பாவனையை நிரந்தரமான ஒரு மாற்றமாக அறிவிக்காமல் நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஒரு உபாயமாகவே பயன்படுத்தியது. அதனால் சிறந்த ஒரு கொள்கைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல் போனது.

கோட்டபாயாவின் எரிபொருள் கொள்கையும் குறிப்பிடத்தக்கது. 2030இல் இலங்கையை 60 வீதம் இயற்கையூடாக பெறக்கூடிய காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து டிசல் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை குறைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாட்டின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய அரசியல் பலம் ராஜபக்சக்களிடம் மட்டுமே இன்றும் உள்ளது.
ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது:

முற்றிலும் ஜனநாயக அரசியல் அணுகுமுறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானியாவிலேயே முழுமையான வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்சி ஆதரவாளர்களிடையே மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஜெரிமி கோபின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்த போதும் ஜனநாயகத்தின் பெயரில் அவர் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார், அன்ரி செமற்றிசம் என்ற புனையப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய கட்சியின் உறுப்புரிமையே பறிக்க முயற்சிக்கப்பட்டது. அன்ரி செமற்றிசம் என்பது நாசிக்களினால் யுதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறுப்பது. ஆனால் பாலஸ்தீனியர்களின் இன்றைய நிலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசினால் அதனை அன்ரி செமற்றிசம் ஆக்கி, ஜனநாயக விரோத மூலாம்பூசி, முதலாளித்துவ சக்திகள் முற்போக்கு சக்திகளை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்களுக்கு முட்டையில் மயிர்பிடுங்கும் தீவிர இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். இவர்கள் வலதுசாரிகளுடன் சேர்ந்த பிரிக்ஸிற்றையும் ஆதரித்தனர்.

அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் காவலனாகக் காட்டிக்கொண்டு கறுப்பினத்தவர்களை காலால் நெரித்தும் தெருநாய்களைப் போல் சுட்டும் கொல்கின்றனர். தன்னியக்க துப்பாக்கிகளை விளையாட்டுப் பொருட்களாக விற்கும் அமெரிக்காவில் குழந்தைகள் பாடசாலைகளிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அதற்கு அமெரிக்க ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அமெரிக்க ஜனநாயகம் தடுக்கின்றது. அவர்களைக் கொலைகாரர் என்று முத்திரை குத்துகிறது. இந்த ஜனநாயகத்தை ஈராக்கிற்கு, லிபியாவுக்கு, சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி அந்நாடுகளைச் சீரழித்தனர். தற்போது அமெரிக்க ஜனநாயக ஏற்றுமதி இலங்கையில் மையம் கொண்டுள்ளது.

அமெரிக்க சார்பு ஊடகங்களின் வர்ணிப்பின் படி: இலங்கை மக்களுக்கு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் இல்லையாம். அதனால் ஊழலாம். பொருளாதார நெருக்கடியாம். இலங்கை பொருளாதார நெருக்கடி அமெரிக்க சார்பு ஊடகங்களை கண்கலங்க வைத்தது. மக்கள் வறுமைக்குள் வாடுவதாக, மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுவதாக இந்த ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது. இடதுசாரி லிபரல்களையும் நீச்சல்குளத்தோடு வாழும் மனித உரிமைச் சட்டத்தரணிகளையும் கொண்டு வந்து ஐஎம்எப் இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்று புலம்புகின்றனர். ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது. இது தான் சர்வதேசத்தில் இலங்கையின் நிலை.