15

15

சீனாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு தாய்வான் பயணம் !

தாய்வானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனாவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தாய்வான் சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தாய்வானை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் எல்லையில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிவதற்குள், பெலோசியை தொடர்ந்து 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு நேற்று தாய்வானுக்கு சென்றது. தைபே நகரில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில், அமெரிக்க அரசு விமானம் நேற்றிரவு தரையிறங்கும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி பதவி நீக்கம் செய்யப்பட்டு  ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி போராடுவோர் மீது கடுமையான இராணுவபலம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாது இருக்கும் நிலையில் இராணுவ ஆதிக்கம் இன்னும் அங்கு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.

அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.