19

19

அமெரிக்க கிரீன் கார்ட் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள கோட்டாபாய ராஜபக்ச !

பதவி விலகக் கோரி பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தெரிய வருகின்றது.

அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கிரீன் கார்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது கொழும்பில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் மேலதிக ஆவணங்களை சமர்ப்பித்து அதனை முன்னெடுத்து செல்வதாக கூறப்படுகின்றது.

தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டலில் இருக்கும்
முன்னாள் ஜனாதிபதி, நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்குவதற்கான தனது ஆரம்ப திட்டத்தை இரத்து செய்துவிட்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதலி இன்னுமொருவருடன் தொடர்பு – கண்காணிக்க தாயின் அபாயா அணிந்து வந்த இளைஞன் !

முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவ்விளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.

அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1000நாட்களை தொட்ட கோலியின் கடைசி சதம் – சோகத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கோலி கடந்த 3 ஆண்டுகளாக சதங்கள் அடிக்க திணறிவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை குவித்துள்ள விராட் கோலி, 3 ஆண்டுகளாக 71வது சதம் அடிக்க முடியாமல் திணறிவருகிறார். கடைசியாக 2019 நவம்பர் 23-ல் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதமடிக்கவில்லை. இன்றுடன் அவர் சதமடித்து 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. ஆயிரம் நாட்களாக கோலி ஒரு சதம் கூட அடிக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அவரது கடைசி சதத்திற்கு பிறகு அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக இந்த ஆண்டுகளில் அவர் 94 (ஆட்டமிழக்காமல்) அடித்துள்ளார். விராட் கோலியின் அடுத்த சதத்தை எதிர்பார்த்து இந்தியாவை கடந்து மற்ற நாடு கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

தமிழர் வரலாற்று மரபுரிமை யாழ்.மந்திரிமனையை புனரமைக்க உதவுங்கள் – யாழ்ப்பாண மரபுரிமை மையம் அவசர கோரிக்கை!

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர கோரிக்கையை விடுத்தனர்.

இதில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,

தற்போது எமக்குள்ள வசதி வாய்ப்பை மீள்நிர்மாணம் செய்யும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றது. மந்திரிமனையை மீள்நிர்மாணம் செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற தொல்லியல் திணைக்களம் எங்களுக்கு அனுசரணை தந்திருக்கின்றது. இந்த பணியை செய்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றது. அந்தத் தடையை தாண்டி தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு அதனை செய்யவுள்ளோம்.

மரபுரிமை சின்னங்களினுடைய நில உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். நில உரிமையாளர்கள் மரபுரிமை சின்னங்களை அழித்துவிட்டு வேறு பணியை செய்ய முடியாது. மரபுரிமை சின்னங்களினுடைய நிலங்களை. அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கோ எங்களுக்கு தந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

புனரமைக்க வேண்டிய முந்நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச அனுமதியோடு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிதியை பெறுவதற்கு முயல்வதோடு தனவந்தர்கள் இவ்வாறான பணிகளுக்கு உதவமுன்வர வேண்டும். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் இதில் பங்கேற்று கைகொடுக்க வேண்டும் -என்றார்.

ஊட சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், மந்திரிமனை அமைந்துள்ள நிலத்தை கொள்வனவு செய்து முற்று முழுதாக மீள்நிர்மாணம் செய்வதாக இருந்தால் இலங்கை ரூபாய் 07 கோடி  செலவாகுமென மதிப்பிட்டுள்ளோம். மந்திரிமனை இடிந்துவிழாதவாறு உடனடியாக அதனை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு 5 மில்லியன் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிட்டுள்ளோம். செல்வந்தர்கள் மரபுரிமைச் சின்னங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இந்தப் பணியில் கைகோர்க்கவேண்டும்.

செல்வந்தர்களிடமும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகளிடம் அமைப்புகளிடம் நாங்கள் மன்றாட்டமாக கேட்பது இந்த வேலை திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க உள்ளோம். உங்களால் இயன்ற நிதி உதவிகளை விரைவாக எமக்கு தந்தால் அவற்றை செய்து கொள்ள முடியும் என்றார்.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மையத்தின் பதிப்பாசிரியர் வ.பார்த்திபன், மையத்தின் உறுப்பினரும் யாழ் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்கிற அமைப்பு கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறைவடையும் ரஷ்ய சனத்தொகை – 10பிள்ளைகளை பெறும் தாய்மாருக்கு ரொக்கப்பரிசு என அறிவித்த புடின் !

ரஷ்ய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின்  கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள்  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார்.

இந்த உத்தரவு புதிதல்ல. இரண்டாம் உலகப்போரின்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 1944-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இது. பனிப்போரைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியன் உடைந்தபின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை எடுத்து தூசி தட்டி மீண்டும் புதின் அமல்படுத்தி உள்ளார். ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் 1990-களில் இருந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2000-ம் ஆண்டு ரஷிய ஜனாதிபதியாக விளாடிமிர் புடின்  பதவி ஏற்ற பின்னர் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது.

மக்கள் தொகையை பெருக்குவதற்கு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 2018-ம் ஆண்டு மக்கள் தொகை 14.7 கோடியாக இருந்தது. இது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை சேர்த்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இணைப்பு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத நிலையில், 85 ஆயிரம் குறைந்தது. 2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று, உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம். இந்த நிலையில்தான் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து ரொக்கப்பரிசு வழங்கும் சோவியத் கால திட்டத்தை மறுபடியும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிபொருட்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது !

பளை‌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (18) அன்று வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது 910கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல நிலையில் மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபரை கைது செய்த பளை பொலிசார் இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் தொந்தரவா..? – அறிவியுங்கள் 1929 என்ற இலக்கத்திற்கு !

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.

இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அத்தியாவசியமானது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அத்தியாவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Economist சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில், ஸ்ரீலங்கா விமான சேவையைத் தவிர, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் டெலிகொம் போன்ற நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 40 வருடங்களாக களத்தில் இருப்பவர்களுடன் கலந்துரையாடி புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து வைப்பதாகத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைப் பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை எனவும், தனக்கு மக்கள்தான் முக்கியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024-2025 இல் நாடு பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் . 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் இலங்கையர்களுக்கு கடினமானதாக இருக்கும் எனவும், ஆனால் இந்த வருடத்தின் இறுதிக்குள் நிலைமை சீராகும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதில் மீண்டும் வரிகளை அதிகரிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக அமெரிக்க குடியுரிமையையே துறந்தவர் கோட்டாபாய – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இதுவரை எந்த அறிவித்தலினையும் வெளியிடவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இதுவரை எந்த அறிவித்தலினையும் வெளியிடவில்லை . அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பார் என தாம் நம்பவில்லை. இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கிடைக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து இந்த நாட்டிற்கு வந்து மக்களுக்காக பணியாற்றினார்.  எனவே அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்க முடியாது. இது அவரது மனித உரிமையை மீறுகின்ற செயல்.

எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோர் இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது தங்களை விட அவர்களுக்கு இலகுவானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் விபச்சார விடுதி முற்றுகை !

வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்ததால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.