12

12

“ஒரே நாடு, ஒரே சட்டம்.” செயலணியின் அறிக்கை நடைமுறைக்கு வராது என ரணில் வாக்குறுதி !

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் .

ஜனாதிபதி செயலகத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார்.

கலந்துரையாடலின் பின் கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,

“முன்னாள் ஜனாதிபதியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவரை தலைவராகக் கொண்டு, அவருக்கு விருப்பமான முறையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆவணத்தை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது, அவர் அதற்கு உடன்பட்டார்.

அது மாத்திரமின்றி, இந்த நாட்டில் பொருளாதாரம் சீரழிந்தமைக்கு இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கியமையே பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசு, இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்டே ஆட்சியை அமைத்தது.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல் தடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம்.

எதிர்காலத்தில், சர்வகட்சிகளையும் இணைத்து அரசு முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டத்திற்கு, எமது கட்சியின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி வேண்டிய போது, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்காக நாட்டு நலனை முன்னிறுத்தி, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என நாம் உறுதியளித்தோம் என்று கூறினார்.

“எந்த திட்டமும் இல்லாமல் ரணிலை இந்த தேசபக்தர்கள் ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.” – மரிக்கார் விசனம் !

ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதால் மட்டும் நிலையான அரசை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று கூட தெரியாமல் ஜனாதிபதியை கொண்டு வர வாக்களித்தனர். இப்போது தான் ஜனாதிபதியிடம் சென்று கேட்கின்றனர் வேலைத்திட்டம் இருக்கிறது என்று ? இவர்கள் தான் பெரிய தேசபக்தர்கள்.

தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு, புடவைகளுக்கு பின்னால் இருக்கும் துரோகிகள் இவர்கள். இப்போது அமைச்சர் பதவியைப் பெற வெளியே வருகிறார்கள். இந்த அனைத்து கட்சி புரளியை நாங்கள் அம்பலப்படுத்துவேம். இந்த சர்வகட்சி விவகாரம் அமைச்சர் பதவி பெறும் ஊழலாக இருக்க முடியாது. நிலையான அரசு அமைந்தால், ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் சிவில் உரிமைகள் இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பேணப்பட வேண்டும்.
மேலும் ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும். இல்லையேல் அனைவரும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும் அது ஸ்திரமான அரசாங்கமாக இருக்காது” என மரிக்கார் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் எங்களிடம் வாருங்கள்.”- தமிழர் விடுதலைக் கூட்டணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

நேற்று ( வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கின்றது. இதனை நான் கூறவில்லை அண்மை காலங்களில் இடம் பெற்ற தேர்தல் முடிவுகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.

தமிழ் மக்களுக்காக உண்மையை உரத்து கூறி பண பெட்டிகளுக்கு விலை போகாத தந்தை செல்வாவினால் வழிநடத்தப்பட்ட பழம்பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதை யாரும் மறக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தாமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு விடையங்களை தாமே நிறைவேற்றப்போகிறோம் எனக் கூறிவரும் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மூன்று இலட்சம் பேர் வன்னி யுத்த பூமியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறியவன் நானே. இறுதி யுத்தத்தில் உயிர் சேதங்கள் ஏற்படப் போகின்றது என தெரிந்தும் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்தபோது எவரும் முன்வரவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெசில் ராஜபக்சவை சந்திக்க சென்ற போது ஆனந்த சங்கரி சொல்லித்தான் எமக்கு மூன்று இலட்சம் பேர் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்ததாக கூறினார்.

பசில் ராஜபக்ச இப்போதும் இலங்கையில் தான் இருக்கிறார் அவர் அவ்வாறு சொல்லவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பசில் ராஜபக்சவை சந்தித்தவர்கள் கூறுவார்கள் ஆயின் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைப் போன்று குடுவிக்கவில்லை, பணப்பெட்டி வாங்கவில்லை, கொலை செய்யவில்லை.

எனக்கு ஒரு பணப்பெட்டி கிடைத்தது அதுவும் நான் செய்த பணிக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அதனை வழங்கியது அதுவே எனக்கு கிடைத்த பணப்படியாகும்.

ஆகவே பணத்துக்காக பதவிக்காக தமிழ் மக்களை என்றும் நான் விற்றதில்லை அவ்வாறு ஆசை இருந்தவனாக இருந்திருந்தால் இரண்டு தடவைகள் தேசியப் பட்டியல் மூலம் மாவை சேனாதிராயாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி இருக்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வௌிநாட்டு யுவதி மனு தாக்கல் !

இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வித நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதனை செல்லுப்படியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

“ராஜபக்ஷக்களின் குப்பை வண்டியை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டவர் தான் ரணில்.”- ஜே.வி.பி

ராஜபக்ஷக்கள் செய்தது தமது குப்பை வண்டியை ஓட்டுவதற்கு ஒருவரை நியமித்ததும், சாரதியின் வகுப்பு தோழரை பிரதமராக நியமிப்பதும்தான் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் நேற்று (11) தெரிவித்தார்.

 

புதிய அமைச்சரவை பழைய திருடர்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜே.வி.பி எம்.பி., இந்த குப்பை வண்டியை தள்ளுவதற்கே சர்வகட்சி அரசாங்கம் என்ற புதிய அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தது, மத்திய வங்கியை கொள்ளையடித்து எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு நாட்டை விற்க முயன்ற ரணில் விக்கிரமசிங்க மறுத்ததால் தான். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை கூட அவரால் தடுக்க முடியவில்லை.

ஜனாதிபதி விக்ரமசிங்க தனது திறமைகளை உலகிற்கு காட்டுவதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கினார் என்றும் இந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக ஏனையோருக்கு கடிதங்கள் கிடைக்கும் எனவும் ஆனால் தம்மால்  கொள்ளைக்காரர்களுடன் அமர்ந்து ஆட்சி செய்ய முடியாது எனவும் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்துக்கான நிதி அதிகரிப்பு !

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதேவேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஓகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 7,920 பாடசாலைகளில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதமராக தமிழர் அல்லது முஸ்லீம்..? – ஏற்க பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரன !

இன,மத, சாதீய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நடந்த போராட்டம் நாட்டின் அரச தலைவரை மாற்றியது. அந்த போராட்டத்தில் நன்மையான பல விடயங்கள் இருந்தன.

21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தும் வகையில் இந்த நாட்டில் இன, மத, சாதீய பேதங்கள் இன்றி மக்கள் ஒன்றிணைந்திருந்தமை போராட்டத்தின் பிரதான அடையாளம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சி.

நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கி செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் இன,மத, சாதிய வாதங்களுடன் முன்நோக்கி செல்ல முடியாது. இன,மத, சாதி வேறுபாடுகள் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டுமாயின் நாம் எமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குறைந்தது எமது நாட்டின் பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமரும் போது மன மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். எனவும் தெரிவித்தார்.

……………………..

உண்மையிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரனவினுடைய வார்த்தையானது மாற்றத்தை எதிர்பார்த்து இருக்குமாயின் பிரதமர் என்ற வார்த்தைக்கு மேலதிகமாக தமிழரோ – முஸ்லீமோ ஜனாதிபதியானால் என்ற வார்த்தையையும் சேர்த்திருக்க முடியம். ஆனால் அவருடைய ஆதிக்க மனோநிலை அந்த வார்த்தையை சேர்க்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை. ஆளும் வர்க்கம் சாதாரணமாக கூட சிறுபான்மை மக்களை இணைத்து நாம் இலங்கையர் என்ற கோணத்தில் நகர்வோம் என்ற கருத்தை என்றைக்கு இலங்கையின் அரசியல்தலைவர்கள் நினைக்கிறார்களோ அன்றைக்கே நாட்டின் நிலை மாறும்.

எனது கோரிக்கைகளுக்கு ரணில் ஒத்துக்கொண்டதன் பின்பே நான் வாக்களித்தேன் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பிற்கு முன்னர் அவர் இந்த உறுதிமொழியை தனக்கு வழங்கியிருந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தனது கோரிக்கையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் வினவியபோது, இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பணிக்காக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா.கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மிகவும் கடினமாக தீர்மானங்கள் முன்வைக்கப்படும் என்பதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவற்றுக்கு தீர்வை வழங்குவர் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கிழக்கு சீனாவில் விலங்குகளிடமிருந்து பரவும் புதிய வகை வைரஸ் !

கிழக்கு சீனாவில் பரவிவரும் புதிய வகை வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Novel zoonotic Langya virus identified in China

கிழக்கு சீனாவில் பரவிவரும் LayV (The novel Langya henipavirus) என்ற புதிய வகை வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

LayV வைரஸ் சீனாவின் Shandong மற்றும் Henan மாகாணங்களில் பரவியுள்ளது

காய்ச்சல், சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

LayV தொற்று ஆபத்தானது அல்லவென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தொற்று தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்டாபாயவை துரத்தும் போர்க்குற்றம் – சிங்கப்பூரிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் என்ன..?

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அவரது விசா நேற்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.