தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சக்களின் ஆட்சியே என குற்றஞ்சாட்டப்பட்டு காலி முகத்திடலில் ஆரம்பித்த போராட்டத்தால் ராஸபக்சக்களின் ஆட்சி கவிழ்க்கப்படவும் இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் காரணமானது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் நோ டீல் கம என ரணிலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம் மௌனித்துப்போனதுடன் – அடுத்தடுத்து கோட்டா கோ கம போராட்டத்தின் முக்கியமான போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு பக்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான இடதுசாரிகளின் போராட்டம் தான் கோட்டாகோகம என பேசப்பட்ட நிலையில் போராட்டத்துக்கு முன்னணியில் நின்ற செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைத்த அதிகப்படியான நிதியுதவி, ரணில் பதவியேற்றதும் தொடர்ந்து பேணப்பட்ட போராட்டக்காரர்களின் மௌனம் என பல விடயங்கள் போராட்டம் ரணிலுக்கு சார்பான மேற்குலக நாடுகளால் நகர்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 09.08.2022 காலி முகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியிருந்த வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்திருந்தார்.
அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
போராட்டத்தில் எந்தவொரு வலுவான கோரிக்கைகளையும் இந்த போராட்டக்காரரர்கள் முன்வைக்கவில்லை. பாரிய மக்கள் போராட்டம் என கூறப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான வெற்றிகள் எவையுமே கிடைக்கவில்லை. பொருளாதார மீட்பையே வலியுறுத்தியதாக இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை இன்னமும் அதளபாதாளத்திலேயே வீழ்ந்து போயுள்ளது. சுருக்கமாக சொல்வதாயின் சமூக வலைத்தளங்களில் இயங்குநிலையில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமும் – அரசியல் லாபமீட்ட முனைந்த சில பெரியவர்களுமாக சேர்ந்து செய்த இந்த போராட்டம் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல எந்த வெற்றியும் தராது முடிந்து போயுள்ளது.
இந்த போராட்டங்களின் ஒரே விளைவு மக்களின் ஆணையால் வழங்கப்படாத ரணிலின் நீண்ட கால ஜனாதிபதி இருக்கையை அவர் பிடித்துக்கொண்டது மட்டுமே. வேறு எந்த மாற்றத்தையுமோ – சிங்களவர்களின் ஆதிக்க மனோநிலை சார்ந்த எந்த மாற்றத்தையுமோ இந்த போராட்டங்கள் வழங்கவில்லை என்பதே உண்மை.