தேசம்நெற்றில் அமெரிக்க – ஐஎம்எப் க்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரையை: “ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?” சமூகவலைத்தளமான பேஸ்புக் முடக்கி உள்ளது. யூலை 30இல் இல் தேசம்நெற்றில் வெளியான கட்டுரை, அதனை எழுதிய கட்டுரையாளரால் அவருடைய முகநூல் தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் படத்தோடு வெளியான கட்டுரையை பேஸ்புக் முடக்கியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். https://www.thesamnet.co.uk//?p=87861
அமெரிக்க ஐஎம்எப் இன் மிலேச்சத்தனமான திறந்த பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து இருந்த இக்கட்டுரை, காலிமுகத்திடல் போராட்டத்தை அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டதுடன் பாகிஸ்தானில் இம்ரான் கானை ஆட்சித் தலைமையில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தி இருந்ததையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது. கோட்டாபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தப்பட்டதும், இலங்கையில் அமெரிக்க – ஐஎம்எப் நலன்களைப் பாதுகாக்கவே என்பதையும் அக்கட்டுரை தெளிவுபடுத்தி இருந்தது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் – முகநூல் கருத்தியல் சர்வதிகாரத்தை நிறுவுவதில் பெரும்பிரயத்தனம் செய்து வருகின்றது. இவ்வாறு கட்டுரைகள் ஆக்கங்கள் முடக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. பல ஆயிரக்கணக்கானோரின் லட்சக்கணக்கானோரின் முகநூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகள், தொடர்கொலைகள், மற்றும் குற்றச்செயல்களுக்காகவே குறிப்பாக அறியப்பட்ட படங்களை வைத்து பதிவுகளை நீக்கி வந்த முகநூல் தற்போது பதிவுகளின் உள்ளடக்கத்தையும் அதன் ஆழமான கருத்தியலையும் ஆராய்ந்து அதற்கேற்ப பதிவுகளை நீக்கி வருகின்றது. இதன் மூலம் கருத்தியல் சர்வதிகாரம் ஒன்றை நிறுவ முயல்கின்றது. இதில் தேசம்நெற் போன்ற சின்னஞ்சிறு இணையங்கள் மட்டுமல்ல முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம் கூட மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழக்கின்றார். எந்த பேஸ்புக் அவரை ஜனாதிபதி ஆக்கியதோ அதே பேஸ்புக் இன்று அவரை ஓரம்கட்ட முயற்சிக்கின்றது.
உலகம் தட்டை என்றும் சூரியன் தான் பூமியைச் சுத்துகிறது என்று முகநூல் தீர்மானித்தால் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கப்பட்டுவிடும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவத்தின் அதீத உற்பத்தியும் ஆதிக்கமும் (mass production) எவ்வளவு ஆபத்தானதோ அதனைக்காட்டிலும் ஆபத்தானது சமூகவலைத்தளங்களின் பெரும் தொடர்பாடல் (mass communication). உலகத்துக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ தொழில்நுட்பம் வழமைபோல் உலகை தன்னுடைய சர்வதிகாரத்திற்குள் கொண்டுவந்து இதுவரை பொருளாதார அடிமைகளாக இருப்பவர்களை கருத்தியல் அடிமைகாகவும் என்றென்றைக்கும் கட்டுக்களை உடைக்க முடியாதவர்களாகவும் ஆக்குகின்றது.
BC
முகநூலின் இந்த செயல் கண்டிக்கபட வேண்டியது.