01

01

மூடப்படும் நிலையில் இலங்கை ஆடைத்தொழிற்சாலைகள் – பறிபோகும் சர்வதேச சந்தைகள் !

பொருளாதார நெருக்கடியால் ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக வலய சேவை மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் ஆடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்மையால் தமது பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை எனவும் இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தானியங்களுடன் கருங்கடல் வழியாக புறப்பட்டது உக்ரைனின் தானியக்கப்பல் !

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க கடந்த ஜூலை 22ஆம் திகதி, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து உலக உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் புறப்பட்டது.

இந்த திட்டத்தில், உக்ரைனிய கப்பல்கள் தானியக் கப்பல்களை துறைமுக நீர் வழியாக உள்ளேயும் வெளியேயும் வழிநடத்துகின்றன.

ஏற்றுமதி நகரும் போது ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கிறது. துருக்கி – ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆயுதக் கடத்தல் குறித்த ரஷ்ய அச்சத்தைப் போக்க கப்பல்களை ஆய்வு செய்கிறது. கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் உரங்களை ரஷ்ய ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

இலங்கை வரும் சீன ஆராய்ச்சிக்கப்பல் – பதறும் இந்தியா !

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 750 கிலோமீட்டருக்கும் அதிகமான வான்வழி அணுகல் கண்காணிப்பு திறனைக் கொண்டுள்ளது, எனவே இது தென்னிந்தியாவில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய அணு ஆராய்ச்சி மையங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட துறைமுகங்கள் உட்பட சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தியாவின் பல இடங்களில் இருந்து தகவல்களை சேகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டையில் தரித்திருக்கும் எனவும், முக்கியமாக எரிபொருள் உள்ளிட்ட நிரப்புதல்களுக்காக, அது துறைமுகத்தில் தரித்திருக்கும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாம் மூன்று மாதம் பொறுமையாக இருந்ததால் கோழைகள் அல்ல. இராணுவத்தை சோதிக்காதீர்கள் என்கிறார் பாதுகாப்புச் செயலாளர் !

“இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய போதேஅவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  எனினும் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபவோருக்கு எதிராக அதிக பட்ச பலம் பிரயோகிக்கப்படும்.

தற்போதைய நிலைமையை நானும் பாதுகாப்பு தரப்பினரும் மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்டோம்.  இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் எவரேனும் அரச சொத்துக்களுக்கு அல்லது அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டால், அவசரகால சட்ட விதிமுறைகளின் அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கோட்டாபாய இலங்கைக்குள் வருவதற்கான தருணம் இதுவல்ல.”- ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லை எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க  இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வேகமாக சுழல ஆரம்பித்துள்ள பூமி – ஏற்படப்போகும் புதிய சிக்கல் !

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் திகதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது. அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் திகதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

வரும் நாட்களில் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும், அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்ட்ரஸ்டிங் என்ஜினீயரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது? என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. பூமியின் மையப்பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

பூமியின் சுழலும் வேகம் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் விகிதத்துக்கும், கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம். இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலை தொடர்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடிகாரம் 23:59:59-ல் இருந்து 23:59:60 வந்த பின்னர் தான் 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாக சுற்றுவதால் லீப் வினாடிகள் ஏற்படும் பட்சத்தில் அது தொலை தொடர்பு புரோகிராம்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

“ரணில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்.”- பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

“கோட்டாபாய இலங்கை வந்தால் முழுப்பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.”- பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வர விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அவர் வந்தால் பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்நாட்டின் குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு, முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர்ந்து செயற்பட விரும்பினால் அதனை  வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்தவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி என்ற நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக துபாய் நோக்கி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.