20

20

“ரணில் ராஜபக்ஸ” ஒரு சர்வதிகாரி – ஹிருணிகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் மேலும் தெரிவித்தார்.

“ரணில் ராஜபக்ஸ” ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் ஹிருணிகா மேலும் கூறினார்.

மக்களே அதிகமாக குடியுங்கள் – ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு – காரணம் என்ன..?

ஜப்பானில் கொரோனா பெருந்தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால், அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு தேசிய வரி கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-ம் ஆண்டில் குடிமக்கள் குறைந்த அளவே மதுபானம் குடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளது.

 

கடந்த 1995-ம் ஆண்டில் குடிமக்கள் குடித்த மதுபானம் நூறு லிட்டர் என்ற அளவில் இருந்தது. ஆனால், இது 75 லிட்டராக குறைந்துள்ளது என ஒப்பீட்டு அளவையும் தெரிவித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், ஜப்பானில் மக்கள் தொகை விகிதமும் குறைந்துள்ளது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும் நோக்குடனும் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம் மேம்படுவதற்காகவும் அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக சேக் விவா என்ற பெயரில் ஜப்பானின் தேசிய வரி கழகம் பிரசாரம் ஒன்றை தொடங்கி உள்ளது. மதுபானங்களின் தேவையை அதிகரிக்க உதவி புரியும் யுக்திகளுடன் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரும்படியும் அந்த கழகம் தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்று நடத்தப்படும்.

இதில், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். அவர்கள் மதுபானம் குடிப்பதற்கான வரவேற்கத்தக்க புதிய யுக்திகளை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சேக், சோச்சு, பீர், விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் தேவையை அதிகரிக்க செய்வது மற்றும் வெவ்வேறு சுவைகளை பற்றியும், புதிய வாழ்வியல் வழிகளை பற்றியும் தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவோர் செப்டம்பர் 27-ந்தேதி தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு அடுத்த சுற்று அக்டோபரில் நடைபெறும். அதன் முடிவுகள் டோக்கியோ நகரில் வருகிற நவம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் பனிப்பாறைகள் 50 வருடங்களில் காணாமல் போய் விடும் !

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள 3 ஆயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான “ஷ்னீஃபெர்னர்”, சமீப ஆண்டுகளாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த பனிப்பாறை தனது பெரும்பான்மையான பகுதியை இழந்துள்ளது. இந்த ஆண்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்தியுள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது ஆல்பைன் பனிப்பாறைகள் உருகுவதை கொஞ்சம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தது ஐ.நா அதிகாரிகள் குழு !

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் – கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (19) சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும்

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மீண்டும் அமைச்சர்களாக ஜோன்ஸ்டன் – நாமல் – பவித்ரா !

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கத் தகுந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக ‘மவ்பிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சர்வ கட்சி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்றுவது கட்சியின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, காஞ்சனா விஜேசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் பேரவை அறிவுறுத்தல் !

போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை பிரயோகத்தை நிறுத்துமாறு சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்த நாட்டில் பொலிஸாருக்கு கண்ணீர் புகை விற்பனை மேற்கத்திய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நாட்டில் நடக்கும் போராட்டங்களை அடக்க, குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதால், பல போராட்டக்காரர்கள், கண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் – சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் CID விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் சகோதரியிடம் சிஐடி விசாரணை!

வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய துலாஞ்சலி பிரேமதாச, சம்பவம் இடம்பெற்ற போது அப்போதைய பிரதமரின் வீட்டிற்கு அருகில் தான் இருந்ததாகவும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக வாக்குமூலமொன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே தாம் வந்ததாகவும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குங்கள்“ – பசில் ராஜபக்ச கோரிக்கை !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்தினார். இருப்பினும் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அவதானம் செலுத்த வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியறுத்தினார்.

மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு !

அம்பாறை மாவட்டத்தில் தனித் தமிழர் வாழும் ,பெரிய நிலப்பரப்புடன் கூடிய திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

 

இந்த பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு வேலைக்கு என்று கடந்த ஏழு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட பாரிய நிறுவனம் ( தம்சிலா நிறுவனம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் போது, அப்பகுதி மக்கள் பாரிய எதிர்ப்பலைகளை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதன் காரணமாக அவை நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் ,இன்று இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து அரசாங்கத்துக்கு வருவாய் சேர்க்கும் நோக்குடன் மீண்டும் அகழ்வு பணி ஆரம்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் தம்பட்டை தொடக்கம் உமிரி வரைக்கும் இந்த நிகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இருந்தது.

இருந்தாலும், சனச்செறிவு கூடிய பிரதேசங்களான தம்பட்டை தொடக்கம் விநாயகபுரம் போன்ற பகுதிகளில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ள முடியாது என்று கூறப்பட்ட காரணத்தினால், தற்போது விநாயகபுரம் கோரைக்களப்பு தொடக்கம் உமிரி வரைக்குமான சுமார் 4 கிலோ மீட்டர் தூர கடலோர பகுதி இல்மனைட் அகழ்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும், பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமே இருக்கின்றார்கள் .அரசஅதிகாரிகளும் அதற்கான பதில்களை தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள். இதனை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் அதிகார சபையும், கடலோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களமும் அகழ்விற்கு ஓரளவு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது .

ஆனால் ,இந்த அறிக்கையில் மக்களுக்கு   நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது . அரசு சார்ந்து இந்த அறிக்கை வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். இன்னும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் இதற்கு எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை.

இதன் காரணமாக நடவடிக்கை தடைப்பட்டு வருகின்றது .அவர்களது ஒப்பமும் பெறப்பட்டால் மறுகணமே இவ் அகழ்வு ஆரம்பிக்கப்படலாம் என்று தெரியவருகிறது. உண்மையிலேயே ,இவ் அகழ்வு இடம்பெற்றால் கோரைக்களப்பு, விநாயகபுரம், பாலக்குடா ,உமிரி, சங்கமன்கிராமம், தாண்டியடி, கோமாரி ,மணல்சேனை, செல்வபுரம் ஆகிய  கிராமங்களின் குடும்பங்கள்   இந்த இல்மனைட் அகழ்வால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்

இது தடுத்து நிறுத்த படாவிட்டால் விரைவில் பாரிய  போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக மக்கள் செயற்பாட்டாளர்கள்  தெரிவிக்கின்றனர் .

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் கடனாளி தான் – எவ்வளவு கடன் தெரியுமா ?

 

இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.

இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.