வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் வேலை செய்யாமல் பணம் வழங்கத் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று (21) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளது. எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இப்போது நமக்கு இருக்கும் ஒரே உதவி நாம்தான். வெளியாட்களின் உதவி இப்போது முடிந்துவிட்டது. இந்தியா எங்களுக்கு உதவி செய்துள்ளது. உலக வங்கி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு உதவி செய்துள்ளன. இந்த சலுகைகளுடன், விவசாயத்துடன் நமது விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம்.
இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகையதொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை. அந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். கடந்த வருடத்தை விட நமது பொருளாதாரம் 8% சதவீதத்தால் குறையும். இது வேகமாக இடம்பெறுகிறது. அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டிவரும். இவ்வாறு நிகழும்போது, நாம் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும்.
நாம் இந்தப் பெரும்போகத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அப்போது இந்தப் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
இப்பணியில் குறிப்பாக உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன குறை இருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பதை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.
கீழ்மட்டத்தில் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சுமார் 09 அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களது கிராம உத்தியோகத்தர் பிரிவைப் பிரித்து ஒவ்வொருவரும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாங்கள் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். என்ன ஆனாலும் இலவசமாக சாப்பிட முடியாது, இந்த நாட்டை முன்னேற்றா விட்டால் நானும் வெளியேற வேண்டும். எனவே முதலில் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.