29

29

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் நாடுகளில் கடுமையாக அதிகரிக்கும் பணவீக்கம் !

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் எரிசக்திகளின் விலை 38 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 34.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா பண வீக்கம் அமெரிக்க ஆண்டு பணவீக்கத்திலும் எதிரொலித்துள்ளது. 1981க்கு அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மாதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரஷிய உகிரைன் போர், ரஷியாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு தடங்களாக உள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்கு ரஷியா உக்ரைன் போர் மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பண வீக்கத்தால் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களில் விலை உயர்ந்துள்ளது.  ஜெர்மனி மின்சார ஆற்றலை பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவித்து வருகிறது. ஜெர்மனியின் ஐஜி மெட்டல் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 8.2 சதவீதம் உயர்த்துவதற்கு வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் இறக்குமதிக்கு ரஷியாவையே நம்பி இருக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிகரிக்கும் வெப்பம், மின்சார பயன்பாடு மற்றும் ஆட்டோமொபைல் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதை நிறுத்த முடியாமல் செய்கிறது.
இந்த பணவீக்கத்தின் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பபு – 10 பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது தமிழக அரசு !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.

இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.

குழந்தைகளின் பெயருக்கு பின்னால் தாயின் பெயர் எங்கே..? – இத்தாலியில் நடைமுறைக்கு வருகிறது புதிய சட்டம் !

இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ள நிலையில் இதில் மாற்றம் ஏறு்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த முடிவுக்கு நாம் ஒரு பொருளைத்தர வேண்டும். இது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. அதை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையும், தாயும் சம பங்கு எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணியாமல் பாடசாலைக்கு வந்த மாணவிகள் – தலிபான்கள் செய்த செயல் – தொடரும் கெடுபிடி !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் பல்க் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணியாமலும், ஹிஜாப் அணிந்தும் முகத்தை மூடாமலும் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் எந்தவித விளக்கமும் கேட்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.