25

25

இலங்கைக்கு 125 மில்லியன் ரூபா அவசர உதவி !

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளில் உள்ள விநியோக பிரிவின் ஊடாக நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் பிரான்சின் ஜனாதிபதியானார் இமானுவல் மக்ரோன் !

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மக்ரோன் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மெக்ரொன் பிரான்ஸில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு! - தமிழ்வின்

இமானுவல் மக்ரோனுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் சட்டத்தரணியுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மக்ரோன், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இத்தாலிப் பிரதமர் மரியோ டிராகி, போர்த்துக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் – மரியுபோலில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா !

மரியுபோல் உருக்கு ஆலையைச் சுற்றி போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் இன்று முதல் ஒருதலைப்பட்சமாக எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல், பாதுகாப்பான தூரத்திற்கு துருப்புகளை திரும்பப் பெற்று, குடிமக்கள் வெளியேறுவதை உறுதி செய்யப்படும் எனறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘பொதுமக்கள் எந்த திசையில் செல்ல விரும்புகிறார்களோ அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து மனிதாபிமான வெளியேற்றத்தைத் தொடங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை காட்டும் வகையில், உக்ரைன் தரப்பு அங்கு வெள்ளைக் கொடிகளை உயர்த்த வேண்டும். ஆலையில் உள்ளவர்களுக்கு ரேடியோ சேனல்கள் வழியாக ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்’ என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை – திண்டாடும் இலங்கை !

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 17.50 வீதத்தில் இருந்த இலங்கையின் பணவீக்கம் மிக உச்சத்தை இந்த மாதம் பதிவு செய்துள்ளது. அதற்கமைய கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 19 சதவீதத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (25) 342.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி குவைத் தினாரின் பெறுமதி 1,095.55 ரூபாவாக பதிவாகி உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பரிசுத்த பாப்பரசர் வெளியிட்டுள்ள கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தயவுசெய்து நீதிக்காக-உங்களின் மக்களிற்காக இந்த சம்பவங்களிற்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக தெளிவுபடுத்துங்கள் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டிற்கு அமைதியையும் மனச்சாட்சியையும் கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆராதனையின் போது பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதி மீது துஷ்பிரயோகம் !

நாட்டிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு ஆளான அயர்லாந்து யுவதி, மற்றொரு ஜேர்மன் நபருடன் சுற்றலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலா சென்ற போது மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அப்போது, ​​இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கேமராவில் நேரலையாக பதிவாகியுள்ளது.

அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை அண்மையில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்ததையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

படுகொலைக்கு நீதி வேண்டும் – அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் !

இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினத்தையிட்டு அவருக்கு நீதிவேண்டி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் இன்று (25) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் யூன் 21 ம் திகதி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பொதுமகன் ஒருவர் மீது அமைச்சரின் மெய்பாது துப்பாக்கி சூடு நடாத்தியதில் மாகாலிங்கம் பாலசுந்தரம் உயிரிழந்ததுடன் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினமான இன்று படுகொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரின் ஏற்பாட்டில் நினைவேந்த அமைச்சரின் வீட்டுக்கு முன்னாள் உள்ள கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு வரவேற்கு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்றது
இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், பொதுமக்கள்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னால் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றம் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிரிழந்தவரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அவரின் ஆத்மசாந்தி வேண்டி வீதிகளில் பிரயாணித்தவர்களுக்கு தாகசாந்தி வழங்கிவைத்த பின்னர் அவரின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்டு பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதேவேளை அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

“இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நினைக்கவில்லை. .”- ஐக்கிய மக்கள் சக்தி காட்டம் !

“இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுக்கின்ற நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுக்கின்ற நிலையில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர். வீதிகளில் நிலையான வீதித்தடைகளை பொருத்தியுள்ளனர். சில வீதித்தடைகளை முட்கம்பிகள் கொண்டு உருவாக்கியுள்ளனர். இதனால் மக்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். முட்கம்பி ஏதேனும் கண்களில் பட்டு இருந்தால் காலம் முழுவதும் பார்வையற்றவராகும் நிலை ஏற்படலாம்.

இப்படியான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான இயக்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. எனினும் கருத்துக்களை தெரிவிப்பது மாத்திரம் போதாது. இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

நாங்கள் ஒரு கட்சியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை. சிலர் தெரிவித்தார்கள் ஹிட்லர் போன்ற ஒரு தலைவர் தேவையென, அப்படியாயின் ஹிட்லர் போன்ற தலைவராகவா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெரும்பான்மையை இழந்தது ராஜபக்ஷ தரப்பு – கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல் !

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நகர்த்த திட்டமிட்டபோது, அவர்களுக்கு குறைந்தபட்சம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு இல்லையெனில் குறித்த பிரேரணை அரசாங்கத்திற்கு நம்பிக்கை பிரேரணையாக மாறும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால்…..; – சாணக்கியன் காட்டம் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்”மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து, நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து, இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் கடனை செலுத்துவதாக கூறி தனது குடும்பத்தின் கடன்களை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக இந்த நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரப்போகின்றது, பொருட்களுக்கான தட்டுப்பாடு வரப்போகின்றது என்று தெரிந்தும் இந்த அந்நிய செலவாணியை பயன்படுத்தி அந்த கடனை அடைப்பதற்கான காரணம் அவரின் குடும்பத்தின் வேண்டப்பட்டவருக்கே அந்த நிதியை வழங்கியதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர், இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள். நிதியே இல்லாத நாட்டுக்கு ஒரு அமைச்சர். சிங்கள அமைச்சர்களே இன்று அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார். வெட்கம், சூடு, சொறனை இருக்கும் ஒரு ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது.

சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அமைச்சு பதவிகள் வேண்டாம் என கூறும்போது, எம்மவர்கள் எதற்காக அமைச்சு பதவிகளை எடுக்கவேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் 5000 ரூபா பணத்தாளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன் காட்டி பேசியபோது நான் சுயாதீனமாக மக்களுக்காக செயற்படப்போவதாக கூறியவர் இருவாரங்கள் கழிவதற்குள் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

அப்போது நான் 5000 ரூபாய் வழங்கியது சரிதான். அமைச்சுப்பதவியும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையில் உள்ள மக்களை தங்களது தவறான வழிநடத்தல்களினால், தவறான தீர்மானங்களினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை அழித்து அடுத்தவேளைக்கு உணவில்லாத நிலையினை இந்த நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.