09

09

“ஒருபோதும் நான் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை.” – அஜித் நிவார்ட் கப்ரால்

ஏப்ரல் 18ஆம் திகதி வரை கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அத்துடன் அவரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலதிக நீதவான் அறிவித்தலை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,

ஒருபோதும் நான் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது என்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கப்போவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

தாம், எப்போதும் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை அமைதியான, கண்ணியமான மற்றும் தொழில்முறை முறையில் கையாண்டமை அனைவருக்கும் தெரியும் என்றும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏனைய ஆளுநர்களைப் போன்று பதவி விலகிய பின்னர் வெளியேறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒஸ்கார் அறிவிப்பாளரை அறைந்ததற்காக வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை !

94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஒஸ்கார் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஒஸ்கார் அகடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஒஸ்கார் விருது விழா மற்றும் பிற அகடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒஸ்கார் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது.” –  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை.” – மஹிந்த தேசப்பிரிய

மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இது ஏப்ரல் மாதம். ஏப்ரல் ஒரு 83வது கறுப்பு ஜூலை, அதே போல் 1971 மற்றும் 2019 இல் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாகும். போராளிகளே, இந்த ஏப்ரலிலும் வன்முறை, எதிர்ச் சவால், ஆணவத்தின் மூலம் அதைச் செய்ய முயல்பவர்களையெல்லாம் அகிம்சையினாலும் அன்பினாலும் தோற்கடிக்கலாம்.

எமது சகோதரர் காமினி ஏக்கநாயக்கவின் பதிவின் மேற்கோள் கீழே “மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியில் இருந்து மீள இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்த இளைஞர்கள் – திணறும் பொலிசார் ! 

கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே நேரம் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன்.” – அலிசப்ரி 

“அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன்.” என நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது.

இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உரையாற்றுவதாக தெரிவித்தார்.

மேலும் “தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுவதால், யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன்.

அதிகமான டொலர் வருவாயை உறுதி செய்வதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதே இன்றைய தேவை. ஆளும் கட்சியுடன் தொடர்ந்து ஆட்சியைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுபிப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

2020களின் முற்பகுதியில் தொற்றுநோய் நாட்டைத் தாக்கிய 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிலை பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. அமைதியான போராட்டங்கள் தீங்கு விளைவிக்கும் போது அமைதியின்மையை உருவாக்கக்கூடாது. உங்களால் சபையில் பெரும்பான்மையை காட்ட முடிந்தால் எதிர்க்கட்சியில் அமர்ந்து ஆட்சியை உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஜப்பான் பாதாள உலகத்தலைவர் அமெரிக்காவில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தனர் என்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.