10

10

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா !

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா வழங்கவுள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இணைந்து பேசிய பிரித்தானிய பிரதமர், கிராமடோர்ஸ்க் நிலையத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா தண்டனையிலிருந்து தப்பாது என்று எச்சரித்தார்.

மேலும், வீடுகளை விட்டு வெளியேறும் அகதிகள் மீது மனசாட்சியின்றி குண்டுவீச்சு உட்பட கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்தில் பிரித்தானியாவும் ஜேர்மனியும் ஒரேவிதமான திகில் மற்றும் வெறுப்பை பகிர்ந்து கொள்கின்றன என்பதை நான் அறிவேன்.

பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றமாகும். மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் கவனிக்கப்படாமல் அல்லது தண்டிக்கப்படாமல் போகாது’ என கூறினார்.

 

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு யாழ்.பல்கலைகழக பட்டதாரி கலைநீதனின் லிட்டில் சை கிட் வெளியீடு !

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.
No description available.
எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
No description available.
இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.
லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.
இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.
சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

பாகிஸ்தானில் கவிழ்க்கப்பட்டது இம்ரான்கான் அரசு – புதிய பிரதமராகிறார்

பாகிஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்களுடன் நேற்று நள்ளிரவு இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தன.

கடந்த 3-ந்திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று, சட்டசபையை நடத்திய துணை சபாநாயகர், தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். வெளிநாட்டு சக்தி தூண்டுதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசின் பலம் 164 ஆக குறைந்தது. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த 22 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி நேற்று காலை பாராளுமன்றம் பரபரப்பான சூழலில் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். சபைக்கு வந்திருந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் வரவில்லை. இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப்பை சேர்ந்த 51 எம்.பி.க்கள் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ‌ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி ஷாமக் மூத்குரேஷி பேசினார்கள்.

பின்னர் சபையை பகல் 12.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆசாத் குவைசர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால் சபை மீண்டும் கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்தார் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை இரவு 7.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நோன்பு திறப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது உடனடியாக இரவு 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு இரவு தொழுகைக்கு பிறகு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரவில் நடந்தது. அதில் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் அரங்கேறிய நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை தாங்கினார். அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினார். நள்ளிரவு 1.30 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது.

342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சியை காப்பாற்ற இம்ரான்கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவை. அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 174 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. அதே போல அதிருப்தி எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

இதன்மூலம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கி பாராளுமன்றம் உத்தரவிட்டது.

இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. சபைக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் கூறும்போது, ‘புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நாளை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டி உள்ளார். அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார். அதே வேளையில், பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தேசிய சட்டமன்ற கூட்டம் (பாராளுமன்றம்) ஏப்ரல் 11-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.