27

27

போதைப்பொருள் கடத்த முயன்ற தமிழருக்கு மரணதண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு !

43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

கடத்தல்காரருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அவரது சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம் பத்திரிகையாளர்யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட் நிலையில் சிறையில் இருந்துவந்தார்.

நீண்டகாலமாகவே அவரது வழக்கு மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்தது. ஏனெனில் அவர் ஒரு மருத்துவ நிபுணரால் IQ 69 என்று கூறப்படுகின்ற அறிவுசார் இயலாமை உடைய ஒருவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் தனது செயல்களின் தன்மையை தெளிவாக புரிந்து கொண்டே அந்தக் குற்றத்தைப் புரிந்தார் என்று என்று அரசாங்கம் கூறிவந்தது.

இந்த நிலையில், அவரது தாயாரின் கடைசி மேல்முறையீட்டை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2009 ஆம் ஆண்டில்இ நாகேந்திரன் தனது இடது தொடையில் 43 கிராம் (1.5 அவுன்ஸ்) ஹெராயினைக் கட்டிக் கொண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடக்கும்போது பிடிபட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கொண்டு பிடிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

விசாரணையின் போது, 34 வயதான அவர் முதலில் போதைப்பொருளை எடுத்துச் செல்ல வற்புறுத்தப்பட்டதாகக் கூறினார், ஆனால் பின்னர் தனக்கு பணம் தேவைப்பட்டதால் குற்றத்தைச் செய்ததாகக் கூறினார்.

விசாரனைகளின் பின்பு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், அவர் அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார்.

இறுதியில், அவர் அறிவுசார் ஊனமுற்றவர் அல்ல என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

கடந்த ஆண்டு ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

கேள்விக்குரிய குற்ற நடத்தையுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் எதிர்விளைவு நன்மைகளை எடைபோட்டு, இது ஒரு கிரிமினல் மனதின் செயல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2024 வரை தொடரவுள்ள பாரிய உணவு பற்றாக்குறை – உலக வங்கி எச்சரிக்கை !

ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது.

1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப்பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.

கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகின் பல பகுதிகளில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியாளராகவும், மசகு எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது.

பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயன்முறை சீர்குலைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை !

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிசீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மர் முன்னாள் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மியான்மரின் இராணுவத்தினர் கடந்த வருடம் பிப்ரவரி 2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சியை கொண்டு வந்தனர்.

அப்போதிருந்து, ஆங் சான் சூகிசீக்கு எதிராக பல வழக்குகள் நடத்தப்பட்டு வந்தன. 76 வயதான சூகி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவுகிறது – சீனாவில் இருந்து புதிய காய்ச்சல் !

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுகாதார ஆணையம் கூறும்போது, ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது.  ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது-. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.’ – எலான் மஸ்க்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தார். பின் டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.
டுவிட்டர் நிறுவனமும்  4,400 கோடி அமெரிக்க nlhலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்ய  சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர்.  கருத்து சுதந்திரம் என நான் குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் நான் எதிரானவன்.
ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும். இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.